ஒட்டுகேட்பு-நீதிபதி சண்முகம் விசாரணை
சென்னை: தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.
தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் விசாரணைக் கமிஷன் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி பதிவை வெளியிட்டது யார் என்பதை இந்த விசாரணைக் கமிஷன் கண்டறியும்.
இந்த விவகாரத்தில் சிவில் அல்லது கிரிமினல் குற்றம் நடந்திருந்தால், அதற்குப் பொறுப்பான நபர் அல்லது ஏஜென்சி யார் என்பதையும், அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பதையும் இந்த விசாரணைக் கமிஷன் அரசுக்குப் பரிந்துரைக்கும்.
ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அது தொடர்பான அறிக்கையை அரசிடம் இந்தக் குழு சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.