For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதிஷ்-நாயுடுவுக்கு வலை வீசும் காங்கிரஸ்

By Staff
Google Oneindia Tamil News

Rahul Gandhi
டெல்லி: இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என்பதை காங்கிரஸ் உணர்ந்துவிட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் அடி காத்திருப்பதாகக் கருதப்படுவதால் தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருக்கு வலை வீச ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.

நேற்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்த இரு தலைவர்களையும் அவர்களது கட்சியினரைவிடவும் மிக அதிகமாகப் புகழ்ந்தார். இதன்மூலம் இந்தக் கட்சிகளையும் கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் முனைவது தெரிகிறது.

மேலும் காங்கிரஸை இடதுசாரிகள் எப்படியும் ஆதரிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையும் அந்தக் கட்சியிடம் இன்னும் உள்ளது தெளிவாகிறது.

அவரது பேட்டி விவரம்:

எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் காங்கிரஸ் தயார். அப்படிப்பட்ட நிலை வந்தால் அதையும் ஏற்கத் தயார். ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம்.

தேர்தல் முடிந்ததும் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசை அவர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஆனாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமரும் என்றே நம்புகிறேன். மன்மோகன் சிங் சிறந்த பிரதமர். அவரையே மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தவேண்டும் என்பது காங்கிரஸ் முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பேப்பரில் தான் இருக்கிறது. தமிழகத்தில், ஹரியாணாவில், ஒரிஸ்ஸாவில், ஆந்திராவில் என பல மாநிலங்களில் அந்தக் கூட்டணியே இல்லை.

பாஜக எதிர்க்கட்சியாக அமரப்போவது உறுதி.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 145 தொகுதிகள் கிடைத்தன. இந்த தடவை அதைவிட அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவோம். தேர்தலுக்குப் பின் புதிய கட்சிகளை ஈர்ப்போம்.

எதிர்க்கட்சிகளிலும் சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக நிதிஷ் குமாரையும் சொல்லலாம். பிகாரை மேம்படுத்த அவர் முடிந்தவரை எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். சிறந்த ஆட்சி தர முயல்கிறார்.

அதே போல தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் மிகச் சிறந்த தலைவர். அவர் ஆந்திராவில் சிறந்த ஆட்சியைத் தந்தார். ஆனால், ஹைதராபாத்தை மட்டுமே கவனித்ததால் அவர் பதவி போயிற்று. இதனால் எங்கள் கட்சியில் தான் சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள்.. மற்றவர்கள் எல்லாம் வேஸ்ட் என்று பொய் சொல்ல நான் தயாராக இல்லை.

180-190 இடங்களில் இடதுசாரிகள் வென்றால் அது ஆட்சி அமைக்கட்டும். அதற்கு காங்கிரஸ் ஆதரவு தராமலா போய்விடும். அதற்கு ஆதரவு தரும்படி குரல் கொடுக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் முடிந்துபோன, மறந்து போன விஷயம். ஆனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் அந்த விவகாரத்தை எழுப்புவது வாடிக்கையாகிவிட்டது.

விடுதலைப் புலிகளை நான் எதிர்க்கிறேன். அதற்கான காரணத்தை நான் சொல்ல வேண்டியதில்லை. அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்கள் அப்பாவிகள். அவர்கள் மீது இலங்கை நடத்தி வரும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அதை நிறுத்தச் சொல்கிறோம்.

தமிழர்கள் மீது எனக்கு அதீதமான மரியாதை உண்டு. தமிழகத்தின் வளர்ச்சியும் தமிழர்களின் உழைப்பும் உலகறிந்தது. அவர்களை நான் மதிக்கிறேன். ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் எங்களுக்கு வெற்றியைத் தரும் என்றார்.

தோல்வி பயம்-இந்திய கம்யூ கருத்து:

ராகுலின் இந்தப் பேச்சு தேர்தலில் தோல்வியடையப் போவதை காங்கிரஸ் ஒப்புக் கொள்வதாகவே அமைந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.

அவர் கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய மாற்று கூட்டணி அமையும். இடதுசாரிகளின் இந்த முயற்சி கண்டிப்பாக ஈடேறும்.

பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான்கரை ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். ஆனால், இடதுசாரிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததன் மூலம் நாட்டுக்கே துரோகம் இழைத்தது காங்கிரஸ் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X