கோயில் காவலாளிகளை தாக்கி நகை-பணம் கொள்ளை
செங்குன்றம்: கோயில் காவலாளிகளை அரிவாளால் வெட்டிவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
செங்குன்றம் அருகே திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ளது பிடாரி எச்சாத்தமன் கோயில்.
கோவில் காவலாளிகளான முத்து (60), அவரது தம்பி மணி (55) ஆகியோர் நேற்றிரவு கோவில் வெளிப்புற கேட்டை பூட்டி விட்டு கோயிலுக்குள் படுத்திருந்தனர்.
நள்ளிரவு 1 மணி அளவில் சுமார் 6 பேர் கொண்ட கும்பல் கோயில் கேட்டை உடைத்துக் கொண்டு கோவிலுக்குள் புகுந்தது. சத்தம் கேட்டு எழுந்து ஓடி வந்த மணியை கொள்ளையர்கள் சரமாரியாக வெட்டினர்.
தலை, கழுத்து ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த மணி அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை காப்பாற்ற முயன்று முத்துவையும் கொள்ளையர்கள் வெட்டினர்.
படுகாயங்களுடன் வெளியே ஓடிய முத்துவை வாயிலில் காவலுக்கு நின்றிருந்த கொள்ளையர்கள் பிடித்து கொண்டனர்.
இதையடுத்து உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்த அந்தக் கும்பல் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயின், 1 பவுன் விபூதி பட்டை உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
இரவு 2.30 மணியளவில் முத்து ஊருக்குள் சென்று நடந்த விபரத்தை சொன்னார். ஊர் மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்தினர். அந் நாய் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.