• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நக்ஸல்களை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் பாடுபட வேண்டும்-கருணாநிதி

By Staff
|

Karunanidhi
சென்னை: தீவிரவாதப் பாதையில் இளைஞர்கள் செல்வதைத் தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், புரட்சி செய்யும் இளைஞர்களை சீர்திருத்தி புதிய நிலையை உருவாக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சட்டசபையில் இன்று கொடைக்கானலில் நகஸலைட்கள் பிடிபட்டது, நவீன் என்ற நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினர்.

அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த 19ம் தேதியன்று கொடைக்கானல் மலைப்பகுதியில் நவீன் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பலர் தப்பி ஓடி விட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதில் 2 மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏற்கனவே 12ம் தேதி பலர் பிடிப்பட்டதாகவும் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடியதாகவும் அதில் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. அரசு இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

இதையடுதது பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரும் பேசினர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் அமைச்சர் கருணாநிதி கூறியதாவது:

தீவிரவாதம் என்பது ஒரு கட்சி இன்னொரு கட்சியை குற்றம் கூறுவதற்காக எழுப்பப்படும் சொற்றொடர் அல்ல. அரசுக்கு எதிராக எழுப்பப்பட்ட வார்த்தையும் அல்ல. ஆட்சியில் உள்ளவர்களும் எதிர்க்கட்சியினரும் பொது மக்கள் உள்பட எல்லோரும் தீவிரவாதத்தின் பலனை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

வெள்ளம், புயல் பெருமழை, பூகம்பம் ஏற்பட்டால் எல்லா கட்சியினரும் ஒன்றாக சேர்ந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுத்து பொது மக்களை காப்பது போல் தீவிரவாதத்தை தவிர்ப்பதும் தடுப்பதும் எல்லா கட்சிகளுக்கும் எல்லோருக்கும் பொதுவானது என்று கருதி தடுக்க முன்வர வேண்டும்.

இங்கு ஒன்றிரண்டு சம்பவங்களை சுட்டிக்காட்டி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு காவல் துறை மூலமும் அரசு அதிகாரிகள் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை அறிக்கையாக தாக்கல் செய்கிறேன்.

இந்த அரசு பதவி ஏற்றது முதல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் பரவ முயலும் நக்சலைட்டுகளை தடுப்பது, காடுகளிலும், கடலோர பகுதிகளிலும் மாநில எல்லைகளிலும் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி அடிக்கடி காவல் துறையினர் சோதனை நடத்தி தீவிரவாத சக்திகள் வேரூன்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2006ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணபிரகாசம் மாவட் டங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதை தயாரித்த எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2003ம் ஆண்டு முதல் இந்த கடத்தல் நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்தது.

2007ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முருகமலை காட்டில் நக்சலைட்டு கைது செய்யப்பட்டார். அதே போல சுந்தர மூர்த்தி என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல டிசம்பர் மாதத்திலும் தீவிரவாதிகள் பிடிபட்டனர்.

கடந்த 19ம் தேதி கொடைக்கானல் பகுதியில் தீவிரவாதிகள் இருக்கும் தகவல் அறிந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைக்க முயன்ற போது துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் போலீசாரை தாக்கியுள்ளனர்.

போலீசார் பாதுகாப்புக்காக சுட்டபோது நவீன் என்ற தீவிரவாதி குண்டு பாய்ந்து இறந்திருக்கிறார். இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்.

இந்த அரசு சட்டம்- ஒழுங்கை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஜாதி, சமய மோதல் இல்லாமல் அமைதியான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இலங்கை பிரச்சினை, நாட்டின் மதவாதம், பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதம் என்ற சூழ்நிலையில் தீவிரவாத செயல்கள் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள 24 நக்சலைட்டுகளில் 8 பேர் தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டப்படி காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் 2001 முதல் 2006 வரை 56 பேர் தீவிரவாத நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யவில்லை.

கடந்த ஆட்சி காலத்தின்போது, 29.11.2002, 8.5.2005, 24.11.2005 ஆகிய நாட்களில் நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஆட்சி காலத்திலும் நக்சலைட்டுகள் ஊடுருவல் இருந்தது. இந்த ஆட்சி காலத்திலும் இருக்கிறது என்று வக்காலத்து வாதம் செய்ய விரும்பவில்லை.

இயற்கை சீற்றம் வரும்போது எப்படி எல்லோரும் கூடி அதை எதிர்கொள்ள வேண்டுமோ அதுபோல தீவிரவாதத்தை எல்லோரும் எதிர்கொள்ள வேண்டும். ஆயுதத்தில் அல்ல, வன்முறையால் அல்ல, அவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்பதை கண்டு பிடித்து ஆணிவேரை அகற்றி தீர்வு காண வேண்டும்.

மக்கள் நலமாக அமைதியாக வாழ, புரட்சி செய்யும் இளைஞர்களை சீர்திருத்தி புதிய நிலையை உருவாக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் தேவை என்ன என்பதை கண்டறிந்து நிறைவேற்றி அமைதியை நிலை நாட்டுவது நமது கடமை என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X