For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக ஊராட்சி தலைவர்களுக்கு கம்ப்யூட்டர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கும், 385 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்கென கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

துணை முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் தனது உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு நேற்று பதிலளித்தார். அவரது பதிலுரையைக் கேட்க முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தொடர்ந்து அமர்ந்திருந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக பேரவை நடவடிக்கைகளில் அதிக நேரம் ஈடுபடுவதை முதல்வர் கருணாநிதி தவிர்த்து வருகிறார். தினமும் காலையில் கேள்வி நேரத்திலும் பிறகு சிறிது நேரமும் மட்டுமே அவை நடவடிக்கையில் பங்கேற்று வருகிறார்.

ஆனால், உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு ஸ்டாலின் பதில் அளித்ததால், அதைக் கேட்க நெடு நேரம் அமர்ந்திருந்தார்.

ஸ்டாலினின் 1 மணி நேர பேச்சை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

ஸ்டாலின் பேசுகையில், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் ஒருவன் எவ்வாறு தன் பெற்றோர் மற்றும் சுற்றத்தாரிடம், மதிப்பெண்ணைக் காட்டி மகிழ்ச்சியடைவானோ, அதே மகிழ்ச்சியான மன நிலையில் இப்போது நான் உள்ளேன்.

கடந்த 3 ஆண்டுகளில் என் துறையின் சார்பில் வெளியான அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. 2006-2007ல் 23 அறிவிப்புகள் வெளியானதில் 22 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

2007-2008ல் 24 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில் அதில் 22 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

2008-2009ல் 17 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதில் 14 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த துறையில் 64 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 58 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மீதம் 6 அறிவிப்புகள் மட்டுமே செயல்படுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு சொன்னதையெல்லாம், செய்யும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என்றார்.

இந்த ஆண்டு 48 அறிவிப்புகள்:

பின்னர் இந்த ஆண்டுக்கு தனது துறை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானவை:

2010-11ம் ஆண்டில் மேலும் 50,000 சுய உதவிக் குழுக்களும் உருவாக்கப்படும். சுய உதவிக் குழுக்கள் எளிதில் வங்கிக் கடன் பெற, ஊராட்சி அளவிலான 1,000 கூட்டமைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்படும். சில விடுபட்டுப் போன குழுக்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் சுமார் 70,000 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுடன் கூடிய சுழல் நிதி வழங்கப்படும்.

இந்தியாவில் தமிழகம்தான் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. 2008-09ம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ.1,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2009-10ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.1,963 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச பட்ச ஊதியம் ரூ.80 தொகையை ரூ.100 ஆக உயர்த்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேரடியாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு குறைகளை கொண்டு செல்வதற்காக மாநிலம் தழுவிய இலவச ஹெல்ப்லைன் சேவை ஏற்படுத்தப்படும்.

ரூ.1,325 கோடி செலவில் 5,114 கி.மீ ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் தார் சாலைகள் அமைக்கப்படும்.

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 63,000 புதிய தொகுப்பு வீடுகள் இலவசமாக கட்டித் தரப்பட்டன. 2009-10ம் நிதியாண்டில் ரூ.390 கோடி செலவில் 1.35 லட்சம் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும்.

2,511 கிராம ஊராட்சிகளில் ரூ.507 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

2009-10ம் ஆண்டில் மேலும் 30 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.75 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊராட்சிகளில் உள்ள 5 ஆயிரம் பள்ளிகளிலும், பேரூராட்சி மற்றும் 3ம் நிலை நகராட்சிப் பகுதிகளில் உள்ள 500 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும் கட்டிடம் சீரமைக்கும் பணிகள் ரூ.85 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் தெரு விளக்கு வசதி செய்ய 50,000 புதிய தெருவிளக்குகள் பொறுத்த ரூ.50 கோடி செலவிடப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கும், 385 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்கென இந்த ஆண்டில் ரூ.1.83 கோடி செலவில் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X