For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுஎஸ்: இலங்கை பொருட்களை புறக்கணிக்கக் கோரி தமிழர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Tamils launch Boycott SL products protest infront of Manhattan GAP
நியூயார்க்: உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்களை நடத்தி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்துள்ள இலங்கையின் தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி நியூயார்க்கின், மன்ஹாட்டனில் உள்ள பிரபல ஜவுளிக் கடை முன்பு 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.

மன்ஹாட்டனில் உள்ள 34வது தெரு மற்றும் பிராட்வே சந்திப்பில் உள்ள பிரபல ஜிஏபி ஜவுளிக் கடை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்தடிமைகள் போல அடைத்து வைத்துள்ளது இலங்கை. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது.

சமீபத்திய வரலாற்றில், உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்து வருகின்றன. எனவே இதைக் கண்டித்து இலங்கைத் தயாரிப்பு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதை வலியுறுத்தும் தட்டிகளையும் அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.

மேலும் இலங்கையுடன் ஜவுளி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டாம். அப்படி செய்தால் ஜிஏபி நிறுவனம் இலங்கை இனப்படுகொலைக்கு துணை போவதாக அர்த்தம் என்றும் தமிழர்கள் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிவநாதன் கூறுகையில், நாங்கள் ஜிஏபி நிறுவனத்திற்கு ஜவுளி வாங்க வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. தாராளமாக இங்கு துணிகளை வாங்குங்கள். அதேசமயம், இலங்கையில் தயாரிக்கப்பட்ட துணிகளை மட்டும் வாங்காதீர்கள் என்றுதான் நாங்கள் கோருகிறோம்.

ஜவுளி வாங்க வந்த பல இளைஞர்களும், இங்கு விற்பனையாகும் துணிகள் மூலம் கிடைக்கும் பணம் இலங்கையில் தமிழர்களை அழிக்கும் ராணுவத்திற்கு போகிறது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர் என்றார்.

ஜிஏபி நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 3191 கடைகள் உள்ளன.

மகேஷ்வரன் என்பவர் கூறுகையில், சூடான், ஜிம்பாப்வே, மியான்மர் போல எண்ணை வளம், தாது வளம், காஸ் வளம் மிகுந்த நாடு அல்ல இலங்கை. ஏற்றுமதியைத்தான் அது முழுக்க முழுக்க தனது பொருளாதார வளர்ச்சிக்கு நம்பியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 206 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தது இலங்கை. இப்படிப்பட்ட ஏற்றுமதியை வைத்துத்தான் இலங்கை வாழ்ந்து வருகிறது.

இது நாள் வரை இலங்கை செய்யும் தவறுகளையெல்லாம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டிக்கும் என நாங்கள் தவறாக நம்பி விட்டோம். ஆனால் இப்போது பாடம் கற்று விட்டோம்.

மேற்கத்திய நாடுகளுடனான இலங்கையின் வர்த்தகத்தை ஆட்டிப் பார்க்க முடிவு செய்து விட்டோம். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் இதை சாதிக்க முடியும். இது புதிய ஆரம்பம்தான். இலங்கையின் தயாரிப்புகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்ற எங்களது போராட்டத்தை மேலும் வலுப்படுத்தவுள்ளோம்.

தமிழர்களுக்கு எதிராக தங்களது அரசு செய்து வரும் அக்கிரமங்களை கண்டும் காணாமலும் பல சிங்களர்கள் உள்ளனர். ஆனால் அவர்களது வேலைக்கு ஆபத்து வந்தால், நிச்சயம் அவர்கள் தமிழர்களின் நிலை குறித்து கவலைப்படுவார்கள். குறைந்தது திறந்தவெளி கொட்டடிகளில் அகதிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு விடிவு பிறக்கவாவது உதவுவார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X