For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு ஆதரவாக நரேஷ் குப்தா-தேர்தல் கமிஷனி்ல் திமுக புகார்

By Staff
Google Oneindia Tamil News

Naresh Gupta
டெல்லி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா பாரபட்சமாக செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் திமுக புகார் கூறியுள்ளது.

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியை, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து இதுதொடர்பான புகார் மனுவை அவரிடம் அளித்தார். திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முடிவு அவர்களுக்கு சாதகமாக இருக்காது என்று உணர்ந்து இடைத் தேர்தலை தள்ளி வைப்பதற்காக அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் வன்முறைகளிலும் விதி மீறல்களிலும் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றனர்.

தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை அதிமுக உணர்ந்து பணம் விநியோகிக்க தொடங்கியுள்ளனர். இதை திமுக தொண்டர்கள் தடுத்தபோது, அதிமுகவினர் திட்டமிட்டு எங்களது தொண்டர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது தாக்குதல்கள் தொடுக்கின்றனர்.

தொகுதியில் நிலைமை பதற்றமாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கி தேர்தலை ஒத்திப் போட அவர்கள் முயலுகின்றனர்.

மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் அணுகுமுறையும் தேர்தல் ஆணையத்தால் கூர்ந்து கவனிப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகவனம், என்.எஸ்.வி. சித்தன், கிருஷ்ணசாமி ஆகியோர் அதிமுகவினரின் திட்டமிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும், வன்முறைகளை தூண்டி விடுவது குறித்தும் புகார் கொடுக்க 30.12.2008 அன்று மதுரையில் அவரை சந்தித்தபோது, புகார் பற்றி பதிலளிக்காமல், அவர், இதையெல்லாம் உங்களது தலைவரிடத்தில் சொல்லுங்கள் என்று கூறி அதிர்ச்சியூட்டும் வகையில் நடந்து கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் இப்படிப்பட்ட அணுகுமுறையைக் காட்டியது வேதனைக்குரியது. இப்பிரச்சினையை விசாரித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகாரை அசட்டை செய்தது குறித்து தேவையான நடவடிக்கையை ஆணையம்தான் எடுக்க வேண்டும்.

புகார் செய்யப்பட்ட விஷயங்கள் மேல் நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றில்லை. இது திமுகவுக்கு எதிராக உள்ள பாரபட்சத்தையே தெளிவாக காட்டுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இத்தொகுதியில் 4ம் தேதி முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவர் அடியாட்களுடன் ஏராளமான கார்கள் பின் தொடரவும், அந்த நாட்களில் மிகப் பெருமளவுக்கு தொகுதியில், பணப் பட்டுவாடா செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என்று நம்பகமாக தெரிய வருகிறது. இவற்றைத் தடுப்பதற்கு உடனடியாக தக்க நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்களின் நடத்தைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுகவினர் அவரது கட்சி வேட்பாளரை கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று பொய்யான புகாரைக் கூறியுள்ளார்.

இது அப்பட்டமான பொய் என்று தெரிந்தே அவர் இப்படி வேண்டுமென்றே கூறுகிறார். இருந்தும் தொகுதியில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கத்துடன் இவ்வாறு கூறுகிறார்.

மேற்கண்ட அனைத்தையும் கவனித்து 31.12.2008 அன்று காலை திமுக தலைவர், திமுக தொண்டர்கள் அதிபட்ச பொறுமையும், முழுமையான சகிப்புத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என உருக்கமாக அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுகவைப் பொருத்தமட்டில், நாங்கள் இடைத் தேர்தலை சுமூகமான முறையில் நடத்த ஒத்துழைப்பை உறுதி செய்கிறோம். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் சட்டம் ஒழுங்கை மதித்து, கடுமையான ஆத்திரமூட்டுதல், எங்கள் தொண்டர்கள் மீதான தொடர்ந்து தாக்குதல் ஆகியவற்றை மீறி, நாங்கள் சகிப்புத்தன்மையுடன் அமைதி காத்து இடைத் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதி கூறுகிறோம்.

சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வரும் அதிமுக மீது தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவுடன், முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் ஆங்கில மொழியாக்கமும் இணைக்கப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X