ஆரியங்காவில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம்
தென்மலை: தமிழக, கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவில் ரூ.1 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தப் பேருந்து நிலையம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். இம்மாவட்டத்தில் பாதிப் பேர் தமிழர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள புளியரை-ஆரியங்காவு தடத்தில் செல்லும் பஸ்களுக்கு பெர்மிட் விதிமுறைகள் இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் டூரிஸ்ட் கார், வேன் போன்ற வாகனங்களும் வந்து செல்ல வழி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்தத் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் கேரள அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.