For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நன்கொடை-தேமுதிகவினருக்கு விஜயகாந்த் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நன்கொடை என்ற பெயரால் பொது மக்களுக்கும், குறிப்பாக வணிக பெருமக்களுக்கும் எந்த தொந்தரவையும் யாரும் ஏற்படுத்தக் கூடாது.

பணத்துக்காக தேமுதிகவை எந்த சுய நல சக்தியிடமும், சமூக விரோதிகளிடமும் அடகு வைக்க மாட்டேன் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேமுதிக உழைக்கும் மக்களின் இயக்கமாகும். அதனால்தான் அன்றாடம் கூலிவேலை செய்யும் தொழிலாளர்கள் கூட இதில் ஈடுபாடு கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக நமது இயக்கத்திற்கு வளர்ச்சி நிதி தர வேண்டுமென்று என்னிடம் நமது கட்சித் தொண்டர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள். அதைப்போல தங்கள் சொந்த செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமித்த பணத்தை கட்சி வளர்ச்சி நிதியாக ஏற்கனவே தந்து கொண்டிருக்கிறீர்கள்.

அண்மையில் 27.8.2008 அன்று நடந்த இணைப்பு விழாக் கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் கட்சியினர் ரூ.25 லட்சத்தை என்னிடம் கட்சி வளர்ச்சிக்காக நிதி அளித்தனர். இதுவரை நன்கொடை அளித்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிகவை பொறுத்தவரை யாரிடமும் நன்கொடை கேட்கக் கூடாது என்பதை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறேன். அதன்படி இன்று வரை கட்சியின் சார்பில் நடைபெற்ற அத்தனை நிகழ்ச்சிகளும் கட்சித் தொண்டர்களின் சொந்த செலவிலேயே செய்யப்பட்டுள்ளது.

இப்போதும் அதே நிலை தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும். எக்காரணத்தைக் கொண்டும் நன்கொடை என்ற பெயரால் பொதுமக்களுக்கும், குறிப்பாக வணிகர்களுக்கும் எந்த தொந்தரவையும் யாரும் ஏற்படுத்தக் கூடாது.

அதேநேரத்தில் கட்சியை வளர்க்க நமக்கு நிதி அவசியம். வாழ்க்கை நடத்துவதற்கு தொழில் செய்து அதன் மூலம் வருமானத்தை ஒரு பங்கை பொதுமக்களுக்கு என தொண்டு செய்ய அர்ப்பணிப்பதே நம்முடைய குறிக்கோளாகும்.

நான் எவ்வாறு திரைப்படத் தொழில் உழைத்து அந்தப் பணத்தைக் கொண்டு அரசியல் நடத்தி வருகிறேனோ அதேபோன்ற என்னுடைய தொண்டர்களும் உழைத்துப் பெறுகிற வருமானத்தில் ஒரு பங்கினை கட்சிக்குத்தர முன்வந்துள்ளதை நினைக்கிற பொழுது, நான் அதை எண்ணி பூரிப்பும், பெருமையும் அடைகிறேன்.

தேமுதிக துவக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து 4ம் ஆண்டில் அடி வைத்து வைக்கிற நேரம் இது. நாட்டு மக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலையும், வறுமையும் ஒழிப்போம் என்று நாம் மக்களுக்கு உறுதியளித்துள்ளோம்.

ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வளர்ந்து வரும் தேமுதிகவை பணத்திற்காக எந்த சுயநல சக்தியிடமோ, சமூக விரோதி களிடமோ அடகு வைக்க மாட்டேன்.

நம்முடைய இயக்கத்தை நாமே கட்டிக்காக்கும் வகையில் நீங்கள் உங்களுடைய சொந்த உழைப்பில் பெற்ற ஊதியத்தில் ஒரு சிறு தொகையை கட்சி வளர்ச்சிக்காக அனுப்புவீர்களேயானால் நான் அதை இதய பூர்வமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளேன்.

பன்னீர் மணக்கும் பணக்காரர்கள் தரும் கோடிகளை ஏழைகளின் வியர்வையால் பெற்ற காசுகள் நிச்சயம் தோற்கடிக்கும் என்பதே வரலாறு. நமது கட்சியில் உள்ள கள்ளம் கபடம் அற்ற இளைஞர்களின் சேவை இன்று நம்முடைய நாட்டுக்கு தேவை.

கட்சித் தொண்டர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் தொகையை தலைமை கழகத்திற்கும் அனுப்பலாம். 18.10.2008 அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டின்போது தரலாம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X