ஊடுருவல்-4 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 4 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வீராவில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு படகு நின்றுக் கொண்டிருப்பதை பார்த்தனர்.
அதில் இலங்கை தேசிய கொடி காணப்பட்டதால் சந்தேகமடைந்த கடலோர காவல் படையினர் அந்த படகை சுற்றி வளைத்து அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இலங்கை காந்தன்குழி பகுதியை சேர்ந்த சுமித்ஜானகர், நிமல் மெர்லின், அவரது மகன் காயன் மற்றும் சரத் உபாலி என்பதும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததும் தெரிய வந்தது.
150 கிலோ மீனுடன் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அதே படகில் அவர்களை கடலோர காவல் படையினர் தூத்துக்குடி அழைத்து வந்து தெர்மல் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.