அபார்ஷன் சட்டத்தை திருத்த முடியாது-அன்புமணி

Subscribe to Oneindia Tamil
Niketha with Husband
டெல்லி: மும்பையைச் சேர்ந்த நிகேதா மேத்தா என்ற பெண் இதயத்தில் கோளாறுடன் உள்ள தனது 24 வார கால சிசுவை அபார்ஷன் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.

நிகேதா மேத்தா- ஹரேஷ் தம்பதி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், எங்களது குழந்தையின் இதயத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தை பிறந்த பின்னர் இதயக் கோளாறுடன் அவதிப்பட நேரிடும்.

குழந்தை பிறந்த பின்னர் பேஸ் மேக்கர் கருவியின் மூலமே உயிரைக் காப்பாற்ற முடியும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரான எங்களால் அந்த அளவு செலவு செய்ய முடியாது.

எங்களது குழந்தை தினசரி அவதிப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாது. கருத்தடைச் சட்டத்தின் கீழ் 20 வாரங்களுக்குட்பட்ட சிசுவை மட்டுமே கருத்தடை மூலம் அழிக்க முடியும். அதற்கு மேற்பட்ட வாரத்திலான குழந்தை என்றால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருத்தடை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த சட்டத்திலிருந்து எங்களுக்கு விதி விலக்கு அளித்து எங்களது குழந்தையை கருத்தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

ஆனால், நீதிமன்றம் நிகேதாவின் கோரிக்கையை நிராகரித்தது. குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதற்கான மருத்துவ ஆதாரங்களை குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்யவில்லை.

மேலும், கருக்கலைப்புச் சட்டத்தை நீதிமன்றம் திருத்த முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அன்புமணி மறுப்பு:

இந் நிலையில், நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அமலில் உள்ள கருக்கலைப்புச் சட்டத்தை ஒரு பெண்ணுக்காக திருத்த முடியாது என்று மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து விரிவான விவாதம் தேவை. இந்தப் பெண்ணின் பிரச்சனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விவாதிக்கும் என்றார்.

உதவ முன் வந்தது சர்ச்:

இதற்கிடையே குழந்தை இதயக் கோளாறுடன் பிறந்தால் அந்தக் குழந்தையை தத்தெடுக்கத் தயாராக உள்ளதாக மும்பை ஆர்ச் பிஷப் கார்டினல் ஓஸ்வால் கிரேசியஸ் அறிவித்துள்ளார்.

கருக்கலைப்பு பெரிய குற்றம். இதனால் அந்தக் குழந்தையை சர்ச்சே தத்தெடுத்து வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யும் என்றார்.

அதே போல மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையின் தலைவரான கலோனல் மாசந்த், குழந்தையின் இருதய அறுவை சிகிச்சை, பேஸ் மேக்கர் செலவு, மருத்துவ செலவு அனைத்தையும் தங்களது மருத்துவமனையே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...