For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-நலமாக இருக்கிறார்: விடுதலைப் புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

Prabakaran
வன்னி: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்படடு விட்டதாக இலங்கை அரசு பொய்ச் செய்திகளை பரப்பி வருகிறது. அவர் உயிருடன்தான் இருக்கிறார், நலமாக இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கூற இயலாது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் கூறி வரும் நிலையில் புலிகள் அளித்துள்ள இந்த விளக்கம் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், தமிழ்நெட் இணையத் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறியுள்ள பத்மநாதன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி, பா.நடேசன் உள்ளிட்டோரை இலங்கை படைகள் திட்டமிட்டு படுகொலை செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சார்லஸ் உள்ளிட்டோர் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது.

பத்மநாதன் அளித்துள்ள பேட்டி...

இலங்கை அரசு உறுதிப்படுத்தப்படாத தகவல்களை, பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகிறது. எங்களது அமைப்பின் தேசிய தலைவர் உயிருடன், நலமாக இருக்கிறார் என்பதை மட்டும் இப்போதைக்கு என்னால் உறுதியுடன் சொல்ல முடியும்.

அதேசமயம், எங்களது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள், தலைவர்கள், தாங்களாகவே உயிரிழந்திருக்கிறார்கள் அல்லது சதித் திட்டத்தால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மைதான்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும், எங்களது போராட்டம், எங்களது மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வரை தொடரும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இலங்கை அரசு ராணுவ ரீதியாக வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கலாம். ஆனால் இது வெற்று வெற்றி என்பதை அது உணரவில்லை. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் அது இழந்து விட்டது என்பதை அது உணரவில்லை.

நாங்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியதே எங்களது மக்களின் உயிர்களைக் காப்பதற்காகத்தான். இலங்கை ராணுவம் எங்களது மக்களை தொடர்ந்து கொல்வதை எங்களால் அனுமதிக்க முடியாது.

சர்வதேச நாடுகள் அப்பாவிகளைக் கொல்லாமல் அமைதித் தீர்வுக்கு முயல வேண்டும் என பலமுறை இலங்கை அரசை வலியுறுத்தியும் அதை அது மதிக்கவில்லை. ராணுவத்தை வைத்து அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்து வந்தது.

இப்போதும் கூட வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகளையும், தலைவர்களையும் கூட அது ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றுள்ளது.

இந்த விஷயத்தில் இலங்கையின் வெறியாட்டத்தைத் தடுக்க சர்வதேச சமூகமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

நடந்து விட்ட சம்பவங்களால் நாங்கள் மிகவும் சோகமடைந்துள்ளோம். இருப்பினும் தமிழர்களின் எதிர்காலம், தமிழ் தேசியம் குறித்த கேள்விகள் எந்தவித தீர்வும் இல்லாமல் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத் தேவையான அரசியல் நடைமுறைகள் தற்போது இலங்கையில் இல்லை. தமிழர்களைக் காக்க முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இது இன்று இருப்பதாக தெரியவில்லை.

மக்கள் தங்களைக் காக்கும் பொறுப்பை, உரிமையை எங்களுக்குக் கொடுத்தார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் மக்கள் எங்களுக்கு கொடுத்த உரிமையை, மாற்று வழிகள் மூலம் தொடர, மக்களுக்கான உரிமைகளை திரும்பப் பெற போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த நோக்கத்திற்காக உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் திரண்டு எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X