தவறு செய்தால் தயவு தாட்சன்யம் இன்றி தண்டனை - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil
Karunanidhi
சென்னை: நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.உள்ளார்.

இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

அடித்தட்டு மக்களையும், விவசாயப்பெருங்குடி மக்களையும், நடுத்தர மக்களையும்-அவர்களுள் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிட மக்கள் ஆகியோரும் அணி அணியாகச்சேர்ந்து திராவிடர் கழகம் திக்கெட்டும் கொள்கைபரப்பிய அந்தக் கால கட்டத்தில், 1949-ம் ஆண்டில் பிரளயம் ஒன்று வந்தது போல் இயக்கத்தில் ஒரு பிளவு வந்தது.

பெரியார் தலைமையில் திராவிடர் கழகமும், அண்ணாவின் வழி காட்டுதலில் திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட தமிழ் மக்களுக்கு இரட்டைக் குழல் துப்பாக்கியாக அமைந்து-சமுதாய முற்போக்குப் பணியை; திராவிடர் கழகமும் - சமுதாயம் முற்போக்கு அடைய அரசியல் துணையும் தேவையென்ற வகையில்; திராவிட முன்னேற்றக் கழகமும்-நிலைகள் எடுத்து இயங்கின.

திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் சிந்தனையோட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை லட்சியங்களையும்-சாதி சமய வேறுபாடற்றதுமான சமுதாய நலத் திட்டங்களை சட்டங்களாக்குவதற்கும்-எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும்-திராவிடர் கழகத்தின் பிரச்சாரமெனும் பெரும் தொண்டு ஒரு புறம் இருந்தாலும், அந்தத் தொண்டினைச் செயல்வடிவம் கொடுத்து சட்ட ரீதியாக ஆக்குவதற்கு தி.மு.கழகம் ஆட்சி மன்றங்களுக்கு சென்றால் என்ன என்ற கேள்வியெழுந்து அது விரிவாக கழகத்தின் அமைப்புகளிலே விவாதிக்கப்பட்ட போது தான் 1956-ம் ஆண்டு திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் குழுமியிருக்கிற கழகத்தினரிடத்தில் நாம் ஆட்சி மன்றங்களுக்குச் செல்லலாமா? வேண்டாமா? என்பதை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வோம் என்று அண்ணா கூறியதற்கிணங்க அந்த மாநாட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மிகப் பெரும்பாலான வாக்குகள் தி.மு.க.; தனது லட்சியங்களையும் சமூக முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு தேர்தலில் நின்று ஆட்சி மன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அளவில் தேர்தலுக்கு நிற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துப்படி தேர்தலிலே நின்று வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்த காரணத்தால் தான் பெண் உரிமைக்கான தீர்மானங்களைப் போல-புரட்சிகரமான தீர்மானங்களை-சட்டங்களாக ஆக்க முடிந்தது என்கிற போது-அரசியல்-தேர்தல்-ஆட்சிப் பொறுப்பு- இவை சமுதாய முன்னேற்றத்திற்கானதும், சமத்துவ நெறிகளைக் கடைப்பிடிக்கக் கூடியதுமான தீர்மானங்களுக்கு உயிர் கொடுக்கும் சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.

உதாரணமாக-

- சென்னை ராஜ்யத்துக்கு "தமிழ்நாடு'' என்று பெயர்.

- ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி; ஒரு கிலோ ஒரு ரூபாய் வீதம்.

- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கச் செய்து, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இத்திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடிட, ஒரு கோடியே 84 இலட்சம் குடும்பங்களுக்கு 80 கோடி ரூபாய் செலவில் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம் ஆகியன.

- 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் ரத்து.

- உழவரும் நுகர்வோரும் பெரும்பயன் அடைந்திட மாநிலமெங்கும் 117 உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் திறப்பு.

- 3 லட்சத்து 74 ஆயிரத்து 357 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 104 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை.

- 1374 கோடியே 54 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் இதுவரை 56 லட்சத்து 26 ஆயிரத்து 557 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.

- 220 கோடி ரூபாய் செலவில் 11 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்

- 2 லட்சத்து 10 ஆயிரத்து 289 ஏக்கர் நிலம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 159 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசம்.

- 6 லட்சத்து 54 ஆயிரத்து 308 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்.

- 73 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்கு வாரம் 3 முறை முட்டைகள், வாழைப்பழங்கள்.

- தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும் 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.

- 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மற்றும் சலுகைக் கட்டணத்தில் பஸ் பாஸ்.

- 2 லட்சத்து 14 ஆயிரத்து 189 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 335 கோடியே 89 லட்சம் ரூபாய் திருமண நிதி உதவி.

- 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 487 கோடியே 56 லட்ச ரூபாய் நிதி உதவி.

- 1 லட்சத்து 42 ஆயிரத்து 369 கைத்தறி நெசவாளர்களுக்கும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 182 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சுயநிதித் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்.

- 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 176 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் உதவித்தொகை.

- 3 லட்சம் இளைஞர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்.

- 15 லட்சத்து 29 ஆயிரத்து 582 முதியோர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு மாதம் 400 ரூபாய் வீதம் உதவித் தொகை.

- 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம்.

இவை அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க முடிவெடுத்து நின்று - வென்று - ஆட்சிப் பொறுப்பில் 19 ஆண்டுக் காலம் இருந்ததால் - இருப்பதால் ஏற்பட்டுள்ள பயன்கள் என்பதை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போர் எவரும் மறுக்க முடியாது.

உடன்பிறப்பே, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அண்ணா இல்லத்தில் மாடி தாழ்வாரத்தில் அண்ணாவும், நாவலர் நெடுஞ்செழியனும், நானும், பேராசிரியர் அன்பழகனாரும், அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசனும் மற்றும் கழக முன்னணியினரும் ஆவலோடு அமர்ந்திருக்கிறோம். எதற்காக அந்த ஆவல் தெரியுமா?

1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அன்று பிற்பகலில் இருந்து வானொலி மூலமாக வெளியிடப்பட்டன. பிற்பகல் 3 மணி அளவில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50 தொகுதிகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றது என்று வானொலி அறிவித்தது. அடுத்து எந்த தொகுதி, யாருக்கு வெற்றி என்று அறிவதிலே தான் எங்களுடைய கவனம் எல்லாம் இருந்தது. 50 என்ற எண்ணிக்கைக்கு பிறகு 60, 70, 80, 100 என்று கழக வேட்பாளர்களின் வெற்றிச் செய்திகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அண்ணாவோடு அமர்ந்திருந்த எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நுங்கம்பாக்கம் தெருக்களில் எல்லாம் கழகத்தினர் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்தனர். 100 பேர் வெற்றி என்றிருந்த கணக்கு- 101 என்றும், 102 என்றும் பெருகத் தொடங்கியது.

எல்லோருடைய முகத்திலும் "பளீர்'' சிரிப்பு. அண்ணா முகம் மாத்திரம் வாடியிருந்தது. நாங்கள் கேட்டோம் அண்ணாவைப் பார்த்து. "என்ன அண்ணா? வெற்றி செய்திகள் வரவர நாங்கள் எல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகிறோம். நீங்கள் மாத்திரம் சோகமாக இருக்கிறீர்களே'' என்று கேட்டோம். அதற்கு அண்ணா சற்று தழுதழுத்த குரலிலே சொன்னார். "நாம் பெற்ற வெற்றி 100 பேர் என்ற அளவில் நின்றிருந்தால் ஒரு பலமான எதிர்க்கட்சியாக இருந்து- சட்டமன்றத்திலே செயல்பட்டு-மேலும் நம்முடைய கழகத்தை வலிவும் பொலிவும் உள்ளதாக ஆக்கியிருக்கலாம். 100-க்கு மேல் போய் விட்டது. ஆட்சி வந்து விட்டால் கழகத்தை எப்படி காப்பாற்ற போகிறோமோ என்ற சிந்தனை தான் என் சோகத்திற்குக் காரணம்'' என்று சொன்னார்.

எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது அண்ணாவின் நிலை. பரிசு சீட்டில் திடீரென்று ஆயிரமோ, பத்தாயிரமோ கிடைத்தால்-அது கிடைத்தவன் எப்படி துள்ளிக் குதித்து என்னென்ன செலவு செய்யலாம் என்று "டாம்பீகமாக'' கனவுகளைக் காண்பானோ-அது போன்று கழகமும் இருந்து விடக் கூடாதே என்பது தான் அண்ணாவுக்கு ஏற்பட்ட கவலை. அந்தக் கவலை அண்ணாவிற்கு ஏற்படாமல் நாங்கள் எல்லாம் துணை நிற்போம் என்று அவருக்கு உறுதி அளித்த பிறகு தான் 1967-ல் கிடைத்த அந்த வெற்றி மலரின் இதழை முகர்ந்து பார்க்க முனைந்தார்.

அவர் அன்று அடைந்த கவலையின் எதிரொலி போல- சில மாதங்களுக்கெல்லாம் தஞ்சை கீழ்வெண்மணியில் நடைபெற்ற நிகழ்ச்சி அமைந்து அவர் கண்களைக் குளமாக்கியது. உடனடியாக அங்கே செல்லுமாறு அண்ணா என்னையும், அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்துவையும், மன்னையையும் பணித்தார். அதற்கடுத்து-இரண்டாண்டு கால அவருடைய ஆட்சியிலே தான் பஸ் தொழிலாளர்கள்-மாணவர்கள் கலவரம். மாணவர் விடுதிக்கு அண்ணாவே நேராகச் சென்றார். என்னையும், அமைச்சர் கோவிந்தசாமியையும் கிளர்ச்சி நடக்கும் இடத்திற்கே அனுப்பினார். அமைதியை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும், அவர் பட்டபாடுகளும் இன்றைக்கும் என் கண் முன்னால் காட்சிகளாக நிற்கின்றன.

இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு- அவரை நம்மிடமிருந்து பிரிக்க யாராலும் இயலாது என்று நாம் இறுமாந்திருந்த நேரத்தில்-"இதோ, நான் இருக்கிறேன், அந்தக் காரியத்தைச் செய்ய'' என்று ஒரு கொடிய நோய் அவரைப் பற்றிக் கொண்டு - உள்ளத்தால் அல்ல, உடலால் அவரை நம்மிடமிருந்து பிரித்தது.

அவருக்குப் பிறகு அவர் ஏற்றிருந்த பொறுப்பு என் தோளில் சுமத்தப்பட்டது. அந்தப் பொறுப்பை ஏற்கும்போதும் சரி, இன்றைக்கும் சரி-அதன் பின் தேர்தல் முடிவுகள் வரும்போதெல்லாம் அண்ணா சொன்னாரே- "நாம் பெற்ற வெற்றி 100 பேர் என்ற அளவில் நின்றிருந்தால் ஒரு பலமான எதிர்க் கட்சியாக இருந்து-சட்டமன்றத்திலே செயல்பட்டு-மேலும் நம்முடைய கழகத்தை வலிவும் பொலிவும் உள்ளதாக ஆக்கியிருக்கலாம். 100-க்கு மேல் போய் விட்டது. ஆட்சி வந்து விட்டால் கழகத்தை எப்படி காப்பாற்ற போகிறோமோ என்ற சிந்தனை தான் என் சோகத்திற்குக் காரணம்''- என்ற அந்த வாசகம் தான் என் இதயத்தின் அடித்தளத்தில் பதிந்து என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அண்ணாவிற்குப் பிறகு- அவர் வழியில் ஆட்சி நடத்தி வந்த நான்-முதல் சோதனையாக சென்னை மாநகராட்சி மன்றத்தில் "மஸ்டர் ரோல்'' என்ற ஒரு பயங்கரமான பூதத்தைச் சந்தித்து- அதை விரட்டியடிக்க வேண்டிய நிலையில் ஆட்சி சக்கரத்தை சுழற்ற வேண்டியவன் ஆனேன்.

சட்டமன்றத்தில் ஒரு நாள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சி மன்றத்தில் "மஸ்டர் ரோல்'' ஊழல் என்று ஆரம்பித்தது தான் தாமதம் - நான் உடனே எழுந்து "எனக்கு அந்த ஊழலைப் பற்றித் தெரியும்;'' என்று கூறியதோடு-அதிலே ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதும்-அவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களைக் கொட்டியே தீரும் என்பதையும் எடுத்துரைத்து-நானே அப்போதே மேலும் அறிவித்தேன்.

சென்னை மாநகராட்சி மன்றம் உடனடியாகக் கலைக்கப்படும்-மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் - எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அவர்கள் ஆளுங்கட்சி ஆனாலும், எதிர்க் கட்சி ஆனாலும்- என் ஆருயிர் நண்பர் ஆனாலும் - அல்லாதவரானாலும் தண்டிக்கப்படுவார்கள் - என்றுரைத்தேன்.

அதற்கேற்ப மாநகராட்சி மன்றத்தில் மேயராக இருந்தவர்கள், முக்கிய புள்ளிகளாக இருந்த உறுப்பினர்கள் -பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 25 பேர் அந்த ஊழலில் சிக்கியவர்கள் அன்று கண்டு பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கூண்டிலே ஏற்றப்பட்டனர். இந்தப் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை புகழ்ந்து அந்த வழக்கை நடத்திய ஒரு பெரிய போலீஸ் அதிகாரி பின்னாளில் ஒரு பத்திரிகையில் நான் தயவு தாட்சண்யமின்றி எடுத்த நடவடிக்கையை பாராட்டி எழுதினார்.

அதைப் போல தஞ்சை கூட்டுறவு மத்திய வங்கியில் என்னுடைய ஆருயிர் நண்பர், இளமைக்கால நண்பர், வழக்கறிஞர், கழகத்தின் அந்தப் பகுதியைக் கட்டிக் காத்த தூண் போன்றவர் கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டை விசாரித்து அவரை கைது செய்யவும், அவருடைய வழக்கறிஞர் பதவியே பறிபோகவுமான நிலை நான் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

அதைப் போலவே என் உறவினர் ஒருவருக்கு செங்கற்பட்டு மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் பட்டா வழங்கிய செய்தியை அறிந்ததும் - அதைப் போலவே வானூர் தொகுதியில் கழகச் சட்டப் பேரவை உறுப்பினருக்கு பட்டா வழங்கிய செய்தியை அறிந்ததும் - அந்த இடங்களைப் பறிமுதல் செய்ய ஆணையிட்டவன் நான் என்பதையும் பலரும் அறிவார்கள்.

நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்பது தான் என் சாதனைகளை விளக்கும் கல் வெட்டுகளை விட - உயர்ந்த கல் வெட்டாகும்.

இப்போது பதவிகளில் இருப்போரும்-பதவி பெற விழைவோரும்- யார் தலைமையிலே இயங்குகிற இயக்கத்தின் கீழ் நாம் பணி புரிய வேண்டும் என்பதை நினைவிலே அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் தொடக்க காலத்திலிருந்து இன்றைக்கும் தொடர் வெற்றி பெற தொண்டூழியம் செய்ய தோள் தட்டிப் புறப்படும் கழகத்தினர் அனைவருக்கும் ஒரு மானசீக அறிவுரையாகவே இந்த மடல் தீட்டியுள்ளேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...