
பாஜக பந்த்-நாகர்கோவில், கோவையில் பஸ்கள் மீது கல்வீச்சு
நாகர்கோவில்&கோவை: விலைவாசி உயர்வை கண்டித்து இன்று பாஜக அழைப்பு விடுத்துள்ள தேசிய அளவிலான பந்துக்கு தமிழகத்தில் நாகர்கோவில், கோவையின் சில பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
நாகர்கோவில், மீனாட்சிபுரம், கோட்டார், மார்த்தாண்டம், பத்மநாபபுரம், கன்னியாகுமரி, குளச்சல், களியக்காவிளை, குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் பந்துக்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
பஸ்கள் மீது கல்வீச்சு:
இந் நிலையில் குலசேகரம் பகுதியில் 2 பஸ்களும், தக்கலையில் 2 பஸ்களும், திருவட்டாரில் 13 பஸ்களும், களியக்காவிளையில் 4 பஸ்களும், செறுப்பாலூர், வெட்டில்கோடு, கல்லிகட்டி பகுதிகளிலும் தலா ஒரு பஸ்சும் கல்வீச்சுக்கு உள்ளாயின.
பார்வதிபுரம், வெள்ளமடம், ஒழுகினசேரி, இரணியல், பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய பகுதிகளில் இந்த கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கல்வீச்சையடுத்து அந்தப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுபள்ளனர். எஸ்பி சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கருங்கல் அருகே விழுந்தயம்பலத்தில் கீழ்குளம் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இன்று மாலை நாகர்கோவிலில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.
கோவையில் பலத்த பாதுகாப்பு:
பந்தையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் பஸ் நிலைய காம்ப்ளக்ஸ், பங்களாமேடு, ஊட்டி மெயின் ரோடு, காரமடை மெயின் ரோடு, சிறுமுகை மெயின் ரோடு ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
டூரிஸ்ட் கார்கள், வேன்கள் ஓடவில்லை.
கேரளா-கோவை பஸ்கள் ரத்து:
கோவை, பூசாரிபாளையத்தில் பஸ்கள் மீது சிலர் கல்வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல திருப்பூரிலும் கடையடைப்பு நடந்தது. அங்கும் பேருந்துகள் பல கல்வீசித் தாக்கப்பட்டன.
கேரளா-கோவை இடையிலான அனைத்து பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
பாஜகவினர் மீது திமுக சோடா பாட்டில் வீச்சு:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாஜகவினர் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது திமுக அலுவலகத்திலிருந்து சிலர் சோடா பாட்டில்களை வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பேரணியாக செல்ல முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர், காட்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் பாஜகவினர் சாலை மிறியல் செய்து கைதாகினர்.
புதுச்சேரியிலும் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
கேரளத்தில் முழு பந்த்:
அதே நேரத்தில் கேரளத்தில் பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முழு அளவில் பாதிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களில் வெற்றி:
பாஜக விடுத்துள்ள பந்த் அழைப்புக்கு அது ஆளும் மாநிலங்களில் முழு ஆதரவு கிடைத்துள்ளது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு வெற்றிகரமாக நடந்தது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
டெல்லியில் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து சகஜ நிலையில் இல்லை. பல இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்கள் நடந்துள்ளன.