வேட்பாளர் தேர்வு: குவாம் தீவில் ஓபாமா வெற்றி
ஹகாந்தா (குவாம்): குவாம் தீவில் நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான பிரைமரி வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா, 7 வாக்குகள் வித்தியாசத்தில் ஹில்லாரி கிளிண்டனை தோற்கடித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக, ஹில்லாரி கிளிண்னும், ஓபாமாவும் கடுமையான போட்டியில் உள்ளனர். ஓபாமாவின் கை இதில் ஓங்கியுள்ளது என்றாலும் வேட்பாளராகத் தேவையான வாக்குகள் இருவருக்கும் கிடைக்காத நிலை உள்ளது.
இந்த நிலையில், குவாம் என்கிற குட்டித் தீவில் நடந்த வாக்கெடுப்பில், ஒபாமா 7 வாக்குகள் வித்தியாசத்தில் ஹில்லாரியை வீழ்த்தினார்.
அமெரிக்காவின் ஆளுகையின் கீழ் உள்ள பசிபிக் கடல் தீவான குவாம் மிக மிக சிறிய தீவாகும். அமெரிக்கர்கள் பலருக்கே கூட குவாம் தீவு குறித்து சரியாக தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹில்லாரியும், ஓபாமாவும் கூட இங்கு வந்து பிரசாரம் செய்யவில்லை. மாறாக ரேடியோ மூலம்தான் அவர்கள் பிரசாரம் செய்தனர்.
அமெரிக்காவின் ரோட் தீவை விட ஐந்து மடங்கு அளவில் சிறியது குவாம். இங்குள்ளவர்களுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமை கிடையாது என்பது முக்கியமானது.
அடுத்த வாக்கெடுப்பு 6ம் தேதி வடக்கு கரோலினா மற்றும் இன்டியானாவில் நடைபெறவுள்ளது. இங்கு மொத்தமாக 187 பிரதிநிதிகள் வாக்களிக்கவுள்ளனர்.
வேட்பாளராக தேர்வு பெற 2025 ஓட்டுக்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஹில்லாரியிடமும், ஓபாமாவிடம் அந்த அளவுக்கு வாக்குகள் இல்லை. எனவே 796 பிரதிநிதிகள் அடங்கிய சூப்பர் டெலிகேட்ஸ் மூலமாகவே வேட்பாளர் தேர்வு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.