For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகைக் கடைக்காரர் கொலையாளி சிக்கினான்-தலையை தேடும் போலீஸ்!

By Staff
Google Oneindia Tamil News

Suresh Kumar and Murderer Nemichand
சென்னை: நகை வியாபாரி சுரேஷ் குமாரி கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். ரூ. 9 லட்சம் கடனை அடைப்பதற்காக சுரேஷ்குமாரிடமிருந்த 2 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு அவரை அடித்துக் கொன்று உடலை கண்டந்துண்டமாக வெட்டி சென்னையின் பல பகுதிகளிலும் வீசியதாக அவன் கூறியுள்ளான்.

கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42) நகைகளை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். டிராவல்ஸ் நிறுவனமும் நடத்தி வந்தார்.

கடந்த மாதம் 6ம் தேதி இவர் மாயமானார். மறுநாள் காலை சூளை பெரியமேடு அருகே பாலித்தீன் பையில் அவரது இரண்டு கைகளும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையொட்டிய வால்டாக்ஸ் சாலையில் அவரது இரு கால்களும் கிடந்தன. பூக்கடை என்எஸ்சி போஸ் ரோடு அருகே உடல் பகுதி கிடந்தது.

ஆனால், தலை மட்டும் சிக்கில்லை. இந் நிலையில் கடந்த 19ம் தேதி தம்புசெட்டி தெருவில் குப்பைமேட்டில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு கிடந்தது. இந்த மண்டை ஓடு குறுக்கு வாட்டில் அறுக்கப்பட்டிருந்தது. இது சுரேஷ் குமாரின் மண்டை ஓடு அல்ல என்று தெரியவந்தது.

இந்தக் கொலை வழக்கு சென்னை போலீசாரை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. சுரேஷ் குமாரிடம் தொழில்ரீதியாக தொடர்பு வைத்திருந்த நகைக் கடைகள், நகைப் பட்டறைகள், கடை அதிபர்கள் என பல இடங்களிலும் பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சுரேஷ்குமாரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆராய்ந்தபோது அவர் மாயாமாவதற்கு முன் கடைசியாக வந்த அழைப்புகளில் நேமிசந்த் செளத்ரி என்பவரிடமிருந்து வந்த அழைப்பும் ஒன்று என்று தெரியவந்தது.

இதையடுத்து நேமிசந்த் செளத்ரி குறித்து போலீசார் விசாரித்தபோது அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.

அவரிடம் விசாரிக்க போலீசார் சென்றபோது அவர் ராஜஸ்தான் போய்விட்டது தெரியவந்தது. இதனால் அவன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இந் நிலையில் தன்னை போலீசார் சந்தேகிக்கவில்லை என்று நினைத்து சென்னை திரும்பிய நேமிசந்தின் நடவடிக்கைளை ரகசியமாகக் கண்காணித்த போலீசார் அவனைக் கைது செய்து தங்களது 'ஸ்டைலில்' விசாரிக்கவே சுரேஷ்குமாரைக் கொன்று உடலை வெட்டி நகரின் பல இடங்களிலும் வீசியதை ஒப்புக் கொண்டான்.

நேமிசந்த் கொடுத்துள்ள வாக்குமூல விவரம்:

பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் நான் வேலை பார்த்து வருகிறேன். சென்னையில் நகைகளை வாங்கி-விற்கும் கமிஷன் புரோக்கர்கள் எல்லாரையும் எனக்குத் தெரியும். அந்த வகையில் சுரேஷ்குமாரும் எனக்கு பழக்கமானார்.

சுரேஷ்குமார் எப்போது வந்தாலும் 2 கிலோ, 3 கிலோ நகைகளை விற்பதற்கு எடுத்து வருவார். சுரேஷ்குமாரை தீர்த்து கட்டி விட்டு, அவர் வைத்திருக்கும் நகைகளை அபகரித்தால் மிக எளிதாக என் 9 லட்ச ரூபாய் கடனை அடைத்து விடலாம் என்று தோன்றியது.

யாருக்குமே சந்தேகம் வராதபடி கொலைத் திட்டம் போட்டேன்.
ஒரு மாதத்தக்கு முன்பே, எனது நகைக்கடை முதலாளியிடம் ராஜஸ்தான் போய் வர 15 நாள் லீவு எடுப்பேன் என்று சொன்னேன். நான் வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி செல்வதுண்டு என்பதால் முதலாளியும் சரி என்று ஒத்துக்கொண்டார்.

நான் கொலைத் திட்டத்துடன் இருந்த சமயத்தில், கடந்த மாதம் 4ம் தேதி திருச்சூரைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி சுனீல்குமார் 5 கிலோ நகைகளுடன் சென்னை வந்தார். அவரும் அவரது உதவியாளர் கோபி என்பவரும் சுரேஷ்குமார் மூலம் நகைகளை விற்றனர். 5 கிலோ நகையில் 3 கிலோ நகைகளைத்தான் அவர்களால் விற்க முடிந்தது.

மறுநாள் சுனீல்குமார், கோபி இருவரும் கேரளா திரும்ப முடிவு செய்தனர். தங்கள் கைவசம் இருந்த 2 கிலோ தங்க நகைகளை சுரேஷ்குமாரிடம் விற்கச் சொல்லி கொடுத்துவிட்டு சென்று விட்டனர்.

5ம் தேதி மாலை அந்த 2 கிலோ நகைகளுடன் சுரேஷ்குமார் என்.எஸ்.சி. போஸ் சாலையில் நான் வேலை பார்க்கும் நகைக்கடைக்கு வந்தார். அவர் சொன்ன விலைக்கு நகைகளை வாங்க எனது முதலாளி சம்மதிக்கவில்லை. இதனால் 2 கிலோ நகைகளுடன் சுரேஷ்குமார் திரும்பிச் சென்றுவிட்டார்.

இதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். சுரேஷ்குமார் வைத்திருக்கும் 2 கிலோ நகைகளை அபகரிக்க முடிவு செய்தேன்.

அன்றிரவே என் மனைவி மற்றும் குழந்தைகளை அவசர, அவசரமாக விமானத்தில் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தேன். வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன்.

6ம் தேதி காலை சுரேஷ்குமார் செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். கேரள வியாபாரி கொடுத்த 2 கிலோ நகைகளை நான் வேறு ஒரு நகைக்கடையில் விற்றுத் தருகிறேன். லாபத்தில் ஒரு சதவீதத்தை எனக்கு பங்காக தந்து விட வேண்டும் என்றேன்.

காலை 10 மணிக்கு பெருமாள் கோவில் கார்டனில் உள்ள என் வீட்டுக்கு அவர் வந்தார். அப்போது சுரேஷ்குமாருக்கு செல்போனில் அழைப்பு வந்தது.

சுவரில் சாய்ந்து நின்று சுரேஷ்குமார் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தயாராக வைத்திருந்த இரும்புக் கம்பியால் சுரேஷ்குமார் பின்பக்க தலையில் ஓங்கி அடித்தேன். இதில் தலை உடைந்துவிட்டது. அலறியடிபடி கீழே சாய்ந்த அவர் அங்கேயே இறந்துவிட்டார்.

இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு வேலைக்குப் போய்விட்டேன். இரவு 9 மணிக்கு திரும்பி வந்தேன். சுரேஷ்குமார் வைத்திருந்த 2 கிலோ நகைகளை எடுத்து ஒரு இடத்தில் பத்திரப்படுத்தினேன்.

உடலை துண்டு, துண்டாக வெட்டி திசைக்கு ஒன்றாக வீசிவிட்டால், செத்தது யார் என்றே தெரியாமல் போய் விடும் என்று நினைத்தேன்.

வீட்டில் இருந்த கத்தியால் சுரேஷ்குமார் தலையை முதலில் வெட்டி தனியாக துண்டித்தேன். தலையை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் புறப்பட்டேன். பல இடங்களுக்கு சென்றேன். மக்கள் நடமாட்டம் இருந்ததால் மகாகவி பாரதிநகர் வரை சென்றுவிட்டேன். அங்கு போலீஸ் நிலையம் அருகே இருந்த காட்டுப் பகுதியில் தலையை வீசினேன்.

வீடு திரும்பி உடலை துண்டு, துண்டாக வெட்ட முயன்றேன். சாதாரண கத்தியால் வெட்ட முடியவில்லை. எனவே இறைச்சிக் கடைகளில் ஆடு வெட்ட பயன்படுத்தும் கத்தியை வாங்கி வந்தேன்.

நள்ளிரவு 12 மணிக்கு சுரேஷ்குமார் கைகளை தனித் தனியாக வெட்டினேன். கால்களையும் தனித்தனியாக துண்டித்தேன். உடலையும் இரண்டாக வெட்டிப் பிளந்தேன்.

அவற்றை பாலிதீன் கவர்களில் போட்டு முதலில் கை இருந்த பாலிதீன் கவரை ஆக்டிவா ஸ்கூட்டரில் காலுக்கு அடியில் முன் பக்கமாக வைத்து எடுத்துச் சென்றேன். நடராஜா தியேட்டர் அருகில் ஸ்கூட்டரில் சென்றபடியே அதை தள்ளிவிட்டேன்.

வீட்டுக்கு வந்து மற்ற 2 கவர்களையும் எடுத்துச் சென்று யானைக்கவுனி பகுதியில் வீசினேன். வீட்டை தண்ணீர் விட்டுக் கழுவினேன். விடிய, விடிய தனி ஆளாக நின்று நானே எல்லாவற்றையும் செய்து முடித்தேன்.

சுரேஷ்குமாரை துண்டு, துண்டாக வெட்டியதால் பயம் காரணமாக எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவமனைக்குச் சென்றபோது அட்மிட் செய்துவிட்டனர். அன்று முழுக்க மருத்துவமனையில்தான் இருந்தேன். குளுக்கோஸ் ஏற்றினார்கள். அதன் பிறகு கொஞ்சம் தெம்பாக இருந்தது. மறுநாள் நகைக்கடைக்கு சென்று ராஜஸ்தான் சென்று வருவதாக சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

சுரேஷ்குமாரிடம் கொள்ளையடித்த 2 கிலோ நகைகளை வீட்டுக்குள்ளேயே பத்திரப்படுத்தி வைத்தேன். பிறகு விமானத்தில் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்று விட்டேன்.

போலீசார் விசாரணை நடத்தியபோது நான் வேலை பார்த்த கடையிலும் விசாரித்துள்ளனர். என் மீதும் சந்தேகப்பட்டு கேட்டுள்ளனர். ஆனால் நான் ஆண்டுக்கு ஒரு தடவை செல்லும் வழக்கமான விடுமுறையில் ராஜஸ்தானுக்கு சென்றிருப்பதாக கடையில் உள்ளவர்கள் கூறி விட்டதால், என் மீதான சந்தேகப் பார்வையை போலீசார் விட்டு விட்டதாக நினைத்தேன்.

15 நாட்கள் கழித்து ராஜஸ்தானில் இருந்து சென்னை திரும்பி வந்தேன். எதுவும் தெரியாதது போல வழக்கமான பணிகளில் ஈடுபட்டேன். நகைகளை சில மாதங்கள் கழித்து விற்றுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், கடந்த ஒரு வாரமாக பெருமாள் கோவில் கார்டன் பகுதியில் போலீசார் தீவிரமாக விசாரிப்பதை பார்த்தேன். என்னை நெருங்கி விட்டார்களோ என்று பயந்தேன். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, என் வீட்டுக்குள் வைத்திருந்த 2 கிலோ நகைகளை, பக்கத்து தெருவில் உள்ள என் உறவுக்கார பெண்மணியிடம் கொடுத்தேன்.

ஆனாலும் போலீசார் எப்படியோ என்னைப் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளான் நேமிசந்த்.

அவனிடமிருந்து 2 கிலோவுக்கும் அதிகமான நகைகள் கைப்பற்பபட்டுள்ளன.

ஆனால், சுரேஷ்குமாரின் தலை இன்னும் கிடைக்கவில்லை.

தம்புசெட்டி தெருவில் குப்பைமேட்டில் பிளாஸ்டிக் பையில் கிடந்தது சுரேஷ்குமாரின் தலை அல்ல என்று கூறியுள்ள நேமிசந்த் அதை சென்னையின் எம்.கே.பி. நகர் பகுதியில் வீசியதாகக் கூறியுள்ளான். இதையடுத்து அந்தப் பகுதியில் தலையை போலீசார் இரவு பகலாக தேடி வருகின்றனர்.

நேமிசந்தின் மனைவியையும் நகையை மறைத்து வைத்த உறவுக்கார பெண்ணையும் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X