For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ பலத்தை 50% அதிகரிக்க இலங்கை திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: தற்போது உள்ள 2 லட்சம் பேர் என்ற ராணுவத்தினரின் பலத்தை 3 லட்சமாக உயர்த்த இலங்கை ராணுவமும், அரசும் திட்டமிட்டுள்ளன.

இலங்கைக்கு பெரும் சவாலாக கடந்த 30 ஆண்டுகளாக விளங்கி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் செயல்பாடுகளை ஆயுத ரீதியாக இலங்கை படைகள் ஒடுக்கி ஒரு மாதம் ஓடி விட்டது.

போரையொட்டி வடக்கு கிழக்கில் குவித்த படைகளை இன்னும் திரும்பப் பெறாமல் அப்படியே வைத்துள்ளது இலங்கை அரசு. ஆங்காங்கு சில படைகள் மட்டும் பாசறைகளுக்குத் திரும்பியுள்ளன.

இந்த நிலையில் ராணுவ பலத்தை கிடுகிடுவென அதிகரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. தற்போது 2 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்த ராணுவம் திட்டமிட்டுள்ளதாம்.

ராணுவத்தின் இந்தத் திட்டத்திங்கு சிங்களர்களிடையே ஆதரவு காணப்படுகிறது.

இதுகுறித்து விடுதலைப் புலிகளுடான போரின்போது படுகாயமடைந்து இப்போது நடக்க முடியாமல் முடமாகியுள்ள சந்தனா என்பவர் கூறுகையில், விடுதலைப் புலிகளிடம் தற்போது தலைவர் என்று யாரும் இல்லை.

மிகச் சிறிய அளவிலான விடுதலைப் புலிகள் தொண்டர்களே எஞ்சியுள்ளனர். அவர்கள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளது. பெருமைக்காகவாவது அவர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

எனவே ராணுவம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் பலத்தையும் பெருக்க வேண்டியது அவசியம் என்கிறார் சந்தனா.

இதற்கிடையே, ராணுவ வீரர்களின் பலத்தைப் பெருக்குவதோடு நில்லாமல், வடக்கு கிழக்கில் ராணுவத் தலைமயகங்களை உருவாக்கவும் ராணுவம் மும்முரமாக உள்ளதாம்.

இதன் மூலம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ராணுவம் திட்டமிட்டுள்ளதாம்.

மேலும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்கள் குறித்து ராணுவத்தினரின் எண்ணம் இன்னும் மாறவில்லையாம். தற்போது அவர்கள் அகதிகளாக இருந்தாலும் கூட மனதளவில் இன்னும் புலிகளின் நினைவுடன்தான் இருக்கிறார்கள் என்கிறார்கள் ராணுவத்தினர்.

எனவே வடக்கில் கண்டிப்பாக அதிக அளவிலான ராணுவ முகாம்கள் அமைய வேண்டியது அவசியம் என ராணுவம் கூறுகிறது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், வடக்கில் மேலும் சில ராணுவ படைத் தளங்களை நிறுவவுள்ளோம்.

தற்போது முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரு படைப் பிரிவு தலைமையகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் படைப் பிரிவு தலைமையகங்கள் ஏற்படுத்தப்படும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவித ஆயுதப் போராட்டமும் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றார்.

ராணுவத்தின் இந்த திட்டத்திற்கு தமிழ் எம்.பிக்களிடையே கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது.

தமிழ் எம்.பியான மனோ கணேசன் கூறுகையில், ராணுவத்தின் திட்டம் அனைத்துத் தமிழர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இதன் மூலம் அரசியல் ரீதியிலான தீர்வு என்பதை விட ராணுவ ரீதியிலான தீர்வுக்கே இன்னும் இலங்கை திட்டமிடுகிறதோ என்ற அச்சம் எழுகிறது.

ராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டு போவது என்றால் என்ன அர்த்தம்?. இது தமிழர்களுக்கு மோசமான செய்தி. தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஜனநாயகத்தை விரும்பும் சக்திகளுக்கும் இது கெட்ட செய்தியாகும்.

சமத்துவம், மரியாதை, கெளரவம், சுய உரிமை உள்ளிட்டவைதான் ஆயுதப் போராட்டத்திற்கே அடிப்படையாக அமைந்தது. தற்போது அந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் மேலும் மேலும் ஆயுத பலத்தை மட்டுமே நம்ப இலங்கை அரசு முடிவு செய்தால் அது நிச்சயம் பிரச்சினைக்கு உரிய தீர்வாக அமையாது என்கிறார் கணேசன்.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று ராணுவம் கூறி விட்ட போதிலும், இலங்கை அரசு அறிவித்து விட்டபோதிலும் கூட ராணுவத்தின் பிடியிலிருந்து நாடு இன்னும் முழுமையாக விடுபடாமல்தான் உள்ளது. கிட்டத்தட்ட ராணுவ ஆட்சி போலத்தான் இலங்கை காணப்படுகிறது.

கொழும்பில் ராணுவம் ஏராளமான சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. பல முக்கிய இடங்களில் புகைப்படம் எடுக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X