For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணியில் இடதுசாரிகள் மீண்டும் சேர வேண்டும்-திமுக

By Staff
Google Oneindia Tamil News

திண்டிவனம்: பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டுகோளை ஏற்று இடதுசாரிகள் மீண்டும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சேரவேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் புறவழிச் சாலை (Ring road) திறப்பு விழா நடந்தது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கிய இந்த விழாவில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு புறவழிச் சாலையை திறந்து வைத்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சாதனைகளுக்கு சோனியா, கருணாநிதி, ராமதாஸ் போன்ற தலைவர்கள் சிற்பிகளாக செயல்பட்டனர். நாம் சிதறுண்டால் இன்னும் பெற வேண்டிய வெற்றிகளை அடைய முடியாது.

கருத்து வேறுபாட்டினால் விலகிச்சென்ற இடதுசாரி கட்சிகள் மீண்டும் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தி உள்ளார். பிரதமரின் வேண்டுகோளை நானும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் கூட்டணி தலைவர்கள் மகத்தான வெற்றிகளை பெறுவதற்கு மீண்டும் கூட்டணியில் வந்து சேர வேண்டும். கூட்டணிக்கு துரோகம் இழைப்பவர்கள், தமிழனுக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அழிந்து போவார்கள்.

நாட்டில் 4,508 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையில் 3,261 கிலோ மீட்டர் நான்கு வழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது.

ரூ. 285 கோடி செலவில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை திருச்சிற்றம்பலம், கிளியனூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் திண்டிவனத்தில் இருந்து திருச்சி வரை ரூ.1,260 கோடி செலவில் 204 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, சமயபுரம் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலையில் 8 மேம்பாலங்கள், 3 அடுக்கு பாலங்கள், 4 சுரங்கப் பாதைகள் அடங்கும். இந்தச் சாலை பணிகள் முடிந்து விரைவில் சாலை திறக்கப்படும்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.33,000 கோடியை மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது. இதில் சுமார் ரூ. 13,000 கோடி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுவிட்டது.

உலகம் முழுவதும் கடல் சார் பல்கலைக்கழகங்கள் சீனாவில் 2 உள்பட மொத்தம் 51 உள்ளன. சென்னையில் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் அமைக்க தீவிரமாகப் போராடி வென்றுள்ளோம்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டதால் சென்னையில் விரைவில் இந்த பல்கலைக்கழகம் அமையும்.

நாடு 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. இதற்கு சரியான நிதிக் கொள்கை, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை தான் காரணம். உலகம் முழுவதும் பொருளாதாரம் சீரழிந்து வந்தாலும் இந்தியாவில் நிலையாக உள்ளது

இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழ வேண்டும். இதற்கு உறுதுணையாக இருப்போம். இதை எதிர்ப்பவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றார் பாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X