For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9/11க்கு முன்பே ஓசாமாவிடம் அணு ஆயுத தொழில்நுட்பத்தை கொடுத்த ஏ.க்யூ.கான்

By Staff
Google Oneindia Tamil News

A Q Khan
டெல்லி: நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அல் கொய்தா தலைவர் ஓசாமா பின் லேடனை, பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானுக்கு மிகவும் நெருங்கிய 2 விஞ்ஞானிகள் சந்தித்ததாகவும், அவரிடம் அணு ஆயுத தொழில் நுட்பத்தை வழங்கியதாவும், அணு ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

'The Man From Pakistan' -- the true story of the world's most dangerous nuclear smuggler AQ Khan என்ற பெயரில் வெளியாகியுள்ள நூலில்தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த செளத்ரி அப்துல் மஜீத் மற்றும் சுல்தான் பசிருத்தீன் மஹமூத் ஆகிய இருவர்தான், கான் சார்பில் லேடனை சந்தித்தனர்.

இருவரும் 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மத்தியில் காந்தஹாருக்குச் சென்று, அங்குள்ள தலிபான் தலைமையகத்தில், பின் லேடனை சந்தித்துள்ளனர். லேடனுடன் 3 நாட்கள் தங்கியுள்ளனர்.

பெரும் நாசத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்க அப்போது தீவிரமாக இருந்தார் பின் லேடன்.

அணு ஆயுதங்களை வாங்குவது தொடர்பாக பின் லேடனுடன் பேசச் சென்ற மஹமூது தலைமையிலான இரு நபர் விஞ்ஞானிகள் குழுவுக்கும், பின் லேடனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை எந்தவித முடிவுமின்றி திடீரென முடிவுக்கு வந்து விட்டதாம்.

காரண், லேடன் தனது முக்கிய கூட்டாளிகள் சிலருடன் அவசரம் அவசரமாக வட மேற்கு ஆப்கானிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றதால் பேச்சுவார்த்தை தடைபட்டதாம்.

இருப்பினும் கிளம்புவதற்கு முன்பு தனது கூட்டாளிகளிடம் பேசிய பின் லேடன், மிகப் பெரிய விஷயம் அரங்கேறப் போகிறது. உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் என்னுடன் புனிதப் போரில் பங்கேற்கப் போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு 2 வாரங்கள் கழித்துத்தான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

414 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை, டக்ளஸ் பிரான்ட்ஸ் மற்றும் காத்தரீன் காலின்ஸ் ஆகிய இரு புலனாய்வு நிருபர்கள் எழுதியுள்ளனர்.

பின் லேடனை சந்தித்த இரு விஞ்ஞானிகளும் அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு உம்மா தமீர் இ நெளவ் என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர். ஆப்கானிஸ்தானில் மதம் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நோக்கில் இதைத் தொடங்கினர்.

ஆனால், தலிபான்களுக்கு அறிவியல் சார்ந்த விஷயங்களைக் கர்றுக் கொடுக்கவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பில் தலிபான்களுக்கு ஆதரவான பல பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர். தலிபான் தலைவர் முல்லா உமரால், ஆப்கானிஸ்தானில் செயல்பட அனுமதிக்கப்பட்ட வெகு சில அமைப்புகளில் இதுவும் ஒன்று.

இந்த அமைப்பின் அலுவலகம், காபூலில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் முல்லா ஒமரையும் தொடர்ந்து பின் லேடனையும் இரு விஞ்ஞானிகளும் சந்தித்தனர். அப்போது மறு சீரமைப்புப் பணிகள் குறித்தும், ஆயுதங்கள் குறித்தும் விவாதித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், அணு ஆயுதம் தொடர்பான முக்கிய தகவல்களை மஹமூத், பின் லேடனிடம் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பான பேச்சுக்கள் சூடு பிடித்த நிலையில்தான் நியூயார்க் தாக்குதல் நடந்தது. இதையடுத்து பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப்புக்கு அமெரிக்கா நெருக்குதல் தர ஆரம்பித்தது. இதையடுத்து மஹமூத்தை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்தார் முஷாரப்.

முஸ்லீம் நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை அதி விரைவாக அளிக்க மஹமூத் திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் உலக அளவில் முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர் கருதினார் என்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அணுகுண்டின் தந்தை என பாகிஸ்தானியர்களால் அழைக்கப்பட்டவர் ஏ.க்யூ. கான். இவர் ஏற்கனவே ஈரான், வட கொரியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு அணு ரகசியங்களை அளித்ததாக சர்ச்சை வெளியானது. இதையடுத்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் கான் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் பின் லேடனுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை கான் அளித்தார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X