For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்கள்: ராஜபக்சேவுக்கு பான்-கி-மூன் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Ban ki Moon
கொழும்பு: பாதுகாப்பு வளையப் பகுதியில் சிக்கியிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களை பத்திரமாக மீட்பது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்பாவித் தமிழ் மக்களை காப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அப்போது ராஜபக்சேவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொலைபேசி மூலம் ராஜபக்சேவைத் தொடர்பு கொண்ட பான் கி மூன், போர் நடை பெறும் பகுதியிலிருந்து அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்.

அப்பாவி மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை என்று ராஜபக்சேவை பான் கி மூன் வலியுறுத்தியதாக மூனின் செய்தித் தொடர்பாளர் மிஷல் மோன்டாஸ் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் வசம் தற்போது உள்ள குறுகிய நிலப்பரப்பில் சுமார் 2 லட்சம் அப்பாவி மக்கள் சிக்கித் தவிப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜெனரல் ஜான் ஹோம்ஸ் ஏற்கனவே கூறியுள்ளார்.

பாதுகாப்பு வளையப் பகுதியில், இலங்கை ராணுவம் பெரும் தாக்குதலை நடத்தி வருவதாக விடுதலைப் புலிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் குழந்தகைள் மையம் ஒன்றை ராணுவம் குண்டு வீசித் தாக்கியதில் 80 குழந்தைகள் உள்பட 139 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம்.

ஒரே நாளில் 322 தமிழர்கள் படுகொலை...

இதற்கிடையே பாதுகாப்பு வளையப் பகுதியி்ல் இலங்கை தனது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் 322 தமிழர்களை அது கொன்று குவித்துள்ளது.

விடுதலைப் புலிகளை மிக குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விட்ட ராணுவம், தற்போது 2 லட்சம் பேர் முடங்கிப் போயிருக்கும் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக பலியாகும் அப்பாவிகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 139 பேரைக் கொன்ற இலங்கைப் படைகள் நேற்று ஒரே நாளில் 322 தமிழர்களை கொன்றுள்ளது.

புது மாத்தளன், அம்பலவன் பொக்கனை, வளையன் மடம், கரையான் முள்ளி வாய்க்கால், வெள்ள முள்ளி வாய்க்கால் ஆகிய கிராமங்கள் பாதுகாப்பு பகுதிக்குள் உள்ளன.
இந்த குறுகிய பகுதிக்குள் 2 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளும் இங்குதான் மக்களோடு மக்களாக கலந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கிழக்கு மற்றும் மேற்கில் கடல் சூழ்ந்து நீண்ட தீவு போன்ற அமைப்பில் பாதுகாப்பு பகுதி உள்ளது. மேற்கே புதுக்குடியிருப்புக்கு கிழக்கு பகுதியில் குறுகிய நிலப்பரப்பு மட்டுமே மற்ற இடங்களுக்கு செல்லும் பாதையாக அமைந்துள்ளது.

புதுக்குடியிருப்பை பிடித்த ராணுவம் இந்த பாதையை சூழ்ந்து நிற்கிறது. வடக்கு பகுதியில் புது மாத்தளன் என்ற இடத்தில் இன்னொரு படையும், தெற்கில் வடுவக்கால் என்ற இடத்தில் மற்றொரு படையும் நிற்கின்றன. கிழக்கு பகுதியில் உள்ள கடலில் கடற்படை நிற்கிறது. இப்படி நாலாபுறமும் இலங்கைப் படைகள் சூழ்ந்துள்ளன.

நேற்று ராணுவம் நிலை கொண்டிருந்த இடத்தில் இருந்து முன்னேறி பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்தது. அவர்களை உள்ளே வர விடாமல் தடுத்து விடுதலைப் புலிகள் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

இந்த ஆத்திரத்தில் பாதுகாப்பு பகுதியில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடுகிறது ராணுவம். பீரங்கி மூலமும் குண்டு வீசுகின்றனர். இதன் மூலம் என்றுமே இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 322 தமிழர்கள் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாதுகாப்பு பகுதிக்குள்ளேயே இப்போது சண்டை நடப்பதால் சாவு எண்ணிக்கை இனி பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று சர்வதேச நாடுகள் வற்புறுத்தியும் அதை கண்டுகொள்ளாமல் சிங்கள ராணுவம் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X