For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை பிரச்சினையும், திமுக உண்ணாவிரதமும்..

By Staff
Google Oneindia Tamil News

Lankan Tamils
-கே.என்.வடிவேல்

மதுரை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியது, ஐ.நா. கூறியது, ஐரோப்பிய நாடுகள் கூறின, உலகெங்கும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் இத்தனை பேர் கூறியும் கேட்காத இலங்கை அரசு, இன்று முதல்வர் கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு கூறியதைக் கேட்டு டக்கென்று தாக்குதலை நிறுத்துவதாக கூறியுள்ளது.

அதிகாலையில் உண்ணாவிரதம், பிற்பகலில் போர் நிறுத்தம் என்று மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன. இது மக்கள் மனதில் பல ஆச்சரியக் கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் இதுவரை சுமார் 13 பேர் தீக்குளித்து தியாகம் செய்துள்ளனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதவதையும், உணவு, உடை இன்றி பாதிக்கப்படுவதை ஐநா சபை உறுதிப்படுத்தியதோடு, உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதே கோரிக்கையை அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகிக்கும் திமுக அரசும் தான் காரணம் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இலங்கையில் உள்ள தமிழர்களை காப்பாற்றக் கோரி உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கி எழுந்து உலக மக்களை கவனத்தை கவரும் விதத்தில் பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்படி பல்வேறு தளங்களில், பல்வேறு முறைகளி்ல் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஏகப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலிகள், பொது வேலைநிறுத்தங்கள், தீக்குளிப்புகள்.

உலக நாடுகள் அனைத்தும் யார் இந்த தமிழர்கள் என்று கேட்கும் அளவுக்கு போராட்டங்களின் சத்தம் உலகை உலுக்கி விட்டது.

ஆனால் அப்போதெல்லாம் திமுக உணர்ச்சிவசப்படவில்லை. காங்கிரஸோ கண்டு கொள்ளவே இல்லை.

ஆனால் இன்று திடீரென அதிகாலையில் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார் முதல்வர் கருணாநிதி. அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் அலறி அடித்து இலங்கையைத் தொடர்பு கொள்கிறது மத்திய அரசு. அடுத்த சில நிமிடங்களில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுகிறது இலங்கை அரசு.

அதாவது கிட்டத்தட்ட 7 மணி நேரங்களில் எல்லாமே முடிந்து விட்டது. அதாவது போரை நிறுத்தியாகி விட்டது.

ஆனால் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் அலை மோதுகிறது.

இந்தியாவால் போரை நிறுத்த முடியும் என்பது கருணாநிதி உண்ணாவிரதத்தின் மூலம் தெளிவாகி விட்டது.

இந்திய அரசை வலியுறுத்தி போர் நிறுத்தம் செய்ய வைக்கும் அளவுக்கு திமுகவுக்கு பலம் உள்ளது என்பதை கருணாநிதியின் உண்ணாவிரதம் தெளிவாக்கியுள்ளது.

கருணாநிதி நினைத்தால், மத்திய அரசு நினைத்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க முடியும் என்பதை இந்த உண்ணாவிரதம் நிரூபித்துள்ளது.

ஆனால் இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை. இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.

அதற்கு முக்கிய காரணம் இரண்டு. ஒன்று, இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகம் முழுவதும் முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறி விட்டது.

2வது தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், நிச்சயம் அமைத்துத் தரும் என்ற ஜெயலலிதாவின் திடீர் பல்டி அறிவிப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் அவர் மீதான பார்வையை மாற்றிப் போட்டு விட்டது.

இதை விட முக்கியமாக, இலங்கை விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் மதிமுக பொதுச் செயாளர் வைகோவும், இடதுசாரிகளும் காட்டி வரும் ஆர்வத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக உளவுப் பிரிவு முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளதாம்.

இந்த நிலையில் ஜெயலலிதா தனி ஈழத்தை ஆதரித்து விட்டார். அப்படியானால் கருணாநிதி என்ன சொல்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனால் இலங்கை விவகாரத்தில் திமுக தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அனைவருக்கும் பளீர் என பொட்டில் அறைந்தது போல விளக்கும் முகமாகவே, கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதாக கருதப்படுகிறது.

இந்த உண்ணாவிரதம் மூலம் அதிமுக கூட்டணியின் வேகத்தை கட்டுப்படுத்தவும், தேர்தலில் திமுக- காங். கூட்டணிக்கு ஒரேயடியாக மக்கள் ஆப்பு வைக்காமல் தடுக்கலாம் என்ற எண்ணமும் அடங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.

இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி உண்ணாவிரதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்த ஒரு டிவியின் வர்னணையாளர் இன்னும் சில மணி நேரங்களில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விடும என்று கூறியதுதான்.

எது எப்படியோ உண்ணாவிரதம் முடிந்து விட்டது. இலங்கையில் போர் இனி நடக்காது என்று ப.சிதம்பரமும் நம்பிக்கை தெரிவித்து விட்டார். நாளை காலையில் நியூஸ் பேப்பரைப் படிக்கும்போதும், டிவி செய்திகளைப் பார்க்கும்போதும்,, ராணுவத் தாக்குதலில் இத்தனை பேர் பலி என்ற செய்தி வராது என்று நம்புவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X