
பாமகவினர் மீது பொய் வழக்கா?-ஆற்காடு மறுப்பு
சென்னை: எம்எல்ஏ குரு உள்பட பாமகவினர் யார் திட்டமிட்டு பொய் வழக்கு போடப்படவி்ல்லை என சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி விளக்கம் தந்தார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான நடந்த விவாதம்:
வேல்முருகன் (பாமக): எங்கள் கட்சி எம்.எல்.ஏ. குரு மீதும், கட்சி நிர்வாகிகள் சிலர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீதும் என் சகோதரர் மீதும் கடந்த ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நமது கூட்டணியை குலைக்க சிலர் செய்யும் சதிதான் என்று நான் கருதுகிறேன். முதல்வர் இதன் உண்மையை அறிந்து சதியை அம்பலப்படுத்த வேண்டும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பாமகவினர் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போடுவது போல வேல்முருகன் கூறுகிறார். அது சரியல்ல. குரு மீது பாமகவை சேர்ந்தவர்கள் தான் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் முதல்வர் தான் கைது செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
பாமக எம்.எல்.ஏ. குரு மேடைகளில் பேசும் போது, மத்திய அமைச்சர் ராசா வெளியில் நடமாட முடியாது என்றும், ஆண்டிமடம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் என்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரை கைது செய்ய வேண்டாம் என்று முதல்வர் கூறியிருக்கிறார். வன்முறையை தூண்டும் வகையில் பா.ம.க. உறுப்பினர் பேசியது சரியா என்பதற்கு உறுப்பினர் வேல்முருகன் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார் ஆற்காடு.
பள்ளிகளில் யோகா:
முன்னதாக கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் விடியல் சேகர் பேசுகையில், பள்ளிகளில் யோகாசனத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்பயிற்சிக்கு வாரம் 2 பாட வேளை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் யோகாவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழக முதல்வர் இந்த 84 வயதிலும் யோகா செய்வதால் தான் 24 வயது இளைஞர் போல செயல்படுகிறார்.
முதல்வரின் உத்தரவுப்படி பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.1 கோடியே 61 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் கல்வி ஆண்டில் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் யோகாவுக்கு தனி பாடவேளை ஒதுக்கப்பட்டு, அதில் யோகா கற்பிக்கப்படும். இந்த கல்வி ஆண்டிலேயே இது செயல்படுத்தப்படும் என்றார்.
சட்டசபையில் சலசலப்பு:
முன்னதாக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, கேள்வி கேட்க அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி அக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம.வேலுச்சாமி ஆகியோர் எழுந்து நின்று குரல் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, எல்லா எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று யாரும் சபாநாயகரை கட்டாயப்படுத்த முடியாது. அது சபாநாயகரின் விருப்பத்தை பொறுத்தது என்றார்.
அப்போது பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், எல்லோருக்கும் சமமாக வாய்ப்பு கொடுக்கிறேன். என்னை யாரும் வற்புறுத்த முடியாது என்றார்.
ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்ததால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. பின்னர் அதிமுகவினர் அவர்களாகவே அமைதியாகி அமர்ந்துவிட்டனர்.