For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஆபத்பாந்தவனாகிய' பிரணாப் முகர்ஜி!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை விட அனுபவம் வாய்ந்த பிரணாப் முகர்ஜியையே அதிகம் முன்னிறுத்தி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

பாகிஸ்தான் விவகாரம் மட்டுமல்லாமல், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பிரணாபின் ஆலோசனையைக் கேட்கத் தவறுவதில்லை காங்கிரஸ் மேலிடமும், பிரதமர் மன்மோகன் சிங்கும்.

எகிப்தில் நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமருடன் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்குப் பின்னர் இந்திய எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

பலுசிஸ்தான் விவகாரத்தை கூட்டறிக்கையில் இடம் பெறச் செய்தது, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதம் குறித்து கூட்டறிக்கையில் இடம் பெறாதது ஆகியவை தொடர்பாக பிரதமரை, எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றன.

இந்த விஷயத்தில் சோனியா காந்திக்கும் கூட பிரதமர் மேல் அதிருப்தி ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இப்படி அடுக்கடுக்காக எழுந்து வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் திணறும் பிரதமர் இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை விட அனுபவம் வாய்ந்த பிரணாப் முகர்ஜியை அதிகம் பயன்படுத்தி வருகிறார்.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான விவாதங்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பை பிரணாபே ஏற்க வேண்டும் என்றும் அவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்.பிக்களுக்கு வைத்த விருந்து நிகழ்ச்சியின்போது கேட்டுக் கொண்டாராம்.

பிரணாபுக்கு இது வியப்பைக் கொடுத்ததாம். இருந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவர் அமைதியாக இருந்தாராம்.

கடந்த புதன்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தில் பாதிக்கும் மேல் பிரணாபின் ஆலோசனைப்படி சேர்க்கப்பட்ட அம்சங்களாகும். பிரதமரே தனது பேச்சு குறித்து பிரணாபிடம் ஆலோசனை நடத்தி விட்டுத்தான் அதை இறுதி செய்தாராம்.

ஆனால் அடுத்த நாள் தான் பேசுவதற்குப் பதிலாக பிரணாபையே பேச விட்டார் மன்மோகன். அதற்குக் காரணம், எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கொந்தளித்தால் தான் சமாளிக்க முடியாமல் போய் சிக்கலாகி விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கையால் என்று கூறப்படுகிறது.

அன்றைய தினம் சோனியா காந்தியின் பேச்சு கூட நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை. அதேசமயம், பிரணாபின் பேச்சு எதிர்க்கட்சியினரின் புகார்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்ததால் காங்கிரஸ் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

தற்போது பிரணாப் வெறும் நிதியமைச்சராக மட்டும் இல்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக மாறியுள்ளார்.

பெரும் பிரச்சினை எழும்போதெல்லாம் அதை பிரணாபை விட்டே சமாளிக்கும் நிலையில் உள்ளது காங்கிரஸ்.
இதற்காகத்தான் அமைச்சரவையில், பிரதமருக்கு அடுத்த இடத்தில் நம்பர் டூவாக பிரணாபை அமர வைத்துள்ளது காங்கிரஸ்.

தோழமைக் கட்சிகளுடனான பிரச்சினை சமாளிக்க மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும் பிரணாப்தான் அதிகம் பயன்படுகிறார்.

மேலும், பிரணாபின் அனுபவம் இப்போது அமைச்சரவையில் யாருக்கும் கிடையாது. நிதித்துறை முதல் பாதுகாப்புத் துறை வரை, வர்த்தகம், வெளியுறவு என அனைத்து முக்கியத் துறைகளையும் பார்த்து விட்ட பழுத்த அனுபவசாலி பிரணாப். பிரதமர் பதவியில் மட்டுமே இன்னும் அவர் அமரவில்ல (இந்திரா மறைவுக்குப் பின்னர் அதற்கு அவர் முயற்சித்தார், ஆனால் பலன் கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே).

கூட்டணியில் எந்த நட்டு, எந்த போல்ட் பழுதாகியுள்ளது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பவர் பிரணாப்.
கிட்டத்தட்ட ஒரு தேர்ந்த மெக்கானிக் போல திகழ்கிறார் பிரணாப். கூட்டணியிலோ அல்லது அரசிலோ ஏதாவது பிரச்சினை என்றால் பிரணாபை இறக்கி விட்டால் போதும், எதையாவது செய்து சரிப்படுத்தி விடும் திறமை சாலியாக இருக்கிறார் பிரணாப்.

தற்போதைய அரசில் அவர் கிட்டத்தட்ட பல்வேறு துறைகள் தொடர்பான 36 அமைச்சரவைக் குழுக்களுக்குத் தலைவராக இருக்கிறார். இதுவரை யாரும் இவ்வளவு அதிக குழுக்களுக்குத் தலைமை தாங்கியதில்லை. அவரது நிர்வாகத் திறமை காரணமாகவே இத்தனை பொறுப்புகளை தூக்கி அவர் தலை மேல் வைத்துள்ளது காங்கிரஸ். அதில் முக்கியமான குழு 3ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான குழு.

இது போதாதென்று அம்பானி சகோதரர்களுக்கும், மத்திய பெட்ரோலியத்துறைக்கும் இடையிலான காஸ் பிரச்சினையை சமாளிக்கும் பொறுப்பும் பிரணாபிடமே உள்ளது.

இதை விட முக்கியமாக மமதா பானர்ஜியை 'பார்த்துக்' கொள்ளும் பொறுப்பும் பிரணாபிடமே கொடுத்துள்ளது காங்கிரஸ்.

நிதியமைச்சராக இருந்தாலும் கூட வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் பிரணாபிடமிருந்து மத்திய அரசு முக்கிய ஆலோசனைகளைப் பெறத் தவறுவதில்லை.

பிரணாபின் முக்கியத்துவத்தை இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரைப் போடுவது என்ற பேச்சு தீவிரமாக இருந்த போது பிரணாபின் பெயரை காங்கிரஸ் தரப்பு முன்வைத்தது. ஆனால் அதை உடனடியாக நிராகரித்து விட்டார் சோனியா. பிரணாப் இருந்தால்தான் அரசையே நடத்த முடியும். அவரைப் போய் ஜனாதிபதியாக உட்கார வைத்து விட்டால் ஆட்சியை யார் பார்த்துக் கொள்வது என்று கூறினாராம் சோனியா.

அந்த அளவுக்கு இன்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மிக முக்கிய நபராக தவிர்க்க முடியாத நபராக விளங்குகிறார் பிரணாப் முகர்ஜி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X