For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் போக்குவரத்து தனியார்மயமாகாது-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தனியார்மயமாக்கப்படாது என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அதன் விவரம்:

சண்முகவேலு (அதிமுக):

திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் ரூ.1,500 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்கியது. தனியாரிடம் பஸ் பாடி கட்டுவதால் ஒரு பஸ்சுக்கு ரூ.2 லட்சம் கூடுதல் செலவாகிறது. சொகுசு பஸ்சிலும் அதிகம் பேரை ஏற்றி செல்கிறார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு: உங்கள் ஆட்சியில் நடந்ததை நாங்கள் செய்தது போல சொல்கிறீர்கள். அதிமுக ஆட்சியில் பஸ்களே வாங்கவில்லை. அதனால் நீங்கள் கடன் வாங்கவில்லை. நாங்கள் புதிய பஸ்கள் வாங்கினோம். அதனால் கடன் வரத்தான் செய்யும்.

கட்டண உயர்வு திமுக ஆட்சியில் புதிதாக எதுவும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் நரேஷ் குப்தா செயலாளராக இருந்தபோது போட்ட உத்தரவுப்படியே பஸ் கட்டணம் நடைமுறையில் உள்ளது. தேவை என்றால் அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை வழங்க தயாராக இருக்கிறேன்.

அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமாக இருந்தது. (இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது)

செங்கோட்டையன் (அதிமுக): பஸ்களை தனியார்மயமாக்கும் எண்ணம் எங்களுக்கு இருந்ததே இல்லை.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: தனியார் மயமாக்கும் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக கூட அப்போது பத்திரிகையில் வந்தது. (மீண்டும் அதிமுகவினர் கடும் கூச்சல்- பதிலுக்கு திமுகவினரும் கூச்சலிட அவையில் அமளி நிலவியது)

நத்தம் விசுவநாதன் (அதிமுக): அமைச்சர் தவறான தகவலை தெரிவிக்கிறார். புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் எந்த சூழ்நிலையிலும் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கப் போவதாக ஒரு போதும் சொல்லவில்லை.

அமைச்சர் நேரு: நான் எந்த தவறான தகவலையும் தெரிவிக்கவில்லை. தனியார் மயமாக்கவில்லை என்று சொன்னால், இதற்கு முன் கருணாநிதியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அப்படி தனியார் மயமாக்கினால், நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரசுடமை ஆக்குவேன் என்று கூறி இருந்ததும் பத்திரிகையில் வந்திருந்தது.

(அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து கூச்சலிட்டனர். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் சபாநாயகரை நோக்கி கையைக் காட்டியபடி கோபமாக ஏதோ கூறினார்)

அமைச்சர் பரிதி இளம்வழுதி: சபாநாயகரை நோக்கி கை காட்டி மிரட்டும் வகையில் விசுவநாதன் பேசுகிறார். இது எந்த வகையில் நியாயம்?

சபாநாயகர்: விசுவநாதன் பேசுவது முறையல்ல.

(இதையடுத்து திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது)

அப்போது எழுந்த முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில்,

நண்பர் செங்கோட்டையன் அவர்களை நான் கேட்டுக் கொள்கின்றேன். தேவையற்ற நிலையில் பொறுமையிழந்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களுடைய தொகுதிகளுக்கான தேவைகளை எடுத்துச் சொல்லி, அது பற்றி அமைச்சருடைய பதிலையும் அரசினுடைய முடிவுகளையும் அறிய வேண்டிய ஒரு நிலையை இழந்து விட்டு, இப்பொழுது கலவரச் சூழ்நிலையில் இன்றைய மன்றம் முடிவடைய வேண்டாமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

ஒன்றை நம்முடைய உறுப்பினர் செங்கோட்டையன் அறிவார்கள் என்று கருதுகின்றேன். ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 100 மைல் செல்கின்ற நீண்டதூர பேருந்துகளை மாத்திரம் அன்றைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் அவர்கள் தேசியமயமாக்கினார்.

அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா ஆட்சி வந்த பிறகு நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து பிறகு துரதிருஷ்டவசமாக நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு-அது கூட துரதிருஷ்டவசமாக இருக்கலாம்- நான் முதலமைச்சராக ஆன பிறகு கொண்டு வந்தது தான் பேருந்துகளை தேசியமயமாக்குகின்ற இந்தத் திட்டமாகும். அதை நம்முடைய நண்பர் செங்கோட்டையன் மறுக்க மாட்டார் என்று கருதுகின்றேன்.

அப்படி ஆக்கும் பொழுது டி.வி.எஸ்காரர்கள் அவர்களே முன் வந்து நாங்கள் பேருந்துகளையெல்லாம் தேசியமயமாக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என்று கூறினார்கள்.

பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் அவர்களுடைய பேருந்துகளையும் தேசிய மயமாக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என்று சொன்னார்கள். குடந்தை ராமன் அன்ட் ராமன் அவர்களும் சொன்னார்கள்.

பொறையாறு பேருந்து ஓனர்களும் அப்படி ஒத்துக் கொண்டு அவர்களாகவே வந்து, நாம் நடத்திய பேருந்துகளை தேசியமயமாக்குகின்ற ஒவ்வொரு விழாக்களிலும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, யாரையும் புண்படுத்தாமல், யாரையும் நஷ்டமடைய செய்யாமல் சுமூகமான முறையில் நடைபெற்ற தேசியமயமாக்கல் கொள்கையின் வெற்றிதான் அன்றைக்கு முதன்முதலாக நாம் பேருந்துகளை தேசிய மயமாக்கும்பொழுது நடைபெற்றது. அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடையிடையே, சில பேர் வதந்திகளைப் பரப்பியிருக்கலாம்- இதை மீண்டும் தேசியமயத்திலிருந்து தனியார் மயத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று. ஆனால், இருந்த எதிர்க்கட்சிகள் யாரும் அதற்கு இடம் தரவில்லை. அந்தக் காரணத்தினால், ஒரு நல்ல புரட்சிகரமான முடிவு எடுத்த பிறகு அதிலிருந்து கீழ் நோக்கிப் போவதற்கு எந்த அரசும் முன் வராது என்பது நண்பர் செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதன் தொடர்ச்சிதான் இன்றளவும் இந்தப் பேருந்து போக்குவரத்துத் தொழில் பொதுவுடமைத் தொழிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை நாம் மறந்து விடக் கூடாது. பதினான்கு அல்லது பதினைந்து போக்குவரத்து நிறுவனங்களை ஒரே நிலையிலே கொண்டு வந்து ஒரே நிறுவனமாக ஆக்கி போக்குவரத்துக் கழகம் என்ற ஒரு துறையை ஏற்படுத்தியது திமுக அரசு என்பதையும் அவர்கள் மறந்து விடக் கூடாது.

(அப்போது திமுக எம்எல்ஏக்கள் பலத்த கரவொலி எழுப்பினர்). இதை நாம் கையொலி செய்து அவர்களையெல்லாம் புண்படுத்துவதற்காகச் சொல்லவில்லை. உண்மைகளை நாம் மறந்து விடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். அவ்வளவு தான்.

இதிலே நீங்கள் எழுப்புகின்ற எந்த விவாதமாக இருந்தாலும் நம்முடைய அமைச்சர் அவர்கள் அவற்றுக்கான பதிலைத் தர தயாராக இருந்தாலும், அந்த உண்மைகளை ஊறப்போட்டால் ஊசிப்போயி விடுமோ' என்று பயப்படாமல் அப்படியே பத்திரமாக எடுத்து வந்து பதில் சொல்லும் போது அவைகளைப் பயன்படுத்த வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X