For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்றும் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு - மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

By Staff
Google Oneindia Tamil News

Sea eruption
சென்னை: தமிழக கடல் பகுதிகளில் தொடர்ந்து இன்றும் கொந்தளிப்பு நிலவியது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பெரும் காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பலத்த சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

சென்னையில் ...

சென்னையில் பட்டினப்பாக்கம் பகுதியில், உள்ள சீனிவாசபுரத்தில் நேற்று கடல் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

ராட்சத அலைகள் எழுந்தவண்ணம் இருந்தன. பலத்த சூறைக் காற்றும் வீசியது. இதனால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அங்கிருந்த மக்கள் முன்பே வெளியேறி விட்டதால் உயிர் தப்பினர்.

கடல் நீர், கடற்கரையிலிருந்து குடியிருப்புகள் உள்ள பகுதி வரை வந்து விட்மடது. கடல் நீர் உள்ளே போவதும், சீறிப் பாய்வதுமாக உள்ளது.

இன்று காலையும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

சீனிவாசபுரம் கடற்கரையோரம் உள்ள அற்புத இயேசு தேவாலயமும், அதன் அருகே உள்ள அரசமரம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசமரத்தின் வேர்கள் வெளியே தெரியும் அளவுக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

தேவாலயத்தின் கீழ்பகுதியிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு இருப்பதால் மணல் மூட்டைகள் மற்றும் கற்களை போட்டு தடுப்பணை அமைத்து வருகிறார்கள்.

ராமேஸ்வரத்தில் உள் வாங்கிய கடல்...

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு நேற்று மீன்துறை சார்பில் டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி, ராமேசுவரம் துறைமுகப்பகுதி, சேராங்கோட்டை ஆகிய பகுதியில் சுமார் 200 அடி தூரம் வரை கடல் உள்வாங்கி உள்ளது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தற்போது தரை தட்டி நிற்கின்றன.

மேலும் சங்குமால் கடற்கரை பகுதியில் நேற்று சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள் வாங்கியது. ராமேசுவரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும், உள்வாங்கி உள்ளதாலும் சுனாமி ஏற்படுமோ என்று பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பலத்த காற்று காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

4 மீனவர்கள் மாயம்..

இதற்கிடையே கடந்த 3-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மீனவர்கள் டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

மண்டபத்தை சேர்ந்த அப்துல்வாகித் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற அஜ்மல்கான் (45), அன்சாரி (48), வாகித் (45), சோக்கு (44) ஆகியோர் கரை திரும்பவில்லை.

கடலுக்குச் சென்று 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து மீன்துறை உயர் அதிகாரிகளுக்கு விசைப்படகு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மாயமான மீனவர்களை கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றும் கடல் கொந்தளிப்பு...

ராமேசுவரம், தனுஷ் கோடி, பாம்பன் ஆகிய பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. ராட்சத அலைகள் மேலெழும்பி கரையை முட்டி மோதுகின்றன. இதனால் விசைப்படகுகள் சேதமானது.

தனுஷ்கோடி, முகுந்த ராயர்சத்திரத்தில் அலையின் சீற்றத்தால் அங்கு உள்ள மீனவ குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்தது. சங்குமால் கடற்கரையில் நேற்று காலை கடல் 1 கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால் சுனாமி வந்து விட்டதோ என மீனவர்கள் பீதி அடைந்தனர். விசைப்படகுகளும் தரை தட்டி நின்றது.

இதேபோல பாம்பன், தெற்குவாடி, கோவில்வாடி பகுதியிலும் கடல் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் நாட்டு படகுகள் சாய்ந்து கிடந்தது. சூறாவளி காற்று தொடர்ந்து வீசி வருவதால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி யில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்றும் ராமேசுவரம், மண்டபம் பகுதியில் காற்றின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் 3-வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தனுஷ்கோடி கடலில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் நீராடுவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

இதேபோல் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் கடல்நீர் புகுந்ததால் அங்குள்ள மீனவ குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மண்டபம் பகுதியில் இன்றும் கடல் உள்வாங்கியது. தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் குறைந்த பட்ச வேகத்தில் இயக்கப்படுகிறது. மேலும் சூறாவளி காற்றால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இன்றி வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

கன்னியாகுமரியில்...

கன்னியாகுமரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக இருந்தது. காலை 10 மணிக்கு மேல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது. அப்போது திடீரென்று கடல் சீற்றமும் ஏற்பட்டது. 10 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடலில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் கரைக்கு ஓடி வந்தனர்.

கடல் சீற்றம் ஏற்பட்டபோதும், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு போக்குவரத்து எந்த வித தடையும் இன்றி நடைபெற்றது.

வேதாரன்யத்தில் ...

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 4-ந் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் மறுநாள் இரவு கரை திரும்பி இருக்க வேண்டும்.

ஆனால் ஆறுமுகம் (48), ரெத்தினவேல் (50), நாலுவேதபதி சிங்காரு என்கிற புஷ்பநாதன் (45) ஆகிய 3 மீனவர்களும் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை. இதனால் மற்ற மீனவர்கள் அச்சம் அடைந்து பல படகுகளில் சென்று தேடினர். ஆனால் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு நாகூர் கடற்கரையில் அவர்கள் கரை சேர்ந்தனர். கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதாலும், அதிக காற்று வீசியதால் திசைமாறி சென்று விட்டதாகவும், பின்னர் வழியை கண்டுபிடித்து நாகூர் கடற்கரைக்கு வந்து சேர்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.

கடல் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் நேற்றும், இன்று காலையும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகாமல் கவலையுடன் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X