For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கின-3000 பறக்கும் படைகள்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிளஸ்டூ பொதுத் தேர்வு இன்று முதல் தொடங்கின. இதையொட்டி 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25-ந் தேதியும், மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 18-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.

மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் 1,738 மையங்களில் தேர்வு நடக்கிறது.

3000 பறக்கும் படைகள்

தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி' அடிப்பதை தடுக்கும் வகையில் 3 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் தலைமையில் இயங்கும் பறக்கும் படையினர் தினசரி ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.

பறக்கும் படையினர் தவிர மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு பறக்கும் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படையினர் தொழிற்கல்வி சேர்க்கைக்கு முக்கிய பாடங்களாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட தேர்வு நாட்களில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள்.

தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் விரிவாக செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 47,857 மாணவ-மாணவிகள் 135 மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். 20 மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு பணியில் 3,160 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 150 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி தெரிவித்தார்.

இதற்கிடையே, பள்ளிக் கல்வித்துறைக்கு தனி இணைய தளம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு அதன் தொடக்கவிழா நேற்று சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் (www.pallikalvi.in).

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

பள்ளிக்கல்வித்துறையின் 7 இயக்குனரகங்களும் ஒன்றிணைந்து அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையிலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் தேவைகளை உருவாக்குவதிலும் இந்த இணையதளம் செயல்படும்.

தகவல்கள், புள்ளி விவரங்கள் ஆகியவை இணையதளம் வழி நேரடியாக பெறமுடியும். பள்ளிக்கல்வித்துறையின் அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் முழுவிவரமும், பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். எவ்வளவு காலியிடங்கள் உள்ளன, தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் பெறமுடியும். எந்த பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிப்பை நிறுத்தி உள்ளனர் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் 3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த பள்ளிகளில் 1 கோடியே 50 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் பயன்படும்.

தகவல் தொழில்நுட்பம் மூலம் வகுப்பறையில் கல்வி கற்பிக்கும் முறை, கல்விக்கான செயற்கை கோள்மூலம் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் ஆகியவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த இணையதளத்தை உருவாக்க உதவியாக இருந்த பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அறிவொளி, துணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொழில்நுட்ப ஆலோசகர்கள் தணிகை அரசு, செந்தில், தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ஆகியோரை பாராட்டுகிறேன். இன்னும் ஒரு மாதத்தில் தமிழில் இந்த இணையதளம் உருவாக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி 23-ம் தேதி வரை நடக்கிறது. 5 ஆயிரத்து 40 பள்ளிகளைச் சேர்ந்த 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிளஸ்-2, 10-வது வகுப்பு தேர்வுகள் அனைத்தும் எந்த வித முறைகேடும் இன்றி பாதுகாப்பாகவும், அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பிளஸ்-2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் ஆகிய 4 பாட தேர்வுகளிலும் தேர்வு மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அதேபோல தேர்வுகளின்போது கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், கல்வித்துறை இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பறக்கும் படையினர் தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணிப்பார்கள்.

பிளஸ்-2 அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை முடிவு வெளியிட்ட உடன் இலவசமாக அறிய பள்ளிக்கல்வி இணையதளத்தில் இப்போதே மாணவர்கள் தங்கள் தேர்வு ரிஜிஸ்டர் எண் மற்றும் தங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை இப்போதே பதிவு செய்துகொள்ளலாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X