For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக, கர்நாடக கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 54 ஆனது

By Staff
Google Oneindia Tamil News

ஓசூர்/கோலார்: தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதி கிராமங்களில் நேற்று முன்தினம் விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்ைக 54 ஆக உயர்ந்துள்ளது. பலர் கண்பார்வை இழந்துள்ளனர். இதுவரை இரு மாநிலங்களிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, ராயக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஆனேகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி கூலி வேலைக்குச் செல்வது வழக்கம்.

திங்கள்கிழமை வேலைக்குச் சென்று விட்டு வார இறுதி நாளான சனிக்கிழமையன்று சொந்த ஊர் திரும்புவார்கள்.

அதேபோல, தேன்கனிக்கோட்டையை அடுத்த பின்னமங்கலம், தேவகானப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு ஒரு வார வேலைக்கான கூலியைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினர்.

வரும் வழியில் கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே உள்ள சோலூர் என்ற இடத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். பின்னர் ஊர் திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று காலை, பின்னமங்கலம், அடவிசாமிபுரம், தேவகானப்பள்ளி ஆகிய ஊர்களைச் சேர்ந்த, சாராயம் குடித்த தொழிலாளர்கள் படுக்கையிலேயே வாந்தி எடுத்து குடல் வெந்த நிலையில் பிணமாக கிடந்தார்கள்.

தேவகானப் பள்ளியைச் சேர்ந்த மெகபூப் (50), மாதப்பா (60) அடவிசாமி புரம் வெங்கடப்பா என்பவரது மனைவி குப்பம்மாள் (65), பின்னமங்கலத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மனைவி ஆஞ்சனம்மாள் (48), அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் (40), சின்னப்பா (55), கிருஷ்ணப்பா (68) மற்றும் ஒரு பெண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் ஆவர். ரவிரெட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னமங்கலம் முனிராஜ் (32), இளையசத்திரம் முனுசாமி என்ற படிகப்பா (45), சின்னப்பா, இன்னொரு சின்னப்பா, கோபால் ரெட்டி, ராம ரெட்டி, மல்லேஷ், பில்லப்பா ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேன்கனிக்கோட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இவர்களில் முனிராஜ், படிகப்பா ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் நடந்த கிராமங்களுக்கு சேலம் சரக டிஐஜி செண்பகராமன் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் செண்பகராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பின்னமங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்தான் விஷச் சாராயத்தை ஆனேகல் பகுதியிலிருந்து வாங்கி வந்து விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இவரது கணவர் ஏற்னவே கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பார்வதியை தற்போது போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். விஷச் சாராயத்தை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் கள்ளச்சாராய வியாபாரி எல்லப்பா என்பவருக்கும் போலீஸார் வலை விரித்துள்ளனர்.

கர்நாடகத்தில் 40 பேர் சாவு:

விஷச் சாராயத்திற்கு இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோலார் மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 பெண்கள் உட்பட 18 ஆகும். இதில் நரசிபுரா பேலூர், தியாகல் கிராமங்களில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.

இதேபோல, பெங்களூரை அடுத்த டி.ஜே. ஹள்ளி என்ற இடத்தில் இந்த சாராயத்தை குடித்த 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பெங்களூர் பவுரிங் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனை களில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி வழங்கப்பட்ட இலவச சாராயத்தைக் குடித்துத்தான் இவர்கள் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது. கோலாரில் கடந்த 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது.

இதையொட்டி அங்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கள்ளச்சாராயம் தாராளமாக வழங்கப்பட்டது. அப்பாவி கிராம மக்கள் இவற்றை வாங்கிக் குடித்துள்ளனர்.

அப்படி வழங்கப்பட்ட சாராயத்தை குடித்துதான் 13 பேர் உயிரிழந்திருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்

தமிழகத்தில் 14 பேர் சாவு:

தமிழகத்தில் இதுவரை 14 பேர் விஷச் சாராயத்திற்கு பலியாகியுள்ளனர். நேற்று வரை 9 பேரும், இன்று 5 பேரும் இறந்துள்ளனர்.

இரு மாநிலங்களிலும் இதுவரை மொத்தம் 54 பேர் விஷச் சாராயாத்திற்குப் பலியாகியுள்ளனர்..

போதையை அதிகரிக்க கள்ளச்சாராயத்தில் சேர்க்கப்படும் எத்தனாலின் அளவு அதிகமானதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. எத்தனால், கண் பார்வைக்கும் வேட்டு வைக்கும் அபாயகரமான வேதிப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளச்சாராய சாவுகளைத் தொடர்ந்து இதுவரை இரு மாநிலங்களிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X