For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டர்கள் போராட்டம்..வேறு அரசு இருந்திருந்தால்..!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பயிற்சி மருத்துவர்கள் ரத்ததானம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சொன்னார்கள். எங்களது அரசு மாதிரி பயந்தாங்கொள்ளி அரசாக இல்லாமல் வேறு அரசாக இருந்திருந்தால் அது அவர்களுக்கே ஆபத்தாக போயிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து நீங்கள் ரத்தம் கொடுங்கள் என்று உடம்பில் ரத்தம் இல்லாமல் செய்து விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவாரே அரசு மருத்துவமனைகளில் பயிற்சி டாக்டர்களாகப் பணியாற்றும் மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் உதவித் தொகையை அதிகரிக்கக் கோரி கடந்த 8 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அவர்களது உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தியது. ஆனாலும் அந்த உயர்வு போதாது என்று கோரி போராட்டம் நடத்தி வரும் பயிற்சி டாக்டர்கள் நேற்று போராட்டத்தின் ஒரு பகுதியாக ரத்ததானம் செய்தனர்.

இன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே கறுப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இன்றும் பல டாக்டர்கள் ரத்த தானம் செய்தனர்.

இந்தப் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேச்சு நடத்தத் தயார்-முதல்வர்:

இந் நிலையில் இன்று சட்டசபையில் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் குறித்து எதிர்க் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,

பயிற்சி மருத்துவர்கள் மருத்துவத்தில் பயிற்சி பெறுகிறார்களா? அல்லது போராட்டத்திற்கு பயிற்சி பெறுகிறார்களா? என்பது தெரியவில்லை. போராட்டம் நடத்துவதற்கு என்று ஒரு முறை உண்டு. ஒரு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துபவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். முதலில் கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பின் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகே அடையாளமாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தலாம். இதற்கெல்லாம் ஒன்றும் நடைபெறாவிட்டால் போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.

ஆனால் இதை எதையுமே செய்யாமல் இந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை நீங்கள் எல்லாம் ஆதரிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த பயிற்சி மருத்துவர்கள் யாரும் இதுவரை என்னையோ, சம்பந்தப்பட்ட அமைச்சரையோ சந்தித்து தங்கள் கோரிக்கையை சொல்லவில்லை. போராட ஆரம்பித்து விட்டு கோரிக்கையை சொல்கிறார்கள். இது தலைகீழாக உள்ளது.

மற்ற மாநிலங்களில் பயிற்சி மருத்துவர்களுக்கு அதிக உதவித் தொகை வழங்கப்படுவதாக சில உறுப்பினர்கள் கூறினார்கள். மற்ற மாநிலங்களில் பயிற்சி மருத்துவர்கள் என்று தனியாக யாரையும் கருதுவதில்லை. அவர்களை மருத்துவர்களாகத்தான் கருதி ஊதியம் வழங்கப்படுகிறது.

மேலும் அங்கெல்லாம் பயிற்சி மருத்துவர்கள் இந்த அளவுக்கு அதிகமாக இல்லை. இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு காட்டும் எதிர்க்கட்சிகள் மற்ற விஷயங்களில் நாங்கள் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது ஏற்றுக் கொள்வீர்களா?.

நீங்கள் மாணவர்களிடம் கேட்க வேண்டியது முதலமைச்சரை சந்தித்தீர்களா? அமைச்சரை சந்தித்தீர்களா? குறைந்தது ஒரு அறிவிப்பாவது வெளியிட்டீர்களா? அரசு அறிவித்த உதவித் தொகை போதாது என்று அறிவிப்பு கொடுத்தீர்களா? இதை நீங்கள் கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது.

அவர்கள் யாரையும் அணுகவில்லை என்பதுதான் உண்மை. சட்டசபை நடக்கிறது. பார்த்துக் கொள்ளலாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு விட்டார்கள். இது நல்லதல்ல. இருந்தாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களை நாங்கள் அலட்சியப்படுத்தி விட மாட்டோம். அதைப் பரிசீலித்து அவர்களை எப்படி திருப்தியடைய செய்ய முடியுமோ அந்தப் பணியில் ஈடுபடுவோம்.

இங்கே பேசிய உறுப்பினர்கள் மருத்துவர்கள் ரத்ததானம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சொன்னார்கள். எங்களது அரசு மாதிரி பயந்தாங்கொள்ளி அரசாக இல்லாமல் வேறு அரசாக இருந்திருந்தால் அது அவர்களுக்கே ஆபத்தாக போயிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து நீங்கள் ரத்தம் கொடுங்கள் என்று உடம்பில் ரத்தம் இல்லாமல் செய்து விடுவார்கள்.

எனவே இந்த விஷயத்தில் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களுடன் அமைச்சர் பேசுவார். அவர்கள் விரும்பினால் பேசுவார். நீங்கள் அனுப்பி வைத்தால் பேசுவார். இந்த போராட்டம் நீடிக்க வேண்டும் என்று உங்களில் யாராவது விரும்பினால் அதை விடுத்து அரசும், மருத்துவர்களும் நாட்டுக்கு பயன்பட உதவுங்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X