For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரமாக பாடுபடுங்கள், அண்ணன் அழகிரி பார்த்துக் கொள்வார்: ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

Stalin
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றிக் கனி கிடைக்க தொண்டர்கள் தீவிரமாக பாடுபட வேண்டும். மற்றவற்றை அண்ணன் அழகிரி பார்த்துக் கொள்வார் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திமுகவைச் சேர்ந்த லதா அதியமான். ஆனால் அவர் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை.

ஆனால் அவருக்குப் பின்னால் அறிவிக்கப்பட்ட அதிமுகவின் முத்துராமலிங்கம், தேமுதிகவின் தனப்பாண்டியன் ஆகியோர் மனு தாக்கல் செய்து விட்டனர்.

லதா அதியமான் நியமனத்தில், மு.க.அழகிரிக்கு உடன்பாடு இல்லாததால் அவர் கோபம் கொண்டு டாப் ஸ்லிப்புக்குப் போய் விட்டார்.

இதையடுத்து மதுரைக்கு விரைந்த அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மாறன் சகோதரர்களும், அழகிரியை வரவழைத்து சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து சமாதானமடைந்த அழகிரி, லதாவின் வெற்றி குறித்து கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து நாளை திமுக வேட்பாளர் லதா வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

முன்னதாக இன்று லதா அதியமானை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான மு.க.ஸ்டாலின், லதாவை அறிமுகப்படுத்தி பேசினார்.

அண்ணன் தலைமையில் 3வது இடைத் தேர்தல் :

அப்போது அவர் பேசுகையில், லதா அதியமான் இந்த தொகுதிக்கு சொந்தக்காரர். இதே ஊரில் பிறந்து வளர்ந்தவர். அவரது கணவரும் எம்எல்ஏவாக இருந்திருக்கிறார்.

இந்த ஆட்சி அமைந்ததும் வருகின்ற 3-வது இடைத்தேர்தல் இது. ஏற்கனவே நடந்த இரண்டு இடைத்தேர்தல்களும் அண்ணன் அழகிரியின் தலைமையில்தான் நடந்துள்ளது.

அதே போல இந்த தேர்தலிலும் வெற்றிக்கனியை பறித்து தலைவரின் காலடியில் வைக்க நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.

அவரவருக்கு ஒதுக்கியுள்ள பகுதியிலேயே உண்டு, உறங்கி தேர்தல் பணியாற்ற வேண்டும். எதையும் எதிர்பாராமல் பணியாற்றினால் மற்றவற்றை அண்ணன் அழகிரி பார்த்துக் கொள்வார். அவரது ஆலோசனைபடி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்றார் ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க.அழகிரி, கண் ஆபரேஷன் செய்து கொள்ள இருப்பதால் என்னால் பணியாற்ற இயலாது என்று கடிதம் கொடுத்திருந்தேன்.

வீ்ட்டிலிருந்தபடி வெற்றிக்கனி பறிப்பேன் :

ஆனால் நீங்களெல்லாம் அழைத்ததால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். தேர்தல் பணியாற்றா விட்டாலும் வீட்டிலிருந்தபடியே வெற்றிக்கனி பறிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

எதையும் எதிர்பாராமல் பணியாற்றி எதிர்பாராத வாக்கு வித்தியாசத்தை இந்த தேர்தலில் காட்ட வேண்டும் என்றார் அழகிரி.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், கீதாஜீவன், தமிழரசி, பெரிய கருப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, மைதீன்கான், மத்திய அமைச்சர் ரகுபதி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீட்டிலிருந்தபடியே வெற்றிக்கனி பறிப்பேன் என்று அழகிரி கூறியிருப்பதால் அவர் தேர்தல் களத்தில் முழு வீச்சில் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X