எல்டிடி ஆதரவு கட்சிகளை தடைசெய்ய காங் கோரிக்கை
சென்னை:விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதோடு அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கும் தடைவிதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் தமிழக சட்டசபையில் வலியுறுத்தினார்.
சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் பேசியதாவது:
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக இங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கடத்திச் செல்லப்படுகிறது.
கடந்த 1991ல் விடுதலைப்புலிகளால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு செயல்படவேண்டும்.
இந்த அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை விரைவில் காலாவதியாகிறது. விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் அண்மைக்காலமாக நடந்துவரும் ஆயுதக் கடத்தல்களை எண்ணிப்பார்த்து அந்த அமைப்பின் மீதான தடையை நீட்டிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்.
அதுமட்டுமல்லாமல், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பல அமைப்புகளும் கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துகிறார்கள். இந்த அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கும் அரசு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு சுதர்சனம் பேசினார்.