For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணை: ஆந்திராவை மத்திய அரசு தடுக்க வேண்டும்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க் கட்சியினர் இந்தப் பிரச்சனையை எழுப்பினர். அப்போது நடந்த விவாதம்:

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): ஓராண்டுக்கு முன்பு குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவிருப்பதாக தகவல் வந்து அது அவையில் எழுப்பப்பட்டது.

ரூ.250 கோடியில் தடுப்பணைக்கு திட்டம் போட்டு ஆந்திரா அரசாணை வெளியிட்டுள்ளது. இதை அரசிடம் எடுத்துக் கூறியபோது ஆந்திர அரசின் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆந்திர அரசு 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டும் பணிகளை மேற்கொண்டு, அது புகைப்படத்துடன் செய்தியாக வெளிவந்துள்ளது. அண்டை மாநில நதி நீர் பிரச்சனை விவகாரங்களில் இந்த அரசின் மெத்தனபோக்குக்கு பாலாறு ஒரு உதாரணம்.

இந்த அணையை கட்ட மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியை ஆந்திர அரசு பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந் நிலையில் ஆந்திர அரசுக்கு இந்தத் துணிச்சல் எப்படி வந்தது?

ஞானசேகரன் (காங்கிரஸ்): பாலாறுதான் வேலூர் மாவட்ட மக்களின் ஒரே ஜீவநாடியாகும். ஏற்கனவே 30 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு 31வது பெரிய அணையாக இதைக் கட்ட விருக்கிறது. இதைக் கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராது. இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு என்ன நிலையில் இருக்கிறது?. உச்ச நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவாவது இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு முதல்வர் வேலூர் மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்ப்பாரா?

ஜி.கே.மணி (பாமக): பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுமானால் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்ட மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
முதல்வர் கருணாநிதி: பாலாறு பல மாநிலங்களின் வழியாக ஓடும் நதியாகும். 1892ம் ஆண்டு பன் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் ஒப்பந்தத்தில் கீழ் மாநிலங்களுக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் மேல் மாநிலங்கள் அதைld தடுக்கவோ, திருப்பவோ கூடாது என்றும், நீர்த்தேக்கம் அமைக்க வேண்டுமானால் கீழ் மாநிலங்களின் ஒப்புதலோடுதான் அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு தமிழக அரசின் முன் அனுமதி பெறாமல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக வந்த செய்திகளை அடுத்து அம்மாநில அரசுடன் தொடர்பு கொண்டபோது அங்கிருந்து பதில் வராததால் 10.02.2006ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில் மத்திய நீர்வளத் துறை, சுற்றுச்சூழல் துறைக்கு 2007ம் ஆண்டு மே மாதம் கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் இடையே ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 7.1.2008ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு மாநில அரசுகளும் மத்திய அரசின் முன்னிலையில் தீர்வு காணலாம் என உத்தரவிடப்பட்டது.

மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 11.03.2008 அன்று ஒரு கூட்டத்தை கூட்டியது.

அந்தக் கூட்டத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரையில் ஆந்திர அரசு அணை கட்டும் விஷயத்தை மேற்கொள்ள கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப விவரங்களை இரு மாநில அதிகாரிகளும் வழங்கி கூட்டு ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் 21.06.2009ல் ஆந்திர அரசுக்கு அனுமதி அளித்திருப்பதாக வந்த செய்திகளை அடுத்து அவரிடம் தொடர்பு கொண்டபோது இப்படியொரு பேட்டியை நான் கொடுக்கவே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

24.06.2009 அன்று தமிழ்நாடு, ஆந்திர நீர்வளத்துறை கூட்டம் நடைபெற்றது. அதிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாத நிலையிலும் அமைக்கப்பட்ட குழு எந்தவிதமான இறுதி முடிவையும் எடுக்காத நிலையிலும் அணை கட்ட இயலாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி இது போன்ற நடவடிக்கைகள் தொடருமானால் நாம் சட்டப்படிதான் அதை எதிர்கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் தற்போது வந்துள்ள செய்தி, போட்டோ ஆதாரங்களுடன் நம்பக் கூடியதாகவே இருக்கிறது. இது உள்ளபடியே நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்காத நிலையில் இந்தப் பணிகள் தொடரப்படுமானால் அது ஏமாற்று வேலையாகவே கருதப்படும். ஆந்திர அரசு இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படியே அதில் ஈடுபட்டால் இரு மாநிலங்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படவும், ஏற்பட்ட உறவு உறுதிபடவும் இயலாமல் போகும். இது ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கையில்லாத செயல் என்றே கருதப்படும்.

எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தக்க முடிவு காண வேண்டும். மத்திய அரசு இந்த பிரச்சனையில் வாளா இருக்காமல் வாளாக இருந்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X