For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல்களாக மாறிய மனுதாரரர்கள்: தமிழில் வாதம்- உதவிய நீதிபதிகள்- கோர்ட்களில் வினோதம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Chennai High Court
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முதல் வழக்கு விசாரணைகள் தொடங்கின. வக்கீல்கள் இல்லாததால், மனுதாரர்களே ஆஜராகி வாதாடி, உத்தரவுகளைப் பெற்றுச் சென்றனர். பெரும்பாலானோர் தமிழிலேயே வாதாடினர். அவர்களுக்கு நீதிபதிகள் உதவியாக இருந்தனர். பலருக்கு இடைக்கால தீர்ப்புகளையும் நீதிபதிகள் அளித்தனர்.

தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று வக்கீல்கள் அறிவித்து விட்டனர். இதையடுத்து நேற்று முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணை தொடங்கப்பட வேண்டும். வக்கீல்கள் வராவிட்டால் வழக்கின் தன்மையைப் பொறுத்து அவற்றை தள்ளுபடி செய்வது குறித்து நீதிபதிகள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் மாலா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று முதல் உயர்நீதிமன்றம் முதல் அனைத்து கோர்ட்களிலும் விசாரணை தொடங்கியது. அரசு வக்கீல்களைத் தவிர வேறு வக்கீல்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும், மனுதாரர்கள் நலனுக்காக சிறப்பு இலவச சட்ட ஆலோசனை முகாம்களை வக்கீல்கள் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் உள்பட 4 இடங்களில் வக்கீல்கள் இலவச சட்ட உதவி முகாம் நடத்தினர்.

பெண் வக்கீல் சங்கத்தினர் அதன் தலைவி சாந்தகுமாரி தலைமையில் குடும்பநல கோர்ட்டு முன்பு இலவச சட்ட உதவி முகாம் நடத்தினார்கள்.

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்தவர்களை வக்கீல்கள் அழைத்து நாற்காலியில் உட்கார வைத்து தேவையான சட்ட உதவிகளைச் செய்தனர். புதிதாக வழக்கு தொடர வந்தவர்களுக்கு மனு எப்படி எழுதுவது? எப்படி அதைத் தாக்கல் செய்வது? என்பன போன்ற விவரங்களை கூறினார்கள்.

இதையடுத்து நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களே நேரில் ஆஜராகி வாதாடினர். பெரும்பாலானோர் தமிழிலேயே (நீதிமன்றங்களின் ஆட்சி மொழி ஆங்கிலம்) வாதாடினர்.

அவர்களது வாதங்களை நீதிபதிகள் பொறுமையாக கேட்டனர். மனுதாரர்கள் தடுமாறியபோது அவர்களை அமைதிப்படுத்தி, நிதானமாக பேசுமாறும் நீதிபதிகள் உதவினர்.

பல வழக்குகளில் இடைக்காலத் தீர்ப்புகளும் அளிக்கப்பட்டன. உயர்நீதிமன்ற வரலாற்றில் மனுதாரர்களே முழுக்க முழுக்க வாதாடிய வினோதம் நேற்றுதான் நடந்தது.

70 வயது பாட்டியின் வாதம்...

உயர்நீதிமன்றத்தில் 70 வயது பாட்டி ஒருவர் நேற்று ஆஜராகி வாதாடிய காட்சியும் நிகழ்ந்தது.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே உள்ள கோதண்டபாணிபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்ற பாட்டி ( 70) ஐகோர்ட்டின் 34-வது கோர்ட்டுக்கு நேற்று வந்தார். அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி சுதாகர் முன்பு அந்த பாட்டி ஆஜராகி வாதாடினார்.

பாட்டி கூறுகையில், ஐயா, எனது கணவர் இறந்துவிட்டார். அதற்காக அரசு பணம் தரவில்லை என்று நீதிபதியிடம் கூறினார். அதற்கு நீதிபதி சுதாகர் கூறுகையில், கணவனை இழந்தவர்கள் எல்லோருக்கும் அரசு நிதி உதவி செய்ய முடியுமா? உங்கள் கணவர் எப்படி இறந்தார் என்று கேட்டார்.

அதற்குப் பாட்டி, ஐயா, எனது கணவர் விபத்தில் இறந்துவிட்டார். எனது மூத்த மகனை போலீசார் அழைத்துப் போய் கொன்றுவிட்டனர். என்னிடம் இருந்த இடத்தையும் பிடுங்கிக் கொண்டனர். என் சொந்த ஊரில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு வருமானம் இல்லை ஐயா என்று இயல்பாக பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி, உங்களிடம் உள்ள அனைத்து குறைகளையும் பட்டியல் போட்டு கொடுத்து விடுங்கள். அதுபற்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி.யை கேட்கச் சொல்கிறேன். உங்கள் கணவர் இறந்ததற்கு ரூ.25 ஆயிரம் தர வேண்டும், மகனுக்கு வேலை கொடுக்க வேண்டும், விதவை பென்ஷன் வேண்டும் என்பது போல வேறு கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் தெரிவியுங்கள் என்று கூறினார். இந்த வழக்கு விசாரணை கலகலப்பாகவும், அவ்வப்போது உருக்கமாகவும் நடந்தது.

அதையடுத்து அங்கிருந்த அரசு வக்கீலிடம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் இந்த அம்மா தொடர்பான விவரங்களை தெரிவித்து என்ன வழக்கு நிலுவையில் உள்ளது, கோரிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று கேட்டு கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார்.

கிட்டத்தட்ட 20 நிமிட நேரம் பாட்டி வாதம் புரிந்தார். வழக்கு விசாரணை முடிந்து பாட்டி கையில் கோப்புகளுடன் வெளியே வந்ததைப் பார்த்தபோது வக்கீல் கவுன் போடாத ஒரு மூத்த வக்கீல் வருவதைப் போல இருந்தது.

எந்தவித பயமும், தயக்கமும், குழப்பமும் இல்லாமல் கை தேர்ந்த வக்கீலைப் போல பாட்டி வாதாடியதாக அரசு வக்கீல்கள் பாராட்டினர்.

அதற்குப் பாட்டி பதிலுக்கு, நான் குமரியாக இருந்தபோதே பல வழக்குகளைப் போட்டுள்ளேன். இப்போது வயதாகி விட்டதால் ஓய்ந்து விட மாட்டேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை விட மாட்டேன் என்று வீராவேசமாக கூறியதைப் பார்த்து பலரும் அதிசயித்தனர்.

இதே காட்சிதான் தமிழக கோர்ட்டுகளில் காணப்பட்டது.

மனுதாரர்கள் தமிழில் வாதாடியதைப் பார்த்த நீதிபதிகளும் தமிழிலேயே அவர்களுடன் பேசினர். பல ஜாமீன் வழக்குகளில் ஜாமீன் வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X