தமிழ் திரையுலகம் உண்ணாவிரதம்-ஸ்தம்பித்தது கோலிவுட்!
சென்னை: கர்நாடகத்தில் நடந்து வரும் தாக்குதல்களை கண்டித்து சென்னையில் இன்று தமிழ் திரை உலகம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே நடந்த காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலையில் முடிவடைந்தது.
இந்த உண்ணாவிரத மேடைக்கு முதல் நபராக நடிகர் சத்யராஜ் வந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., பெப்சி தலைவர் விஜயன், நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை,
நடிகர்கள் அர்ஜூன், முரளி, பிரகாஷ் ராஜ், செந்தில், விஜயகுமார், ராமராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ராஜேந்தர், குண்டுகல்யாணம், வாகை சந்திரசேகர், ரமேஷ்கண்ணா, விந்தியா, மனோரமா, சத்யப்பிரியா ஆகியோர் காலை 8 மணிக்குள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்துவிட்டனர்.
லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் பேசுகையில் தமிழர்கள் இதுவரை பொறுமை காத்தார்கள். இப்போது லேசாக இடிக்க ஆரம்பித்துள்ளனர். அதையே அவர்களால் தாங்க முடியவில்லை. இன்னும் பதிலுக்கு அடிக்க ஆரம்பித்தால் என்னாவார்களோ... என்றார்.
நடிகர் அஜீத் உண்ணாவிரத மேடைக்கு வந்து சிறிது நேரம் அமர்து விட்டு பின்னர் கிளம்பிச் சென்றார்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், மாதவன், தனுஷ், ஆனந்தராஜ், விஜயக்குமார், நடிகை பாபிலோனா, மன்சூர் அலிகான் அப்பாஸ், விஜய், சூர்யா, விக்ரம், ஸ்ரீமன், நயனதாரா, தனுஷ், பிரபுதேவா, பிரபு உள்ளிட்ட பெரும் திரளான நடிகர், நடிகைகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
நடிகர் சங்க முன்னாள் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நண்பகல் 12 மணியளவில் வந்தார். அவருடன் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் பெரும் திரளாக வந்திருந்தனர்.
திரையுலகம் மேற்கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நடிகர், நடிகைகளைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.