For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகை பிடிக்க தடை: அரசு உத்தரவுக்கு தடையில்லை - சுப்ரீம் கோர்ட்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: அக்டோபர் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 2 வாரத்திற்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தியேட்டர் வளாகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூடும் இடங்களில் புகை பிடிப்போருக்கு முதலில் பிடிபட்டால் ரூ. 100ம், மறுமுறை பிடிபட்டால் ரூ. 200ம், மீண்டும் பிடிபட்டால் ரூ. 500 வரையும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணை மே 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சில அமைப்புகளின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவை இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில்,இவற்றை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.என்.அகர்வால், சிங்வி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது புகை பிடிக்கும் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ஹரீஷ் சால்வே, அருண் ஜெட்லி, ரூய்ங்டன் நாரிமன் ஆகியோர், இந்த புதிய விதிமுறை,மூல சட்டத்திற்கு முரணாக உள்ளது. காவல்துறையின் ராஜ்யம் ஏற்பட வழிவகுக்கும் என்று வாதிட்டனர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர். எனவே இந்த சட்டம் அவசியம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் ஏற்ற நீதிபதிகள், அரசின் உத்தரவு இடைக்கால தடை விதிக்க ஏற்றதல்ல. எனவே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்ைக நிராகரிக்கப்படுகிறது.

மேலும், இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது, இந்த உத்தரவுக்கு முரணாக எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என உத்தரவிடுகிறோம் என்று உத்தரவிட்டனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ரிட் மனுக்களையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அந்த மனுதாரர்கள் 3 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல்செய்யவும், மத்திய அரசு 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சென்னை கமிஷனர் எச்சரிக்கை

இந்த நிலையில்,அக்டோபர் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்ைக எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் சேகர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற அக்டோபர் 2-ந்தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது மத்திய மாநில சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை நகரில் உள்ள கலையரங்குகள், மருத்துவமனை வளாகம், சுகாதார மையங்கள், சினிமா தியேட்டர்கள், கருத்தரங்கு மற்றும் கலந்தாய்வு கூடங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், உணவு விடுதிகள், உணவகங்கள் வணிக வளாகங்கள், பொது அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், பள்ளி, கல்லூரி, வளாகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பஸ் நிலையங்கள் பஸ் நிறுத்தங்கள் கடற்கரைகள், கடை வீதிகள், அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அலுவலகங்கள், கூட்டுறவு மையங்கள், அனைத்து மதக் கோவில்கள் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களாகும்.

மேற்கண்ட இடங்களில் யாராவது புகை பிடித்தால் உடனடியாக அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை உஷார்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னையில் தீ விர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விடிய விடிய வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது.

லாட்ஜுகளில், சோதனை செய்யப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் கோவில்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது மக்கள் தங்களது பாதுகாப்பு குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற் காக மக்கள் சேவையில் சென்னை காவல் என்ற விழிப் புணர்வு நோட்டீஸ் அச்சிடப்பட்டுள்ளது.

அதில் பொது மக்கள் வெளியூர் செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் திருட்டை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் என்னென்ன என்ற வழி முறைகள் கூறப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் துண்டு பிரசுரம் அச்சிடப்பட்டுள்ளது. இதை நகரெங்கும் வினி யோகிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் புலன் விசாரணை நடந்து வருகிறது. பல்வேறு தனிப்படைகள், அமைக்கப்பட்டு எந்த தரப்பினர் தாக்குதல் நடத்தி இருப்பார்கள் என விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கு விசாரணை நேர்மையாக செல்கிறது. விசாரணை தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார் அவர்.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X