பிரபாகரன் மாவீரன் - புலிகள் சரணடைய மாட்டார்கள்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலாற்றுக்கு முன்பும் சரி, வரலாற்றுக்கு பின்பும் சரி பிரபாகரன் போல மாவீரன் உலகத்தில் இதுவரை பிறக்கவில்லை. அப்படிப்பட்ட விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரண் அடையமாட்டார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சிங்கள அரசு இலங்கை தமிழர்கள் மீது நடத்திவரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒரு விடுதலைப் போராட்டக் குழுவை எதிர்க்க அல்லது அடக்க ஒன்றல்ல... இரண்டல்ல... ஏழுநாட்டுப் படைகளும், ஏராளமாய் ஆயுதங்களும், போதாததற்கு இனத் துரோகிகளும் வேலை பார்த்துவரும் கொடுமையை உலகில் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா நண்பர்களே... அது இலங்கையில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈழம் மலர பிரபாகரன் தலைமையில் உயிரைத் தந்து போராடிக் கொண்டிருக்கும் எமது சகோதரர்களை எதிர்த்து எத்தனை நாட்டுப் படைகள்... எவ்வளவு ஆயுதங்கள்... எத்தனை துரோகங்கள்!

விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழர்களும் சரண் அடைய வேண்டும் என்று சொல்லுவதாக பொருள். இவ்வாறு கூறுவது தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்தும் செயல்.

வரலாற்றுக்கு முன்பும் சரி, வரலாற்றுக்கு பின்பும் சரி பிரபாகரன் போல மாவீரன் உலகத்தில் இதுவரை பிறக்கவில்லை. அப்படிப்பட்ட விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரண் அடையமாட்டார்கள். மண்டியிட்டு வாழ வேண்டும் என்ற நிலையில் தமிழ் சமூகம் இல்லை.

மாவீரன் பிரபாகரனை அரசியல்வாதிகளால் கேவலப் படுத்துவதை விடுதலை சிறுத்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது. பிரபாகரனை வரலாற்று நாயகனாகப் பார்ப்பது எம் இனத்தின் உரிமை... அதற்கு தடைபோட எந்த சட்டத்தாலும் முடியாது.

பாகிஸ்தான், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்பட பல அரசுகள் சிங்களவர்களுக்கு துணைபோகின்றன. கழுத்தை வளைப்பதுபோல சுற்றிவளைத்து இருக்கும் நிலையில் கூட மண்டியிட்டு வாழ்வதைவிட போராடி சாவதே மேல் என்று விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழன் எந்த அளவுக்கு சுரணை கெட்டவன் என்று எண்ணி இருந்தால் விடுதலைப்புலிகள் சரண் அடைய வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து கொண்டு சொல்லியிருக்க முடியும்.

பதவிக்காக, ஓட்டுக்காக வாழ்கின்றவர்கள் விடுதலைப்புலிகள் இல்லை. உணவுக்கு வழி இல்லை என்றாலும், உறக்கத்திற்கு வழி இல்லை என்றாலும் கடைசி வரை நிமிர்ந்து நின்று போராடி வருகிற நெஞ்சுரம் படைத்த போராளிகளை பார்த்து சரண் அடையவேண்டும் என்று சொல்வது வெட்கக்கேடாக இருக்கிறது. மானக்கேடாக இருக்கிறது.

இந்திய அரசு இன்றைக்கு எத்தனை ஆயுதங்களை அனுப்பினாலும், எத்தனை வீரர்களை அனுப்பினாலும் அவர்களுக்கும் சேர்த்து சவுக்கடிகொடுத்து விடுதலைப்புலிகள் வெற்றி காண்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

விடுதலைப்புலிகள் மரபுவழி இராணுவ போரை நடத்திக்கொண்டு இருக்கிற நிலையில் இருந்து மாறி கொரில்லா போரை கையில் எடுத்தால் அந்த போராட்டத்தை எந்த கொம்பனாலும் நசுக்க முடியாது. ஆயிரம் ராஜபக்சே வந்தாலும், ஆயிரம் மன்மோகன் சிங் வந்தாலும் அந்த போராட்டத்தை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது.

அடுத்தமாதம் 3-ந் தேதி கூட்ட இருக்கும் தி.மு.க. செயற்குழுவில் இந்திய அரசை பணியவைப்பதற்கான நல்ல முடிவை தமிழக முதல்வர் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள்... விடுதலைச் சிறுத்தைகளும் காத்திருக்கிறோம்...' என்றார் திருமாவளவன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...