For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலையாளி ராஜன் பயன்படுத்தியது திருட்டுக் கார்- துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை: கூடுதல் டிஜிபி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை இரட்டைக் கொலை வழக்கில் சிக்கி இறந்த ராஜன் என்கிற சண்முகராஜன் பயன்படுத்திய கார் திருடப்பட்ட காராகும். அதேபோல அவரிடம் இருந்த துப்பாக்கிக்கு உரிய லைசென்ஸ் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது என்று சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சென்னை இரட்டைக் கொலை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணை குறித்து அர்ச்சனா ராமசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முதல்வரின் ஆணைக்கிணங்க சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் உண்மை நிலவரங்களை கண்டறியும்படி டி.ஜி.பி. கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கிணங்க நாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

முதல்கட்ட விசாரணையில் கொலை நடந்த வீட்டில் எங்கள் தனிப்படை போலீசார் நேரடியாக ஆய்வு செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் மகன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கார் டிரைவர் வீரசேகரனிடமும் விசாரணை நடந்துள்ளது. குண்டு காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் வசந்தியிடம் துணை சூப்பிரண்டு சுப்புலட்சுமி நேரடியாக சென்று விசாரித்துள்ளார்.

இதுவரை இந்த கொலை வழக்கில் 50 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணை தகவல்களையும் கேட்டறிந்துள்ளோம். முதலில் நடந்த ஆரம்பகட்ட விசாரணையில் கொலையாளி ஒருவர் மட்டுமே வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுதொடர்பாக இன்னும் விசாரணை நடக்கிறது.

நகை, பணத்துக்காகவே கொலை நடந்திருக்கலாம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதுவும் இன்னும் விசாரணை முடியவில்லை. நிலப்பிரச்சினை காரணமாகவும் இருக்கலாம். அதுவும் விசாரணை முடிந்த பிறகுதான் சொல்ல முடியும்.

கொலையாளி சண்முகராஜன் கொலை சம்பவம் நடந்த பனையூர் கிராம பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்போல சுற்றி திரிந்துள்ளார். அவரை அந்த பகுதியில் வசிக்கும் பலர் நேரில் பார்த்துள்ளனர். அவரது போட்டோவை பார்த்து பொதுமக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி சண்முகராஜன் பயன்படுத்திய கார் ஹூண்டாய் கார் தான். அது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த காரின் நம்பர் போலியானது என்பதும் உண்மைதான். அது ஒரு மோட்டார் சைக்கிளின் நம்பர் ஆகும்.

அந்த காரின் உண்மையான நம்பர் டிஎன்.09-ஏ.எப்.2808 என்பதாகும். அந்த கார் திருட்டுப்போன கார் என்று கண்டறியப்பட்டுள்ளது. காரின் உரிமையாளர் பெயர் ராஜா முகமது. அவர் சென்னை பாலவாக்கத்தில் வசிக்கிறார்.

கடந்த ஜுன் மாதம் 24-ந் தேதி அன்று இந்த கார் திருட்டு போய் உள்ளது. கார் திருட்டுபோனது பற்றி ராஜா முகமது நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த கார் கொலையாளி சண்முகராஜனிடம் எப்படி வந்தது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.

கொலையாளி சண்முகராஜனிடம் இருந்தும், அவரது வீட்டில் இருந்தும் இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுவும் உண்மைதான். அந்த துப்பாக்கிகள் இரண்டும் லைசென்சு இல்லாத துப்பாக்கிகள் என்பதும் உண்மைதான்.

அந்த துப்பாக்கிகள் எந்த ரகத்தை சேர்ந்தவை என்பது நிபுணர்களின் ஆய்வில் உள்ளது. நிபுணர்களின் ஆய்வு அறிக்கை வந்தபிறகுதான் அதுபற்றி சொல்ல முடியும். இந்த துப்பாக்கிகள் பீகாரில் வாங்கப்பட்டதா என்பது பற்றியெல்லாம் விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக பீகார் மாநிலத்துக்கு சென்று தனிப்படை போலீசார் இப்போது விசாரிக்கவில்லை. இது ஆரம்பக்கட்ட விசாரணை தான். இன்னும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகிறோம். கொலை நடந்த வீட்டில் தடயஅறிவியல் நிபுணர்களும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில், விசாரணை மிகவும் நியாயமாக நடக்கிறது. முழு உண்மையும் வெளிவரும். விசாரணை எப்போது முடியும் என்று காலக்கெடு எதுவும் சொல்ல முடியாது. எவ்வளவு சீக்கிரம் விசாரணையை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விசாரணை முடிக்கப்படும்.

ராஜன் மீது திருட்டு வழக்குகள் ...

கொலையாளி சண்முகராஜன் மீது ஏற்கனவே குமரன்நகர் போலீசிலும், செகரெட்டேரியேட் காலனி போலீசிலும் புகார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்.

செகரெட்டேரியேட் காலனியில் வசிக்கும் கீதா என்ற பெண்மணி, பத்திரிகைகளில் வந்த கொலையாளி சண்முகராஜனின் படத்தை பார்த்துவிட்டு நேற்று துணை சூப்பிரண்டு சுப்புலட்சுமியிடம் போனில் பேசியுள்ளார். சண்முகராஜன் ஏற்கனவே அவர் வீட்டில் புகுந்து திருடியதாகவும், இதுபற்றி செகரெட்டேரியேட் காலனி போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுபற்றியும் விசாரணை நடத்தப்படும்.

சண்முகராஜனும், கொலை செய்யப்பட்ட இளங்கோவனும் செல்போனில் யார், யாரிடம் பேசி உள்ளார்கள் என்பது பற்றிய தகவல்களையும் சேகரித்து வருகிறோம். இப்போது நான் கூறியுள்ள தகவல் யாவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விசாரணை முடிந்த பிறகுதான் இதில் உள்ள முழு உண்மையும் வெளிவரும்.

இந்த வழக்கு தொடர்பாக எந்த தகவல்கள் வந்தாலும் அதை நாங்கள் மறுக்கமாட்டோம். அந்த தகவல் உண்மை என்று விசாரணை நடத்துவோம். எனவே இந்த வழக்கு தொடர்பாக யார் எந்த தகவலையும் சொன்னாலும் நாங்கள் வரவேற்கிறோம்.

இந்த வழக்கு விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து தினமும் பத்திரிகைகளுக்கு தகவல் தரப்படும். பத்திரிகையாளர்கள் இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

அல்லது சி.பி.சி.ஐ.டி.யின் பத்திரிகை தொடர்பாளர் மூலம் வழக்கின் உண்மை விவரங்கள் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்படும். பத்திரிகையாளர்கள் இந்த வழக்கில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாங்களும் ஒத்துழைப்பு கொடுப்போம்.

தகவல் தெரிந்தவர்கள் சொல்லலாம்...

பத்திரிகையாளர்கள் இந்த வழக்கு தொடர்பாக கிடைக்கும் தகவல்களை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு சுப்புலட்சுமியிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 22502510, 22502500 என்ற டெலிபோன் எண்களில் பேசி சி.பி.சி.ஐ.டி. போலீசின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். அல்லது சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு சுப்புலட்சுமிக்கு 9841030795 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல்களை தெரிவிக்கலாம் என்றார் அர்ச்சனா ராமசுந்தரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X