தேவர் சிலை உடைப்பு: அதிமுக-சிபிஐ கடும் வாதம்
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று சட்டசபையில் கடும் விவாதத்தில் இறங்கின. அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி குறுக்கிட்டு, சரக்கு இருந்தால் சவால் விடு, இல்லாவிட்டால் சலாம் போட்டு ஓடி விடு என்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமசாமி இதே போல பல சம்பவங்கள் திமுகவின் நல்லாட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
சங்கரன் கோயில் அருகே சில மாதங்களுக்கு முன்பு தேவர் சிலை உடைக்கப்பட்டபோது, அதிமுக-தேமுதிக இடையே ஏற்பட்ட தகராறால் நடந்ததாக தெரிய வந்தது.
இதே போல விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் மணல் அள்ளுவதில் தகராறு ஏற்பட்டு அதிமுகவைச் சேர்ந்தவரே சிலையை உடைத்ததாக தெரிய வந்திருக்கிறது.
தமிழக அரசின் நல்ல சாதனைகளால் மக்கள் மனமாற்றம் அடைந்துவரும் நிலையில் குழப்பத்தை ஏற்படுத்த இது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன என்றார்.
அவருக்கு அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பமும் அமளியும் ஏற்பட்டது.
பின்னர் அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, அதிமுகவைச் சேர்ந்தவர் தான் செய்தார் என்று நிரூபிக்க முடியுமா என்று கேட்டார். அதற்கு சிபிஐ தலைவர் சிவபுண்ணியம், அதிமுகவைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மைக்காரரின் மகன்தான் இதனை செய்தது என்றார்.
உடனே குறுக்கிட்ட செங்கோட்டையன், அவையில் சிவபுண்ணியம் அதிமுகவைச் சேர்ந்தவர் தான் என்று அடித்து சொல்கிறார். அதிமுகவை இழுத்து தவறான தகவல்களை கூறியிருக்கிறார். இதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்காவிட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டியிருக்கும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து அதிமுகவினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு, இதே போன்ற ஒரு சர்ச்சை எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது ஏற்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த குழந்தைவேலு எனக்கு எதிராக அவதூறான செய்தியை சொன்ன போது அதை நிரூபிக்க முடியுமா என்று நான் கேட்டேன். அதனை நிரூபிப்பதாக கூறி போலி ஆவணங்களை ஆதாரமாக அவர் தாக்கல் செய்தார். ஆனால் அப்போதைய சபாநாயகர் ராஜாராம், அதனை தவறு என்று கூறி தீர்ப்பளித்தார்.
அதே போல இப்போது சிவபுண்ணியமும், செங்கோட்டையனும் இதனை சவாலாக எடுத்து கொண்டு இருவரும் அதற்கான ஆதாரங்களை என்னிடம் கொடுத்தால் நான், நாளை இந்த அவையில் அதனை தெரிவிப்பேன் என்று கூறினார்.
'சரக்கு இருந்தால் சவால் விடு':
அதற்கு செங்கோட்டையன், ஆதாரம் அரசிடம் தானே இருக்கும் என்றார். அந்த சமயத்தில் குறுக்கிட்ட அமைச்சர் பரிதி இளம் வழுதி, சரக்கு இருந்தால் சவால்விடு, இல்லை என்றால் சலாம் போட்டு ஓடிவிடு என்றார்.
இதைக் கேட்டதும் செங்கோட்டையன் கோபமாகி ஒரு அமைச்சர் இப்படி பேசுவது சரியா, முதல்வர் கூறிய பிரச்சினையும், இந்தப் பிரச்சினையும் ஒன்றா என்றார்.
தொடர்ந்து இரு தரப்பும் இப்படியே பேசிக் கொண்டிருந்ததால் குறுக்கிட்ட முதல்வர், சிவபுண்ணியம் பொறுப்பை ஏற்று கொள்வார். நாளை அவர் ஆதாரத்தை என்னிடம் கொடுத்தால் அதனை ஆராய்ந்து உண்மையாக இருந்தாலும், அவையில் தெரிவிப்பேன், அதற்கு மாறாக இருந்தாலும் அவையில் தெரிவிப்பேன் என்று கூறி பிரச்சினையை முடித்து வைத்தார்.