For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸ் எங்களை வெளியே தள்ளினார்!-முத்துலட்சுமி பகீர்

By Staff
Google Oneindia Tamil News

Muthulakshni
சென்னை: சந்தனக்காடு தொடர் மீதான வழக்கை வாபஸ் வாங்கியதற்காக, பாமக நிறுவனர் ராமதாசிடம் பணம் கேட்கப் போன என்னையும் என் மகள்களையும் அவர் காவலர்களை விட்டு வெளியில் தள்ளினார் என குற்றம் சாட்டியுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் சந்தனக்காடு தொலைக்காட்சித் தொடரின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது நினைவிருக்கலாம். இந்த விழாவில் பேசிய அனைவரும் வீரப்பனைப் பற்றி வானளாவப் புகழ்ந்தனர்.

மக்கள் தொலைக்காட்சியின் உரிமையாளரான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வீரப்பனை தமிழகத்தின் எல்லைச்சாமி என்று குறிப்பிட்டார். வீரப்பன் ஒரு மாவீரன், அவன் உயிருடன் இருந்திருந்தால் ஓகேனக்கல் எங்களுடையது என்று கர்நாடகம் பிரச்னை செய்திருக்காது. இப்படியெல்லாம் நடந்துவிட்டால் தங்கள் அரசியல் பிழைப்பு என்ன ஆவது என்று யோசித்துதான் ஜெயலலிதா அரசு தந்திரமாகக் கொன்றுவிட்டது என்றார்.

அவருக்கு முன் பேசிய இயக்குநர் சீமான், இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளும் தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட நிலையில், மக்கள் தொலைக்காட்சி மட்டுமே அங்கு ஒளிபரப்பாகி வருகிறது.

அதிலும் போர்க்களத்தில் இருக்கும் என் சகோதரன் (பிரபாகரன்?) தினமும் இரவு எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகும் சந்தனக்காடு தொடரைப் பார்க்காமல் இருக்க மாட்டான் என்றார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்.

புஷ்பவனம் குப்புசாமி பேசுகையில், வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடம் சமாதி அல்ல, கோயில் என்றார்.

கலகலப்பாக நடந்த இந்த விழாவில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த அனைவருமே ராமதாசிடம் கேட்க, அவரோ, நாங்கள் அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. காரணம் தெரியவில்லை என்றார். நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது.

ஆனால் இப்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, சந்தனக்காடு விழாவில் தான் கலந்து கொள்ளாததன் பின்னணி பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

முத்துலட்சுமி பேட்டி:

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். சந்தனக்காடு தொடர் வெற்றி விழாவுக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படியே அழைத்திருந்தாலும் நான் சென்றிருக்க மாட்டேன் என்கிறார் முத்துலட்சுமி.

ஏன் சென்றிருக்க மாட்டீர்கள்? என்று கேட்டதும், தனது கோபத்தின் நிஜப் பின்னணியை விளக்கினார்.

என்னிடம் அனுமதி வாங்காமலேயே வீரப்பன் கதையை சந்தனக்காடு தொடராக எடுக்கத் தொடங்கினார்கள். நாங்கள் நீதிமன்றத்தை அணுகினோம். என்னைப் பற்றியும், என் மகள்கள் இருவரைப் பற்றியும் தொடரில் எதுவும் சொல்லக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம்.

அதன்பின், ராமதாஸ் ஐயா என்னைத் திண்டிவனத்துக்கு அழைத்தார். வீரப்பனைப் பற்றி தரக்குறைவாக எதையும் நாங்கள் காட்டப் போவதில்லை. உன்னைப் பற்றியும் எதுவும் தவறாகச் சொல்லப் போவதில்லை. எனவே வழக்கை வாபஸ் வாங்கிவிடு. அதே சமயத்தில் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வழக்கை நடத்திக் கொள்ளலாம். நாங்கள் உன்னை வற்புறுத்தவில்லை என்று என்னிடம் சொன்னார்.

அவரே கேட்டுக் கொண்டதால் வழக்கை வாபஸ் வாங்க முடிவெடுத்தேன். மேலும் என்னைப் பற்றி தொடரில் காட்டுவதையும் எதிர்க்கவில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டேன். பின்னர், வழக்கு செலவுக்காக ரூ. 50,000த்தை ஐயா என்னிடம் கொடுத்தார். என் இரு மகள்களின் படிப்புச் செலவுக்காக அவர்கள் படிக்கும் பள்ளியில் ஒரு முறை ரூ. 23,000மும், மற்றொரு முறை ரூ. 15,000மும் அவர் செலுத்தினார்.

இதுதவிர, வேறு எந்தப் பணமும் அவரிடம் இருந்து நாங்கள் பெறவில்லை. பிளஸ் டூ படிக்கும் என் மூத்த மகள் வித்யாராணி, பிளஸ் ஒன் படிக்கும் இளைய மகள் பிரபா ஆகியோருக்கு பள்ளியில் பணம் செலுத்த வேண்டியிருந்தது.

நான் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கியும் இருந்தது. இந்தச் செலவுக்காகப் பணம் கேட்டு, கடந்த மே மாதம் என் அக்கா மற்றும் என் இரு மகள்களுடன் ஐயாவைச் சந்திக்க திண்டிவனம் போனேன்.

ஐயாவிடம், செலவுக்குப் பணம் வேண்டும் என்று கேட்டேன். அப்போது அவர் எங்களைத் திட்டத் தொடங்கினார். எங்களை எதிர்த்து கேஸ் போட்டு என்ன சாதித்தாய்? மகள்கள் படிப்புச் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டேன். இனி எதுவும் கிடையாது, என்று கோபமாகப் பேசினார்.

அவரது பேச்சால் ஆவேசமான என் இளைய மகள் பிரபா, கேஸை வாபஸ் வாங்கிவிட்டோம். எழுதியும் கொடுத்துவிட்டோம். இனி இவர்களால் என்ன செய்ய முடியும் என்றுதானே இப்படிப் பேசுகிறீர்கள். இது நியாயமா?, என்று ஐயாவைப் பார்த்துக் கேட்டாள். உடனே ஐயா, வெளியே போ என்று என் மகளைப் பார்த்துக் கத்தினார்.

அதற்கு, என் மகள், யார் யாரோ எங்கள் அப்பாவின் கதையைப் படம் எடுக்க முன்வந்தார்கள். எங்கள் அம்மாவே படம் எடுத்திருந்தால் எங்களுக்குத் தேவையான பணம் கிடைத்திருக்கும் என்றாள்.

வெளியே தள்ளினர்:

அப்போது ஐயா, உங்க அம்மாவால் படம் எடுக்க முடியுமா? என்று கேட்டார். அதில் மேலும் ஆவேசமான என் மகள், என்னைப் பார்த்து உன்னை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். அவர்களிடம் இனி மண்டியிட்டுத்தான் பணம் வாங்க முடியும் என்றாள்.

அவளது இந்தப் பேச்சால் அதிர்ச்சியடைந்த ஐயா, தன் வீட்டுக் காவலரை அழைத்து, என் மகளை வெளியே இழுத்துப் போகச் சொன்னார். அவரும் எங்களைப் பிடித்து வெளியே இழுத்துத் தள்ளினார். இதனால் என் மகள்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர், என்றவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

என் கணவர் வாழ்ந்த அந்தக் காட்டுப் பகுதியில் அலைந்து படம் எடுத்ததையே சந்தனக்காடு குழுவினர் சாதனையாகப் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் அவருடன் அந்தப் பகுதியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்த எங்களுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்?

இன்றைக்கு என் கணவரைப் புகழும் யாரும் எங்கள் குடும்பக் கஷ்டத்துக்கு உதவக் கூட முன் வருவதில்லை. அவரது பெயரில் நடக்கும் விழாவுக்குப் பெயருக்குக் கூட யாரும் எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. தமிழ், தமிழ் என்று பேசி நாடகம் ஆடுபவர்களின் முகத்திரையைக் கிழித்து, யார் உண்மையானவர்கள் என்பதை உலகிற்குக் காட்டுவேன் என்றார் ஆவேசமாக முத்துலட்சுமி.

வீரப்பன் இருந்தாலும், இறந்தாலும் பணம் காய்ச்சி மரம்தான், சுற்றியிருப்பவர்களுக்கு!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X