For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளின் உளவுப் பிரிவுக்கு ஆதரவாக அணி திரளும் புலம் பெயர் தமிழர்கள்

By Staff
Google Oneindia Tamil News

Kumaran Padmanathan
லண்டன்: தமிழ் ஈழ அரசாங்கத்தை அமைத்து வேறு பாதையில் கேபி விடுதலைப் புலிகள் இயக்கத்தை இட்டுச் சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் புலிகளின் முக்கிய ஆதரவு தளமான, புலம் பெயர்ந்த தமிழர்கள், புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவுக்கு தொடர்ந்து ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்த பின்னர், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நடுவே பெரும் குழப்ப நிலை நிலவுகிறது.

பிரபாகரன் மறைவு குறித்து புலிகள் இயக்கத் தலைவர்கள் மாறி மாறி தெரிவித்து வந்த கருத்துக்கள் அவர்களிடையே பெரும் குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தின.

இந்த நிலையில் கேபி என்று அனைவராலும் அறியப்படும் செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன் புதிய பாதையில் புலிகள் இயக்கத்தையும், ஈழப் போராட்டத்தையும் எடுத்துச் செல்லும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

தமிழீழ அரசாங்கத்தையும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை என்ன, யார் பக்கம் அவர்கள் நிற்கிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில், புலம் பெயர்ந்த தமிழர்கள் (கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டப்பட்டுள்ளது) விடுதலைப் புலிகளின் பழைய பாதையிலேயே இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிய வருகிறது. மேலும், பிரபாகரன் இறந்து விட்டார் என்ற வாதத்தையும் அவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில், எழுந்துள்ள புதிய சூழ்நிலையின் பின்னணியில், புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவுக்கு ஆதரவாக நிற்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இந்த அமைப்பின் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவே இவர்கள் நம்புகின்றனர். மேலும், தனி ஈழம் என்ற புலிகளின் அடிப்படைக் கொள்கையையும் எந்தவித நிர்ப்பந்தத்தாலும் விட்டுக் கொடுக்க தாங்கள் தயாராக இல்லை என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், கேபிக்கு எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது கேபி வசம் பெரும் பணம் மட்டுமே இருப்பதாகவும், முக்கியமான, புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு அவருக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதைப் பெறும் முயற்சியில் தற்போது கேபி தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொட்டு அம்மான் இருக்கிறாரா, இல்லையா என்பது குழப்பமாக இருந்தபோதிலும் கூட புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், புலம் பெயர் தமிழர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் அது வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேபியிடம் பெருமளவில் பணம் மற்றும் ஆயுதத் தொடர்புகள் இருந்தபோதிலும், உளவுப் பிரிவிடமும் அதே அளவிலான தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் சிதறிப் போயிருக்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தற்போது ஒரே சிந்தனைதான் உள்ளதாம். இத்தனை ஆண்டு கால போராட்டத்தை அப்படியே விட்டு விட நாங்கள் தயாராக இல்லை. 30 ஆண்டு கால போராட்டத்தை புலிகள் அமைப்பு நடத்தியதால்தான், இன்று உலக அரங்கில் ஈழத் தமிழர்களின் அவலம் ஓரளவுக்கேனும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், வன்னிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த செயலை நாங்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டோம், அவ்வளவு சீக்கிரம் சமாதானமாகி அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று போய் விட மாட்டோம் என்று கோபத்துடன் கூறுகிறார்களாம்.

புலிகள் அமைப்பின் பல்வேறு பிரிவுகள் தற்போது உறக்க நிலையில் இருப்பதாகவும், விரைவில் அனைத்துப் பிரிவுகளும் மீண்டும் வீறு கொண்டெழும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் உள்ளனர்.

மிக முக்கியமான இந்த ஆதரவு காரணமாக, புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவும் தெம்புடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து வருவதாகவும் தெரிகிறது.

புலிகளின் உளவுப் பிரிவுக்கு லண்டனில் மட்டும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நிதி ஆதாரங்கள் உள்ளனவாம்.

நிதியுடன், இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இருப்பதால் உளவுப் பிரிவு விரைவில் தனது நடவடிக்கைகளை தொடங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X