For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிமுகவுக்கு 4 சீட்டுக்கு மேல் கிடையாது-ஜெ. உறுதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: மதிமுகவுக்கு நான்கு தொகுதிகளைத் தருவது என்று இறுதியாக அதிமுக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் 'கூட்டம்' இல்லாததால் தொகுதிப் பங்கீடு சுலபமாக முடிந்து விட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் கடும் இழுபறி நிலவுகிறது.

காரணம், பாமக கேட்ட தொகுதிகளை மறு பேச்சின்றி அதிமுக கொடுத்து விட்டது. ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தல் முதலே அதிமுவுக்கு ஆதரவாக இருந்து வரும் மதிமுக கேட்கும் குறைந்தபட்ச 6 தொகுதிகளை கொடுப்பதில் ஜெயலலிதா தயக்கம் காட்டுவதால் அங்கு இழுபறி ஏற்பட்டுள்ளது.

முதலில் மதிமுக பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் அதிமுக முடியாது என கூறி விட்டது. இதையடுத்து 6 தொகுதிகளாவது தர வேண்டும் என மதிமுக கோரியது.

ஆனால் 3 சீட் மட்டுமே தர முடியும் என ஜெயலலிதா தெளிவாக கூறி விட்டார். இதனால் அப்செட் ஆன வைகோ பேச்சுவார்த்தைக்கு செல்வதையே நிறுத்தி விட்டார்.

இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக தரப்பிலிருந்து மதிமுகவுக்கு அழைப்பு போனது. ஆனால் நாங்கள் கோரும் தொகுதிளை கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள் வருகிறோம் என்று கூறி விட்டதாகத் தெரிகிறது.

மதிமுக இப்படி தடாலடியாக கூறியது ஜெயலலிதாவை அதிர்ச்சியி்ல் ஆழ்த்தியதாம்.

சமரசத்திற்கு விரைந்த ஓ.பி., ஜெயக்குமார்:

ஆனால், போனால் போங்கள், வந்தால் வாங்கள் என்று தடாலடியாக கூற முடியாத நிலையில் ஜெயலலிதா உள்ளார். மதிமுகவை புறம் தள்ளினால் அது அதிமுக கூட்டணிக்கு பெரும் பாதகமாகி விடும் என்பதால் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு, வைகோவை சென்று சந்தித்து விட்டு வருமாறு ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் ஆகியோரை ஜெயலலிதா பணித்தார்.

இதையடுத்து வைகோவை அவரது இல்லத்திற்குச் சென்று ஓ.பன்னீர் செல்வமும், ஜெயக்குமாரும் சந்தித்துப் பேசினர்.

நீங்கள் கேட்கும் சீட்களை தருவது சிரமம். அதிகபட்சமாக நான்கு சீட்கள் தருகிறோம், பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று ஓ.பியும், ஜெயக்குமாரும் கேட்டுக் கொண்டனராம்.

ஆனால் ஐந்து சீட்டாவது தர வேண்டும் என வைகோ வலியுறுத்தினாராம். இருப்பினும் முன்பு போல திட்டவட்டமாக வைகோ வலியுறுத்தவில்லை என்று தெரிகிறது.

வைகோவின் கோரிக்கை குறித்து ஜெயலலிதாவிடம் தெரிவிப்பதாக கூறி விட்டு ஓ.பியும், ஜெயக்குமாரும் கிளம்பிச் சென்றதாகத் தெரிகிறது.

நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை ..

ஓ.பி., ஜெயக்குமார் போன பின்னர் கட்சித் தலைமையகமான தாயகம் விரைந்தார் வைகோ. அங்கு கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சித் தலைமையகத்திற்கு வந்த வைகோவிடம் ஒரு குறும்புக்கார நிருபர், வேறு கூட்டணியுடனும் பேசி வருகிறீர்களா என்று கேட்டு அவரை கோபத்திற்கு ஆளாக்கினார். 'பேசாம போங்க' என்று கடுப்பாக கூறினார் வைகோ.

அலைக்கழிக்கலாமா ஜெ..?

பல்வேறு சிக்கல்கள், மிரட்டல்கள், இடையூறுகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்து வரும் வைகோவை, ஜெயலலிதா இப்படி அலைக்கழிப்பது சரியல்ல என்று மதிமுகவினர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

ஆதாயத்திற்காக வந்து ஒட்டிக் கொண்ட கட்சி பாமக. தேர்தல் முடிந்தவுடன் அது எப்படி வேண்டுமானாலும் போகும். அதை ஜெயலலலிதா தடுக்க முடியாது.

ஆனால் வைகோ அப்படியல்ல. எந்தக் கஷ்டம் வந்தாலும் ஜெயலலிதாவுடனேயே இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கே ஜெயலலிதா அலட்சியப் போக்கைக் காட்டலாமா என்றும் மதிமுகவினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

விருதுநகர், திருப்பூர், காஞ்சீபுரம், ஆரணி, ஈரோடு, திருச்சி அல்லது தஞ்சை ஆகிய தொகுதிகளை ஒதுக்குமாறு இறுதியாகவும், உறுதியாகவும் அதிமுகவிடம் வைகோ கூறியுள்ளதாக தெரிகிறது.

மதிமுக, சிபிஎம் கட்சிகளின் தொகுதிகளை இறுதி செய்தால் தான் அடுத்த கட்ட வேலைகளைப் பார்க்க முடியும் என்ற முடிவில் ஜெயலலிதா இருப்பதால் இன்றைக்குள் சுமூக தீர்வு எட்டப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X