தமிழர்களின் உணர்ச்சிக்குரல் தந்திகளாக குவியட்டும்: ஜெகத்ரட்சகன்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் போர்க்குரல், 8 கோடி தமிழர்களின் உணர்ச்சிக்குரலாகும். அந்த உணர்ச்சிக்குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும். தலைநகர் அதிரட்டும் என்று ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
இலங்கையில் சிங்கள அரசு தன் சொந்த மக்கள் மீது முப்படை தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதும் அதை உலக நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அளவு கடந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
டி9 பாதையை வெகுநாட்களுக்கு முன்பே சிங்கள அரசு மூடிவிட்டதால் தமிழீழ மக்களுக்கு உணவு, உடை போன்ற தேவையான பொருட்களை கூட கிடைக்காத நிலை நீடிக்கிறது.
கிளிநொச்சியில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் இப்போது அகதிகளாக தெருக்களில் வாழந்த்து கொண்டிருக்கின்ரனர். பசியோடும் பட்டினியோடும் அந்த மக்கள் போருக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.
உலகிலேயே தன் சொந்த மக்களை பட்டினிபோட்டு அவர்களின் மீது பீரங்கித் தாக்குதலையும் நடத்தி கொண்டிருக்கின்ற ஒரே அரசு இலங்கை பேரினவாத அரசாகத்தான் இருக்க முடியும்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தெருக்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது நம் இதயம் கனக்கிறது.
இந்த கொடூர சூழலில் இலங்கை பேரினவாத அரசுக்கு ஆதரவு தருவதையும் அவர்கள் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை மூலம் தமிழீழ சிக்கலுக்கு விடிவு காணத்தக்கத நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளின்படி நம் கட்சியினர் அனைவரும் பிரதமருக்கு தந்திகளை அனுப்புமாறு அன்புடனே வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஓரணியில் நின்று தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும்.
கருணாநிதியின் போர்க்குரல், 8 கோடி தமிழர்களின் உணர்வு, உணர்ச்சிக்குரலாகும். அந்த உணர்ச்சிக்குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும். தலைநகர் அதிரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.