தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு-நேரு
தூத்துக்குடி: நாட்டிலேயே தமிழகத்தில் தான் அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் புதிய வழிதடங்கள் தொடக்க விழா, எலக்டாரனிக் டிக்கெட் கருவி அறி்முக விழா, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், பணிமனைகள் விரிவாக்க அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடந்தன.
இதில் அமைச்சர் நேரு, ஏசி வசதி கொண்ட 5 பஸ்கள் உள்பட 13 புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்து பேசுகையில்,
கடந்த 2 ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய பஸ்கள் வாங்கிய 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவை வழக்கமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இப்போது மிக வேகமாக பாடி பில்டிங் பணிகள் நடத்தப்பட்டு 6 மாத காலத்தில் பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இன்னும் ஒரு மாத காலத்தில் 700 புதிய பஸ்கள் வாங்கப்படவுள்ளன.
கேரளாவில் ஒரு கிலோ மீட்டருக்கு 52 காசுகள் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 25 காசுகள்தான் வாங்கப்படுகிறது.
போக்குவரத்து கழகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.600 முதல் 700 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. இந்தியாவிலேயே ஒரு லிட்டர் டீசலுக்கு அதிக தூரம் பஸ்களை இயக்கும் ஒரே போக்குவரத்து கழகம் தமிழக போக்குவரத்து கழகம்தான்.
பஸ்களை முறையாக பராமரிப்பதே இதற்குக் காரணம் என்றார்.