For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டிஷ் தூதரகத்தில் வைகோ-நெடுமாறன் மனு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சென்னையில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதரகத்தில் இன்று தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி பாமக எம்.பி. ராமதாஸ் உள்ளிட்டோர் இன்று இங்கிலாந்து துணைத் தூதரகத்திற்கு வந்தனர்.

அங்கு துணைத் தூதரை சந்தித்து இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நெடுமாறன் கூறுகையில், இலங்கையை 200 ஆண்டு காலம் ஆண்ட நாடு இங்கிலாந்து. எனவே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் கடமை, தார்மீகப் பொறுப்பு, உரிமை இங்கிலாந்துக்கு உள்ளது என்பதை மனுவில் சுட்டிக் காட்டியுள்ளோம் என்றார்.

வைகோ கூறுகையில், இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி 2 பேரிடம் கையெழுத்து வாங்கி வருகிறோம். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர் என்றார்.

இலங்கை தூதரகத்தை மூடும் போராட்டம்:

இதற்கிடையே, தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவேந்தன் தலைமை தாங்கினார்.

காலை 11.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் பூட்டு, சங்கிலியுடன் அவர்கள் வந்தனர். அப்போது, தமிழீழ விடுதலை போராட்டத்தில் இந்திய அரசு தலையிடக் கூடாது, இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும். தமிழீழத்தை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும்.

இந்தியாவும், உலக நாடுகளும் விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை போலீசார் வழிமறித்து கைது செய்தனர். மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

உதவிகளை கைவிட வேண்டும்-ராமதாஸ்:

இந்த நிலையில், போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள இலங்கையுடன் பொருளாதார மற்றும் கடன் உதவி திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

போர் நிறுத்தம் செய்ய விடுதலைப் புலிகள் முன்வந்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கை அரசும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துவிட்டது.

இனி, இந்தியா என்ன செய்யப் போகிறது? கோரிக்கை விடுத்தோம்; அவர்கள் கேட்கவில்லை என்ற நிலையை மேற்கொண்டால், போரை நிறுத்தம் வேண்டும் என்று தூத்துக்குடிக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதும், அது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டதும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தத்தால் செய்யப்பட்டவை என்று கருதுவதற்கு இடம் கொடுத்துவிடும்.

எனவே, சிங்களப் போர்ப்படையினரின் கொடூரத் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்களைக் காக்க இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டுமானால், இந்திய அரசு அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர்ப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான வேறு பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டினை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும். போர்ப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் வேறு எங்கிருந்தோ, அழைத்துவரப்பட்டவர்கள் அல்ல. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடங்களில் தான் தமிழ் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

அன்றாடம் எறிகணைகளை வீசியும், கொத்துக் குண்டுகளால் தாக்கியும் அவர்களை சிங்களப் படையினர் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் மூலம் தமிழ் மக்களை அவர்களது வாழ் நிலங்களை விட்டு வெளியேறச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு விரும்புகிறது.

இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது. ஒரு பகுதி மக்களை அவர்களது வாழ் நிலங்களிலிருந்து வெளியேற்றுவது என்ற நடவடிக்கை இதுவரையில் உலகில் எந்த ஒரு நிலப்பரப்பிலும் நடைபெற்றிராத கொடுமையாகும்.

போர்ப் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களைக் காப்பாற்ற அங்கிருந்து அவர்களை வெளியேறச் செய்யும் முயற்சியைக் கைவிட்டு விட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா உடனடியாக வழங்க வேண்டும். கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து அவற்றை இலங்கை அரசின் அதிகாரிகளின் கையில் கொடுத்து தமிழர்களுக்கு உதவுவது என்பது இனி சாத்தியமில்லை.

எனவே, 1987-ம் ஆண்டில் செய்ததைப் போன்று நமது விமானப்படை விமானங்கள் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களிடையே போடச் செய்ய வேண்டும்.

அத்துடன், இலங்கை அரசுடனான பொருளாதார மற்றும் கடன் உதவித் திட்டங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக இலங்கை அரசுக்கு இனி எத்தகைய உதவிகளையும் வழங்க மாட்டோம் என்று ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அறிவித்திருக்கின்றன.

உலக நாடுகள் உதவ முன்வராத நிலையில், இந்தியா மட்டும் இலங்கைக்குத் தொடர்ந்து கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அதற்கும் மேலாக மறுவாழ்வுத் திட்டப் பணிகளுக்கு உதவப் போவதாகவும் இந்தியா அறிவித்திருக்கிறது. இவற்றையெல்லாம் மறு பரிசீலனை செய்வோம் என்று அறிவிக்க வேண்டும்.

இலங்கையுடனான அனைத்து தொழில் திட்ட உடன்பாடுகளையும், மின்னுற்பத்தித் திட்ட உடன்பாடுகளையும் கைவிட வேண்டும். இலங்கை சென்றுள்ள இந்திய தொழில்நுட்பப்பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். முன்பு தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக்கு எதிராக இந்திய அரசு அதனுடன் எத்தகைய விளையாட்டு உறவுகளையும் வைத்துக் கொள்ளவில்லை.

அது போல, இலங்கையுடன் இனி விளையாட்டு உறவுகளை வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். குறிப்பாக, இலங்கையுடன் இனி கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும், இலங்கைக்கு தடை விதிக்கவும் முயற்சிப்போம் என்று இந்தியா அறிவிக்க வேண்டும்.

இப்படி தீவிர நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே இலங்கை அரசை வழிக்கு கொண்டு வர முடியும். அதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்து தமிழ் மக்களின் துன்பங்களைத் துடைத்து அவர்களின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வுகாணவும் முடியும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X