
கர்நாடகத்தில் முதல் கட்ட தேர்தல்- 60% வாக்குகள் பதிவானது

தும்கூர், சிக்பல்லாபூர், கோலார், பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம், ராம்நகர், மாண்டியா, மைசூர், ஹாசன், குடகு, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் அடங்கிய 89 தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. களத்தில் 953 வேட்பாளர்கள் இருந்தனர்.
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலுக்காக 18,652 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கா 1.73 கோடி.
பகல் 12 மணியளவில் 20 சதவீத வாக்குகளும், பிற்பகல் 2 மணிக்கு 36 சதவீதமும் பதிவாகியிருந்தது. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவில் விறுவிறுப்பு ஏற்பட்டது. 3 மணியளவில் 45 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிந்தபோது 59.8 சதவீதத்தை எட்டியதாக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி வித்யா சங்கர் தெரிவித்தார்.
பெங்களூர் மாநகராட்சி பகுதியில் குறைந்தபட்சமாக 44 சதவீதமும் பெங்களூர் ஊரக மாவட்டங்களில் அதிகபட்சமாக 72.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
பெங்களூர் நகரில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. காந்திபுரம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் பிற்பகல் 3 மணிவரை யாரும் ஓட்டுப்போட வராதது குறிப்பிடத்தக்கது.
மண்டியா, மைசூர், ராம்நகர், தும்கூர், கோலார் மற்றும் பெங்களூர் ஊடக மாவட்டங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
தேவே கெளடா, குமாரசாமி, ரேவண்ணா, வெங்கயா நாயுடு, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, அம்பரீஷ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தங்களது தொகுதியில் வாக்களித்தனர்.
வாக்களி்ததுவிட்டு திரும்பிய முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையி்ல், எங்களுக்கு பாஜகவோ, காங்கிரசோ சமமான போட்டியாளர்கள் இல்லை. இந்த முறை மஜதவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். நான் கிங்மேக்கராக இருக்க விரும்புவதில்லை. நான் தான் கிங் என்றார்.
பட்டியல் குழப்பம்:
சதாசிவம் நகர் தொகுதியில் நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வத்தம்மாள், மகன் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ராஜ்குமாரின் மற்ற இருமகன்களான ஷிவராஜ்குமார், புனீத் ராஜ்குமார் ஆகியோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஓட்டுப் போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதேபோல எல்லா தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்க் குழப்பம் இருந்ததால் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பினர். தேர்தல் கமிஷன் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்ததால் பல இடங்களில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சில கட்சியினர் மறியல் நடத்த முயன்றபோது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது.
பெங்களூர் ஆர்.டி. நகர் தொகுதியில் ஏற்பட்ட தகராறில் பாஜக தொண்டரு்ககு கத்திக்குத்து விழுந்தது. மற்றபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் பொதுவாக எல்லா தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக ந டந்து முடிந்தது.
வரும் 16ம் தேதி 2-வது கட்ட தேர்தலும், 22ம் தேதி 3-வது கட்ட தேர்தலும் நடக்கிறது. 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.