For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியார் நினைவாக மேலும் 95 சமத்துவபுரங்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் வாழ்ந்த 95 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், தமிழகத்தில் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். ஒவ்வொன்றின் முன்பும் பெரியாரின் சிலை நிறுவப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மல்லிகைப்பட்டியில், 100வது சமத்துவபுரம் திறப்பு விழா நேற்று நடந்தது. மல்லிகைப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த சமத்துவபுரத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்து உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

"தீண்டாமையை ஒழிக்க வேண்டும்'' என்றார் நமது தேசத் தந்தை அண்ணல் காந்தி அடிகள்! "சாதி வித்தியாசம் என்பது கற்பிக்கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைப்பது என்பதற்கு சாட்சி; சாதி வித்தியாசமே ஆகும். இது, இன்னும் நிலைத்திருப்பது என்றால் இந்த நாடு மிருகப்பிராயத்திலிருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் இது தெளிவாகக் காட்டுகிறது'' என்று கூறி, "சாதி ஒழிந்த சமுதாயத்தை நான் உள்ளபோதே காண விழைகிறேன்'' என்றார் தந்தை பெரியார்!

"தோழமைதான் சமத்துவத்தின் கனி; சமதர்ம மணம்; அதைக் காண வேண்டுமானால் சாதி தொலைய வேண்டும்'' என்றார் பேரறிஞர் அண்ணா! அண்ணல் அம்பேத்கார் சாதி, மத, பேதங்கள் இந்த மண்ணிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுதும் போராடினார்!

நாடு விடுதலை பெற்றபின் சாதி, பேதம் ஒழிய, தீண்டாமைக் கொடுமை அகல பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. என்றாலுங்கூட, சாதியும், மதமும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக அமைந்து மக்களிடையே பகைமை உணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதற்கு கருவியாகவும், காரணமாகவும் இருக்கின்றன.

இந்த நிலையில், சாதி வேறுபாடுகளை முற்றிலும் மறந்து தமிழ் சமுதாயம் ஒரே சமுதாயமாக வாழவேண்டும் என்கிற குரல், மெல்ல மெல்ல, ஆனால், உறுதியாக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம்.

1997-ம் ஆண்டில், நமது இந்திய திருநாட்டின் சுதந்திரப் பொன்விழா கொண்டாடப்பட்டபொழுது, "ஆதிதிராவிட மக்கள் உள்பட அனைத்துச் சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு சமத்துவமாக ஒரே குடியிருப்பில் அருகருகே ஒற்றுமையாக வாழும் வகையில் தலா 100 வீடுகளைக் கொண்ட சமத்துவபுரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும்'' என முதல்-அமைச்சர் என்ற முறையில் இந்தியாவிலேயே முதன் முதலாக என்னால் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் 17.8.1998 அன்று நான் திறந்து வைத்தேன்.

அப்படி திறந்து வைத்த அந்த விழாவில், "பல்வேறு பிரிவு மக்களையெல்லாம் ஒன்றாக்குகின்ற சமத்துவம் முகிழ்க்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்த்து, இதைப் பயன்படுத்துகின்றவர்கள் நல்ல தூய்மையை இங்கே வளர்க்கவும், அறிவினை இங்கே வளர்க்கவும், நல்ல பிள்ளைகளை வளர்த்து உருவாக்கவும் எங்களோடு, இந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

சமத்துவபுரத்திலே குடியேறுகின்ற நீங்கள் காட்டுகின்ற இந்த ஒற்றுமை இந்த மாநிலத்திற்கே, இந்த நாட்டிற்கே வழிகாட்டியாக அமையட்டும் என்றும் கேட்டுக்கொண்டு, சமத்துவபுரங்கள் வளரட்டும்! வளரட்டும்! தமிழ்நாடே சமத்துவபுரமாக ஆகட்டும்! இந்திய திருநாடே சமத்துவபுரமாக ஆகட்டும்!'' என்று கூறினேன்.

அதனைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சி நடைபெற்ற 2001 மே திங்கள் வரை தமிழகம் முழுவதிலும் 145 சமத்துவபுரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் ஆதிதிராவிடர்களுக்கு 40 வீடுகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், பிராமணர்கள் உள்பட இதர சாதியினருக்கு 10 வீடுகள் என 100 வீடுகள் வீதம், மொத்தம் 145 சமத்துவபுரங்களிலும் 14 ஆயிரத்து 500 வீடுகள் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு, அந்தந்த சாதியினர்க்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.

அவ்வாறு பொதுமக்களாலும், சான்றோர்களாலும், பத்திரிகைத்துறை நண்பர்களாலும் பாராட்டப்பட்ட இந்த பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 2001-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்களால் முறையாகவும், சரியாகவும் பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டு, தொய்வுற்று, அடுத்து 2006-ல் மீண்டும் இந்த கழக அரசு அமைந்தபிறகு பெரியார் நினைவு சமத்துவபுர குடியிருப்புகளை மேம்படுத்திட 14 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவை செப்பனிடப்பட்டுள்ளன என்பதையும் இவ்வேளையில் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

தந்தை பெரியார் வாழ்ந்த 95 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பெரியாருக்கு 95 அடி உயரச் சிலை ஒன்றினை அமைக்க வேண்டும் என்று, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், கி.வீரமணி, தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயரமுள்ள சிலையை ஓரிடத்தில் மட்டும் அமைப்பதைக் காட்டிலும், "பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவபுரங்களை அமைத்து, அனைத்து சமூகத்தினரும் சகோதர பாசத்துடன் ஒருமித்து வாழ்கின்ற அந்த ஒவ்வொரு சமத்துவபுர முகப்பிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அமைப்பதால் அவருடைய தலையாய கொள்கையான சமுதாயச் சமத்துவக் கொள்கை பரவுவதற்கு வழி ஏற்படும் என்பதற்காக, அந்தப் பணியை இந்த அரசு தொடங்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இவ்வரசு அமைத்துள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து இப்பணி முடிவுற்றபின் பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமையும்''- என அறிவிக்கப்பட்டதின் விளைவாக நமது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய இடங்களைத் தேர்வு செய்து பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையோடு அமைக்கும் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்கள்.

நடப்பு நிதியாண்டில், மேலும் 29 பெரியார் நினைவு சமத்துவபுர குடியிருப்புகள் அமைக்கப்படுவதற்காக 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

"எரிமலையாய்ச் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய் இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய் எப்போதும் பேசுகின்ற ஏதென்சுநகர் சாக்ரடீசாய் ஏன் என்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய் வாழ்ந்திட்ட எம் தந்தை பெரியாரின் நினைவால் அமைந்திட்ட சமத்துவபுரத்தை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன்.

பெரியார் அவர்களின் சமூகநீதிச் சிந்தனைகள் வலுப்பெறவும், சாதி சமயமற்ற, சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படவும் மக்கள் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழவும், மொத்தத்தில் தமிழகமே சமத்துவபுரமாக வளர்ச்சி அடையவும் அனைவரும் பாடுபடுவோம், பணியாற்றுவோம்.

இந்த சமத்துவபுரத்தை இவ்வளவு அழகாகவும், எழிலாகவும், பொலிவு நிறைந்த நிலையிலும், காண்பதற்கே வியப்படைய வைக்கும் நிலையிலும் உருவாக்கியுள்ள மாவட்ட அரசின் அதிகாரிகளையும், அமைச்சர் பெருமக்களையும், குறிப்பாக இந்த சமத்துவபுரம் விரைவிலே உருவாகி இதனைத் திறந்து வைக்கின்ற அரும்பணியினை ஆற்றியுள்ள நம்முடைய துணை முதல்-அமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்களையும், மற்ற அமைச்சர் பெருமக்களையும் பாராட்டி வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X