For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் சென்னை வெளிநாட்டு இந்தியர் மாநாடு-வரலாறு காணாத பாதுகாப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Chennai Trade Centre
சென்னை: வெளிநாட்டு இந்தியர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு டெக்கன் முஜாகிதீன் அமைப்பிடமிருந்து மிரட்டல் இ-மெயிலும், இன்னொரு மிரட்டல் கடிதமும் வந்துள்ளதையடுத்து வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டை இன்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் நாளை பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். இதற்காக இன்றிரவு அவர் சென்னை வருகிறார்.

9ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டில் பங்கேற்று நிறைவுரை ஆற்றுகிறார். இதில் மொரீஷியஸ் நாட்டு துணை அதிபர் அங்கிடி ஹெட்டியார், மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டுக்கு டெக்கன் முஜாகிதீன்' என்ற அமைப்பின் பெயரில் இ-மெயில் மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாகவே மாநாடு நடக்கும் பகுதி, போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது.

இந் நிலையில் எழும்பூரில் உள்ள ஏர்-இந்தியா விமான நிறுவனத்துக்கு நேற்று வந்த ஒரு கடிதத்தில்,

லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஜமாத் உத் தாவா ஆகிய அமைப்புகள் 10 மனித வெடிகுண்டுகளை சென்னைக்கு அனுப்பியுள்ளாகவும், அவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி செல்லும் பாதையில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவார்கள் என்றும்,

அவர்கள் ஏ.கே. 47 துப்பாக்கிகள் உட்பட நவீன ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என்றும், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் அருகே தாக்குதலை எதிர்நோக்கி அவர்கள் காத்திருப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் காரைக்காலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்காலுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

அதே நேரத்தில் சென்னையில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநில போலீசார், உளவுப் பிரிவினருடன் ஐபி, ரா அதிகாரிகளும், தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்எஸ்ஜி பிரிவின் அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் கண்காணித்து வருகின்றனர்.

வர்த்தக மைய பகுதியில் மட்டும் சுமார் 3,000 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மோப்ப நாய்கள், வெடி குண்டு நிபுணர்கள், ஆம்புலன்ஸ்கள், ஜாமர்கள் என வர்த்தக மையமே பாதுகாப்பு கோட்டையாக மாறியுள்ளது.

2 போலீஸ் டி.ஐ.ஜிக்கள், 7 எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் இந்த பாதுகாப்புப் பணிகளை செய்துள்ளனர். சென்னை நகர், விமான நிலையம், முக்கிய ஹோட்டல்கள், விருந்தினர்கள் தங்கும் இடங்கள், ராஜ்பவன், தூதரகங்கள், பாலங்கள், வர்த்தக மையத்துக்குச் செல்லும் பாதைகள் என அனைத்து இடங்களிலும் 10,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

அதிவிரைவுப் படை, அதிரடிப்படை போலீசாரும் இந்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடையாள அட்டை இல்லாத யாரும் மாநாட்டுப் பகுதியை நெருங்கவே முடியாத அளவுக்கு தீவிர சோதனைகளும் நடக்கின்றன.

நாளை போக்குவரத்து மாற்றம்:

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சென்னை வருகையையொட்டி சென்னையில் நாளையும் மறுதினமும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புறநகர் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை வர்த்தக மையம் மற்றும் மதுரவாயல் பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் 8, 9ம் தேதிகளில் வருகை தர இருப்பதால் வாகன ஓட்டிகள் புனித தோமையார் மலை பட்ரோடு மற்றும் மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகியவைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பூந்தமல்லி மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து விமான நிலையம் செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் குமணன் சாவடி, மாங்காடு, குன்றத்தூர், பல்லாவரம் வழியாக சென்று ஜிஎஸ்டி சாலையை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோன்று 8.01.09ம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9.01.09ம் தேதி பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கிண்டி மற்றும் அண்ணாசாலை பகுதிகளிலிருந்து போரூர் செல்லும் வாகன ஓட்டிகள் பட்ரோட்டை தவிர்த்து ஆற்காடு சாலை வழியாக பாதை மாற்றி செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோன்று 8.01.09ம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், 9.01.09ம் தேதி பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் வேலூர் வழியாக செல்லும் நெடுந்தூர பேருந்துகள் மதுரவாயல் சாலை வழியாகவும், மேலே சொன்ன ஊர்களிலிருந்து வரும் பேருந்துகள் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X