For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்த் ஆரம்பம்தான் - மேலும் போராட்டம் வலுக்கும் ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: பந்த் ஒரு ஆரம்பம்தான். இதை விட மேலும் பல போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கை தமிழர் நலம்காக்க கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராயர் அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ராமதாஸ் பேசுகையல்,

பொது வேலை நிறுத்தத்தை அமைதியான வழியில் நடத்தவேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும், வேண்டுகோளும் ஆகும். இந்த போராட்டம் திசை திருப்பி விடப்படக் கூடாது. இதில் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று இளைஞர்களையும், மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல் நோக்கம் இல்லை...

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை அரசியல் நோக்கத்திற்காக தோற்றுவிக்கவில்லை என்பதை எல்லோரும் உணரவேண்டும்.

எந்த விதமான வன்முறைகளிலும் மாணவர்களும் மற்றவர்களும் ஈடுபடக் கூடாது. போரை நிறுத்தும்படி பொது வேலை நிறுத்தம் உள்பட இரண்டு கட்ட போராட்டங்களை முதல் கட்டமாக அறிவித்திருக்கிறோம்.

மேலும் பல போராட்டங்களை இந்த இயக்கம் தொடர்ந்து நடத்தஇருக்கிறது. இந்த போராட்டத்தின் போது யாரையும் விமர்சனம் செய்து துண்டு பிரசுரம் அடிக்கக்கூடாது.

உருவபொம்மையை எரிப்பது, தலைவர்களின் சிலையை அவமதிப்பது, அரசியல் கட்சிகளின் கொடியை எரிப்பது, வாகங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களுக்கு அறவே இடம்கொடுக்கக்கூடாது என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்று அறிவிக்கவில்லை. இலங்கை அமைச்சர் குமாரசிங்கா அளித்த பேட்டியில் நாங்கள் போர் நிறுத்தம் செய்ததாக இந்திய அரசு தவறாக சொல்லிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

நேற்று கூட 27 தமிழர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டு உள்ளனர். குண்டுவீச்சு நிறுத்தப்படவில்லை. மேலும் தமிழ்மக்களை கொல்வதற்கே முனைந்து நிற்கிறார்கள். இன்னும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்ற வகையில் 4-ந் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் அமையவேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,

4-ந் தேதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். 4-ந் தேதிதான் இலங்கை விடுதலை பெற்ற நாள். அந்த நாளில் எங்கள் தமிழ் மக்களும் விடுதலை பெறவேண்டும்.

4-ந் தேதி அன்று யாரும் எந்த பணிக்கும் செல்லாமல் அவர் அவர் வீட்டில் தங்கியிருக்கவேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். நாம் நடத்தும் போராட்டத்தில் பொது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்றார்.

பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் ஜி.கே.மணி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மருது அழகுராஜா, கவிஞர் புலமைபித்தன், திருவாடுதுறை ஆதினம் முத்துக்குமார் தம்பிரான் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பேசினர்.

முன்னதாக டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில்,

இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, தோற்றுவிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின்'' நடவடிக்கைகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளும், வழிமுறைகளும் தெளிவாக வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தலைவர்களின் உருவ பொம்மை எரிப்பு, தலைவர்களின் சிலைகளுக்கு அவமதிப்பு, அரசியல் கட்சிக் கொடி எரிப்பு, வாகனங்களை சேதப்படுத்துதல், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு இடைiறு ஏற்படுத்துதல் போன்ற சம்பவங்களுக்கு அறவே இடம் கொடுக்க கூடாது என்று கண்டிப்பான முறையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எனினும், 31-ந் தேதி மாலை சென்னையில் நடைபெற்ற இளைஞர் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற நிகழ்வுகளை இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி தவிர்ப்பது அவசியம்.

நாம் யாருடைய நலனுக்காக இங்கே இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்படுகிறோமோ, அந்த இலங்கைத் தமிழர்களே கூட தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை விரும்ப மாட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களின் நலன்தான் நமக்கு முக்கியம். மற்ற எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X