For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பி.இ, எம்பிபிஎஸ்-'ரேண்டம் எண்களை' வெளியீடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இன்று 'ரேண்டம் எண்களை' வெளியிட்டது.

அதே போல எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 15,000 மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் இன்று இரவு வெளியிடப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் பி.இ. படிப்புகளில் சேர 1,32,572 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளர்.

இந்த விண்ணப்பங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அகாடமி அரங்கத்தில் இன்று ரேண்டம் எண் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படவுளளன. இதனால் மொத்தம் 1.6 லட்சம் பி.இ. இடங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பி.இ. இடம் வழங்குவதற்காக தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.

மாணவர்களின் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மதிப்பெண்ணின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த தரவரிசைப் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் நிலையில் ஒரு மாணவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதற்காக மாணவரின் வயது, கணிதம், இயற்பியல், 4வது விருப்பப் பாடம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவை அனைத்திலும் மாணவர்கள் சமமான நிலையை எட்டினால், இறுதியாக ரேண்டம் எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இம்முறை புதிய கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளதால் விண்ணப்பித்த அனைவருக்கும் பி.இ சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவுன்சலிங்: 50% பஸ் கட்டண சலுகை

ஜூலை 5ம் தேதி முதல் நடக்கவுள்ள பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்க வரும் மாணவர்/மாணவி மற்றும் அவருடன் வரும் ஒரு நபருக்கு வழக்கம்போல் 50 சதவீத பஸ் கட்டணச் சலுகை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. கவுன்சலிங் ஜூலை 5ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கவுன்சலிங்கில் பங்கேற்க பல்வேறு இடங்களிலிருந்து வரவிருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டும் பஸ் கட்டணச் சலுகை அளிக்கப்படும்.

கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தின் நகலை பஸ் பயணத்தின் போது நடத்துநரிடம் காண்பித்து 50 சதவீத கட்டணச் சலுகையைப் பெறலாம்.

எம்.பி.பி.எஸ் பட்டியல்:

அதே போல எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு உரிய ரேண்டம் எண் சுகாதாரத் துறையின் இணையத் தளத்தில் இன்று இரவு வெளியிடப்படும்.

ஏஐசிடிஇ எச்சரிக்கை...

இதற்கிடையே வேறு கல்லூரியில் இடம் கிடைத்து மாறிச்செல்லும் மாணவர்களுக்கு கட்டணத்தையும், சான்றிதழ்களையும் உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஒரு கல்லூரியில் சேருவதற்காக கட்டணம் செலுத்திவிட்டு வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக வேறு கல்லூரியில் இடம் கிடைத்து செல்லும் மாணவர்களுக்கு அந்த கல்லூரி நிர்வாகம் முழு கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். பரிசீலனை கட்டணமாக வேண்டுமானால் அதிகப்பட்சமாக ரூ. 1000 வரை பிடித்தம் செய்து கொள்ளலாம். கல்வி சான்றிதழ்களை உடனடியாக ஒப்படைத்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்களை இழுத்தடிக்கக் கூடாது.

இவ்வாறு மாணவர்கள் மாறிச்செல்லும்போது ஏற்படும் காலி இடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதியும், அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை:

கூடுதல் இடங்கள் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிக்க நினைக்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் எச்சரித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், மருத்துவம் அல்லது பல் மருத்துவம் அல்லது நர்சிங் கல்லூரிகளில் அதிக இடங்களை ஒதுக்குவதற்காக விண்ணப்பிப்போர் சுகாதார அமைச்சகத்தை நேரிடையாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ அணுகவேண்டிய அவசியம் இல்லை. அந்த நிறுவனங்களின் கோரிக்கைகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு தானாகவே ஒப்புதல் கிடைத்துவிடும். பணம் கொடுத்து காரியத்தை முடிக்க நினைக்கும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X