For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் தர மறுக்கும் கேரளா-'போராட்டம் நடத்துமா சிபிஎம்?'

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நெய்யாற்றில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரைத் தர பணம் கேட்கும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் அரசைக் கண்டித்து, தமிழக கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவார்களா என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெய்யாறு அணையில் இருந்து விளவங்கோடு விவசாயிகளின் பாசனத்துக்கு தண்ணீரை தமிழக அரசு தரவில்லை எனக் கூறி கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஊர்வலம், உண்ணாவிரதம் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக செய்தி பார்த்தேன். உண்மை நிலையைக் கூறுகிறேன்.
நெய்யாறு பாசன திட்டம் கேரளாவில் உள்ள, நெடுமாங்காடு, நெய்யாற்றின் கரா மற்றும் விளவங்கோடு தாலுகாவில் உள்ள நிலங்களுக்கு பாசன வசதி செய்ய கட்டப்பட்டது. மொத்த பாசனப் பரப்பு 38,000 ஏக்கர். 1956ம் ஆண்டு மாநில மறு சீரமைப்பு சட்டப்படி விளவங்கோடு பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

மொத்த பாசனப் பரப்பில் 9,200 ஏக்கர் பாசன நிலம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. செய்யாறு அணையில் இருந்து இந்த பாசன நிலத்துக்கு கேரளா அரசு 2004 வரை தண்ணீர் அளித்து வந்தது. அதன் பின் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை நிறுத்திவிட்டது.

நெய்யாறு பன் மாநில நதி என்பது ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு மற்றும் பராமரிப்பு செலவு குறித்து ஒப்பந்தம் செய்ய 1971ம் ஆண்டு தமிழக அரசு வரைவு ஒப்பந்தத்தை தயார் செய்து கேரளாவுக்கு அனுப்பியது. அதை ஏற்க கேரளா சுணக்கம் காட்டி வருகிறது.
இதில், மத்திய அரசு தலையிட பல கடிதங்களை தமிழகம் எழுதியுள்ளது.

கேரளா அரசு 2006ல் இயற்றிய சட்டப்படி, நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தந்தால், அதற்கு கேரளா நிர்ணயிக்கும் விலையை தமிழக அரசு தர வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது.

பன் மாநில நதி என்பதால், கேரளா தரும் தண்ணீருக்கு தமிழகம் பணம் தர தேவையில்லை என பலமுறை கூறிய விளக்கத்தை ஏற்க கேரளா தயாராக இல்லை.பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம், முதலில் விளவங்கோடு விவசாயிகளின் பாசனத்துக்கு தண்ணீர் விடுங்கள் என கேரளா முதல்வருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்துக்கும் அந்த அரசு உடன்படவில்லை.

இந்த விவரங்களை எல்லாம் பலமுறை சட்டசபையிலும், கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்களிடமும் தெரிவித்துள்ளேன்.

இரு மாநிலங்களில் ஓடும் ஒரு நதியின் தண்ணீருக்கு, மற்றொரு மாநிலம் பணம் தர வேண்டும் என்பது எங்கும் கேட்டிடாத செய்தி. நிலைமை இவ்வாறு இருக்க, கன்னியாகுமரி மாவட்ட கம்யூனிஸ்டகள் தமிழக அரசை கண்டித்து ஊர்வலம், உண்ணாவிரதம் இருப்பது எப்படி நியாயம் என்று தெரியவில்லை.

கேரளா அரசை கண்டித்து, இந்தப் போராட்டங்கள் நடந்தால் அது நியாயம். என்ன செய்வது, என்ன செய்வது, அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியல்லோ நடக்கிறது!.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் கொடும்பாவி எரிப்பு:

இதற்கிடையே நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் பிரச்சனையில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் குமரி மாவட்டத்தில் போட்டி போட்டி போராட்டங்கள் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மாலை காங்கிரசார் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் உருவப் பொம்மையை மார்த்தாண்டம் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எரித்தனர்.

இது குறித்து குழித்துறை போலீசார் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரள அமைச்சர் முன்னிலையில் கொடும்பாவி:

அதே போல பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேரள அமைச்சர் பேபி கலந்து கொண்டுவிட்டு களியக்காவிளை வழியாக காரில் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது காங்கிரசார் களியக்காவிளை ஜங்சனில் கேரள முதல்வர் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் தீயை அணைக்க முயன்றனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்தாஸ் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து களியக்கா விளை போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தீக்காயமடைந்த பால்தாஸ் நாளை (31-ந்தேதி) ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X