For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடெங்கும் பரவும் திராவிட இயக்க திட்டங்கள்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சென்னை வருகிற 18ம் தேதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. அன்றே முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார் கருணாநிதி. இதையடுத்து வேட்பாளர்கள் அறிவாலயம் சென்று முதல்வரைச் சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றனர்.

தூத்துக்குடி எஸ்.ஆர்.ஜெயதுரை, கரூர் கே.சி.பழனிச்சாமி, நீலகிரி ஆ.ராசா, கள்ளக்குறிச்சி ஆதி.சங்கர், தர்மபுரி தாமரைச்செல்வன், அரக்கோணம் எஸ்.ஜெகத்ரட்சகன் ஊரில் இல்லாததால் வரவில்லை.

பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசினார்.

விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ...

கேள்வி: திமுக சார்பில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஏதாவது காரணம் உண்டா?.

பதில்: அவர்களை வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தக் கூடாது என்றில்லை. தற்போது அவர்கள் இடங்களில் நிறுத்தப்பட்டு இருப்பவர்களை நிறுத்த வேண்டும் என்பதற்காக முன்பு இருந்தவர்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

கேள்வி: பிரசாரத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள்?.

பதில்: சென்னையில் ஏப்ரல் 18ம் தேதி புரசைவாக்கம் தானா தெருவில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டமும், அதற்கு பிறகு தொடர்ந்து தேர்தல் பிரசாரமும் நடைபெறும்.

முடிந்த வரை பிரசாரம்...

கேள்வி: நீங்கள் பிரசாரம் மேற்கொள்வீர்களா?.

பதில்: முடிந்த வரையில் மேற்கொள்வேன்.

கேள்வி: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் நீங்களும் சேர்ந்து பிரசாரம் செய்வீர்களா?.

பதில்: அகில இந்திய அளவில் சோனியாகாந்தி அம்மையாருடைய தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருப்பதால் வாய்ப்பான இடங்களில் தேவைப்பட்ட பகுதிகளில் சோனியாகாந்தியின் கூட்டங்களில் நானும் கலந்து கொள்வேன்.

சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்போம்..

கேள்வி: இந்த தேர்தலில் மையப் பிரச்சினையாக எதை வைத்து பிரசாரம் செய்வீர்கள்?.

பதில்: மைய அரசு, மாநில அரசுகளுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் வழங்கியுள்ள திட்டங்களையும் மக்கள் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறையோடு நிறைவேற்றியுள்ள சாதனைகளையும் விளக்கி, தேர்தல் பிரசாரத்தில் அதற்கு முக்கியத்துவம் அளித்துப் பேசுவோம்.

மத நல்லிணக்கச் சமுதாயம், மதச் சார்பற்ற அரசு எங்களுடைய குறிக்கோள். அதே அடிப்படையில் சோனியா காந்தியின் வழிகாட்டுதலோடு கூடிய காங்கிரசும் இருப்பதால் இந்த அணியின் சார்பில் நடைபெறுகின்ற தேர்தல் பிரசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

கேள்வி: திமுக 2006ம் ஆண்டிலே கொண்டு வந்து வழங்கும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம், இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டம், வீட்டுமனை வழங்கும் திட்டம் போன்ற நல்வாழ்வு திட்டங்களை எல்லாம் இப்போது தேசிய அளவில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் எல்லா மாநில கட்சிகளும் ஆந்திரா உள்பட எல்லோரும் பின்பற்ற முனைந்திருக்கிறார்களே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?.

பதில்: திமுக திராவிட இயக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சி. திராவிட இயக்கம் சமூக நீதி அடிப்படையில் சுயமரியாதை கழனியில் வளர்ந்த பயிர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடைய கருத்துக்களை அவர்கள் நிறைவேற்றத் துடித்த குறிக்கோள்களை மக்கள் மத்தியிலே பரப்புகின்ற பணியுடன் நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலும் இருக்கின்ற காரணத்தால் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு தொடக்க நாள் என்ற பண்பாட்டு சாதனை நூறாண்டு காலமாக பரிதிமாற் கலைஞரால் வலியுறுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்த தமிழ் செம்மொழி என்ற கருத்தையும் மத்திய அரசோடு விவாதித்து இன்றைக்கு அதனை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்பது மாத்திரமல்ல விவசாயிகளுக்கு கடன் நிவாரணம், பயிர் கடன்களுக்கு வட்டியே இல்லாத நிலை, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலம், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி இவைகள் எல்லாம் மாநில அளவிலே நாங்கள் நிறைவேற்றி வருகின்ற சாதனைகள்.

இதனை தேசிய அளவிலும் இந்த தேர்தல் நேரத்தில் பல கட்சிகள் அறிவிப்பதாக சொன்னீர்கள். அது எங்கள் திட்டங்களை காப்பி' அடித்து விட்டார்களே என்ற எண்ணத்தை எங்களுக்கு உருவாக்குவதற்கு பதிலாக திராவிட இயக்கத்தின் திட்டங்கள் எல்லா மாநிலங்களிலும், எல்லா கட்சிகளாலும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி, பெருமை.

இதைப் போலத் தான் சமுதாய திட்டங்கள் பலவற்றை பெரியார் நினைவு சமத்துவபுரம் போன்றவைகளை, சுயமரியாதை திருமண முறை போன்றவற்றை தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை நீண்ட காலமாக சொல்லி வருகிறோம்.

அதைப் போலவே இடஒதுக்கீட்டில் கூட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்பவும் மாநில அளவில் வகுக்கப்படுகிற திட்டங்களின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நானே எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். அதையும் அகில இந்திய அளவில் சிந்தித்து செயல்படுத்துவார்களேயானால் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன்.

வெற்றி நமதே...

கேள்வி: உங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?.

பதில்: வெற்றி நமதே!.

கேள்வி: இலங்கைப் பிரச்சனையில் பாமகவும், அதிமுகவும் ஒத்த கருத்தோடு இருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே? இப்படி சொல்லி இந்த விஷயத்தை அரசியலாக்கி தமிழ்நாட்டில் லாபம் காண முடியுமா?.

பதில்: நான் சொல்ல வேண்டிய பதில் உங்கள் கேள்வியிலேயே அடங்கியிருக்கிறது. ராஜபக்சே நடத்தும் சண்டை நியாயமானது என்றும் அதிலே கொல்லப்படுபவர்கள் விடுதலைப்புலிகள் மட்டும் தான் என்றும் எந்தவொரு போரிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிக்கை விடுத்தவர் ஜெயா. அப்படி இருக்கும்போது அவர் கருத்தும் டாக்டர் ராமதாஸ் கருத்தும் எப்படி ஒத்தக் கருத்தாக இருக்க முடியும்?.

கேள்வி: பாட்டாளி மக்கள் கட்சி உள்பட காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கின்ற பெரும்பாலான கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் மதசார்பற்ற அணிக்கு போய் விடுவோம் என்று இப்போதே அச்சாரம் போடுகிறார்களே?.

பதில்: இந்த கேள்வியின் வாயிலாக வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

கேள்வி: பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் லாலு, முலாயம் சிங், ராம் விலாஸ் பஸ்வான் ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்களே? அதனால் காங்கிரஸ் கூட்டணியின் வாய்ப்பு பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?.

பதில்: இந்தியாவை பொறுத்தவரையில் அரசியலில் அதிலும் குறிப்பாக வட மாநிலங்களைப் பொறுத்தவரையில் ஒரு சினிமா படத்தினுடைய ஆரம்பக் காட்சிகளைப் போல தேர்தல் நேரத்தில் ஒரு விதமாக அமைந்து கிளைமாக்ஸ் காட்சி' வேறு விதமாக அமைந்தே முடிவுறும்.

ராஜபக்சேவுக்குக் கண்டனம்...

கேள்வி: இலங்கையில் விடுதலைப்புலிகளின் அனைத்து இடங்களையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், அவர்களது ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் பிரபாகரனும், அவருடைய புதல்வரும் தமிழர்கள் வாழ்கிற பகுதிகளில் மறைந்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றதே?.

பதில்: இது போர்களத்துச் செய்தி. நாங்கள் பொதுவாக இலங்கையில் நடைபெறுகின்ற இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எங்களுடைய குரலை மதித்து வெளிநாடுகளிலே உள்ள அரசுகள், ஐ.நா. மன்றம், வெளிநாட்டு தூதுவர்கள் மூலமாக இலங்கைக்கு சொல்லி வருகிறார்கள்.

அதே போலவே நாங்கள் வலியுறுத்தியதின் காரணமாகவும் - பொதுவாக இலங்கையிலே உள்ள தமிழர்கள் மீது இந்திய மத்திய அரசுக்கு உள்ள அனுதாபத்தின் காரணமாகவும் நாங்கள் எடுத்துச் சொல்லிய விவரங்களை ஏற்றுக் கொண்டு சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் போர் பிரச்சினைக்கு தீர்வல்ல, பேச்சுவார்த்தை தான் பிரச்சினையை தீர்த்து வைக்கும், எனவே போரை நிறுத்துங்கள் என்று அவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்சே போரை நிறுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

கேள்வி: இனியாவது அவர்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?.

பதில்: போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தான் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். இப்போதும் அதைத் தான் வலியுறுத்துகிறோம்.

கேள்வி: இன்று நீங்கள் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 2 பேர் தானே பெண்கள்? உங்கள் கட்சி பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ள கட்சி ஆயிற்றே?.

பதில்: தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் 33 சதவீதம் பெண்களுக்கு என்பதை நிறைவேற்றி வருகிறோம். பஞ்சாயத்துகள், நகர் மன்றங்கள், மாநகராட்சி மன்றங்களில் எல்லாம் 33 சதவீதம் என்பதை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றி வருகிறோம். அதைத் தான் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீதம் என்ற அளவிற்கு பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 21 வேட்பாளர்களில் 2 பேரை திமுகவின் சார்பாக பெண்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். இதையும் நாங்கள் பெருமையாகத் தான் கருதுகிறோம். இதை ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு என்ற ஒதுக்கீட்டை சட்டமாகக் கொண்டு வந்து நிறைவேற்ற முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X